Published : 10 Apr 2020 07:42 PM
Last Updated : 10 Apr 2020 07:42 PM

கரோனா: மருத்துவர்களின் மனக் குமுறல்- பேசப்பட வேண்டிய பிரச்சினைகள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மூன்றாவது வாரம் தொடங்கிவிட்ட நிலையில், தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனினும், உயிர் காக்கும் பணியில் இரவு பகல் பாராது கரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் பல்வேறு சிரமங்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்வதாகத் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

மருத்துவர்களின் அச்சம்
‘பிபிஇ கிட்’ எனப்படும் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்படவில்லை என்று பல மருத்துவர்கள் குமுறுகிறார்கள். உடல் முழுவதையும் மூடும் அங்கி, ‘என் -95’ முகக்கவசம், காப்புக் கண்ணாடி, கையுறை, ரப்பர் காலணி ஆகியவை இல்லாமல் பணிபுரிவதால், தங்களுக்கும் தொற்று ஏற்படலாம் எனும் அச்சத்துடனே மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது. இதனால் தாங்கள் நடத்தும் கிளினிக்குகளை தனியார் மருத்துவர்கள் பெரும்பாலானோர் மூடிவிட்டார்கள். பல கார்ப்பரேட் மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. திறந்திருக்கும் மருத்துவமனைகளிலும் பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை.

இந்நிலையில், ‘மூடியிருக்கும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று அரசு எச்சரித்திருக்கிறது.

மறுபுறம், அரசு மருத்துவமனைகளில் பிற சிகிச்சைகளுக்கும் குளறுபடிகள் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. “மருத்துவமனையில் எங்களை யாரும் தொடுவதுகூட இல்லை. தூரத்தில் இருந்தே மாத்திரைகளைத் தள்ளுகிறார்கள். காய்ச்சல், தலைவலி என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். சிறப்பு சிகிச்சைப் பணியில் இருக்கும் டாக்டர்களும் பயந்து நடுங்குகிறார்கள்” என்று நோயாளிகள் புலம்புவதாகச் செய்திகள் வருகின்றன.

உண்மையில் இதில் நடப்பது என்ன? அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொது சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் என பல தரப்பட்டவர்களை அணுகிப் பேசினோம். ஊர், பெயர், பதவிப் பொறுப்பு பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு தங்கள் கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

முதலில் தனியார் தனியார் மருத்துவர்கள் நடத்தும் கிளினிக்குகளின் நிலையைப் பற்றிப் பார்ப்போம்.

கிளினிக்குகள் இயங்கும் விதம்
கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் எப்படியோ அப்படித்தான் நகர்ப்புறங்களில் ஏழை, எளியவர்கள், நடுத்தர மக்களுக்காக இயங்கும் தனியார் கிளினிக்குகள். இங்கு அதிகபட்சம் இரண்டு அறைகள் இருக்கும். வெளியே நோயாளிகள் அமர ஓரிரு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். கிளினிக்கில் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பார். அவருக்கு ஒரு அட்டென்டர் அல்லது செவிலியர் துணைக்கு இருப்பார்.

இதுபோன்ற கிளினிக்குகளுக்கு மாதம் ரூ.7,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டியிருக்கும். செவிலியர் / அட்டென்டருக்கு சராசரியாக ரூ. 3,000-லிருந்து ரூ. 5,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவர் ரூ. 50 முதல் ரூ. 150 வரை பரிசோதனைக் கட்டணம் வாங்குவார். அதற்கேற்ப ஊசி மருந்து போட்டு மருந்து மாத்திரைகளும் தருவார். இந்த மாத்திரைகள் தவிர பக்கத்தில் உள்ள மருந்துக் கடையில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளும் எழுதித் தருவார். இப்படித்தான் தனியார் கிளினிக்குகள் இயங்குகின்றன.

அரசு அடையாள அட்டை கிடையாது
தனியார் கிளினிக்குகளை நடத்தும் மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை எதுவும் இருக்காது. ஒருவர் மருத்துவராகப் பிராக்டீஸ் செய்யும் காலத்தில், தனது பதிவு எண்ணைத் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ரூ.150 கொடுத்து பதிவு செய்தால், ஒரு வாரம் கழித்து அடையாள அட்டை கொடுப்பார்கள். அதைத்தான் அவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கார்டும் பெரும்பாலான மருத்துவர்களிடம் தற்போது இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அரசு தந்த ஐடி கார்டைக் காட்டினால்தான் (இது அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களிடம் மட்டுமே இருக்கும்) போலீஸார் அனுமதிக்கிறார்கள். மருத்துவக் கவுன்சில் அட்டையைக் காட்டினால் விடுவதில்லை. அப்படியிருக்க அந்த அட்டையும் இல்லாத மருத்துவர்கள் நிலை எப்படியிருக்கும்?

இப்போது விண்ணப்பித்தால் கார்டு உடனடியாகக் கிடைக்கவும் வழியில்லை. ஏனென்றால் இதற்காக இயங்கிவரும் மருத்துவக் கவுன்சில் அலுவலகம் கரோனா ஊரடங்கால் பூட்டிக் கிடக்கிறது என்கிறார்கள்.

நாய்த் தொல்லை
சாலைகளிலும், தெருக்களிலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தெரு நாய்கள் சுதந்திரமாக வலம் வருகின்றன. இப்படியான சூழலில் குடியிருப்புகள் வழியே கிளினிக்கிற்கு வரும் மருத்துவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. இரவு நேரங்களில் இன்னும் கஷ்டம். கெடுபிடிகள் காரணமாகக் கார்களைத் தவிர்த்து டூவீலர்களில் வர நேர்வதால், தெரு நாய்களின் தொந்தரவுக்கு ஆளாகும் சூழல் இருக்கிறது. செவிலியர் / அட்டென்டரின் நிலையும் இதுதான். பேருந்துகள் ஓடாததால் பலரால் வர முடியவில்லை. டூவீலரில் வருபவர்கள் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சிக்கல்
பெரும்பாலான கிளினிக்குகள் சிறிய இடங்களில் இயங்குபவை என்பதால், இங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் சிரமம். வெளியில் போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளின் இரு முனைகளில் தலா ஒரு நோயாளி அமரலாம். மற்றவர்கள் தெருவில்தான் ஆறடி இடைவெளியில் வட்டமிட்டு நிற்க வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு கிளினிக் வாசலிலும் இடம் இருக்காது என்பது முக்கியமான விஷயம்.

ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாய்தான் வருவார். அவர்களுக்குத் துணையாகக் குழந்தையின் தந்தை வருவார். ஆக, குழந்தை, தாய், தந்தை எப்படி ஒரு கிளினிக் வாசலில் சமூக இடைவெளி பேண முடியும்?

முக்கியமான இன்னொரு பிரச்சினை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கிளினிக் மருத்துவர்களிடம் இல்லை என்பதுதான். அதைப் பற்றியும் பேச வேண்டும்!

(தொடரும்…)

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x