Published : 17 Sep 2019 12:35 PM
Last Updated : 17 Sep 2019 12:35 PM

பொருளாதார சுணக்கம் குறுகிய காலமே! - நம்பிக்கையூட்டுகிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் 

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தப் பொருளாதார சுணக்கம் குறுகிய காலமே நீடிக்கும். மீண்டும் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கையூட்டுகிறார் பொருளாதார நிபுணர் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

கோவையைச் சேர்ந்த இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், சர்வதேச தொழில்முனைவோர் அமைப்புத் தலைவராகவும் இருந்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை, மேம்பாடு, வருமான வரி, ஜிஎஸ்டி விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் அக்கறை கொண்டுள்ள இவர், இது தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தற்போது ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி தொடர்பாக அவரது கருத்தை அறியவும், என்ன தீர்வு என்பதை தெரிந்துகொள்ளவும் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனை சந்தித்தோம். சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கூறினார்.

இந்தியாவுக்குப் புதிதல்ல...

"தற்போது நாட்டில் தொழில் துறையும், பொருளாதாரமும் சுணக்கமடைந்துள்ளது உண்மைதான். எனினும், இது இந்தியாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நெருக்கடிகளை தேசம் சந்தித்துள்ளது. சர்வதேச நாடுகளுக்கும் மந்த நிலை புதிதல்ல. உடலுக்கு வரும் சிறிய உபாதையைப் போலத்தான் இதுவும். உரிய சிகிச்சை அளித்தால், நாம் குணமாகிவிடுவோம்.

அதேசமயம், பிரச்சினை உள்ளது என்பதை அரசும், மக்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மேலும், மக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு பிரச்சினை முற்றிப்போகவில்லை. ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இந்தப் பிரச்சினையை பூதாகரமாக்கிக் காட்டுகின்றன. 1991-ல் நாட்டின் பொருளாதார நிலை, தற்போதுள்ளதைக் காட்டிலும் மோசமாக இருந்தது.

அதிலிருந்தே மீண்டு வந்தோம். நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 5.8 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இது 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல, ஏற்றுமதி, இறக்குமதியும் குறைந்துள்ளது. சுமார் 3.50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இதைக்கண்டு பெரிதாக கவலைகொள்ளத் தேவையில்லை. நிச்சயம் இதிலிருந்து மீள முடியும். இந்தப் புள்ளி விவரங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தொழில் துறையில் முதலீடுகள் செய்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் நுகர்விலும் சற்றே தயக்கம் உள்ளது.

நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும்...

எனவே, முதல்கட்டமாக நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு மக்களின் வருவாய் அதிகரிக்க வேண்டும். பல்வேறு துறைகளிலும் அரசின் முதலீடுகளும், நிதியுதவிகளும் அதிகரிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். மேலும், மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் வரியைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி-யில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஏறத்தாழ 156 நாடுகளில் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்திய நாடுகளில் ஆட்சிபுரிந்த அரசாங்கங்களில், ஒரேயொரு நாட்டின் அரசாங்கத்தைத் தவிர, மற்ற அரசாங்கங்கள் எதுவுமே மீண்டும் தேர்தலில் வென்று, அரசை அமைக்கவில்லை.

ஆனால், இந்தியாவில் ஜிஎஸ்டி-யை அறிமுகப்படுத்திய பாஜக, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதை, அரசியலுக்காக சொல்லவில்லை. ஏனெனில், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில், பெரிய நாடுகளில் முதல் மூன்று ஆண்டுகள் ஏராளமான குளறுபடிகள் நிலவியதுடன், சிரமங்கள் இருந்தன. சிரமங்களைத் தாண்டித்தான் ஜிஎஸ்டி-யை சீராக அமல்படுத்த முடிந்தது. மலேசியாவில் ஜிஎஸ்டி-யையே விலக்கிக் கொண்டனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சீரமைப்பு!

ஜிஎஸ்டி-யில் நிச்சயம் நீண்டகாலப் பலன் இருக்கும் என்றாலும்கூட, மக்களுக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மைதான். குறிப்பாக, சிறிய அளவிலான தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 99.30 சதவீதம் அளவிலான பொருட்களுக்கு 18 சதவீதம் மற்றும் அதற்குக் குறைவாகத்தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 0.70 சதவீதம் பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜிஎஸ்டி வரி விதிப்பை தொடர்ந்து மத்திய அரசு சீரமைத்து வருகிறது.

தற்போதுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த வரி விதிப்பையும், குறுகிய காலத்துக்காவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தொழில் நிறுவனங்களும் இந்த நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, விலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். லாபக் குறைப்பும், வியாபாரக் குறைப்பும் தற்காலிகமானதுதான் என்பதையும் தொழில் நிறுவனத்தினர் உணர வேண்டும். இந்த காலகட்டத்தில் ஊர்கூடித் தேர் இழுப்பது அவசியமாகும்.

ஜாப் ஒர்க் அடிப்படையில் இயங்கும் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி என்பது கொஞ்சம் அதிகம்தான். குறைந்த லாபத்தில் இயங்கும் இந்த தொழில் நிறுவனங்களின் நெருக்கடியைப் போக்கும் வகையில், இந்த வரி விதிப்பை மத்திய அரசு கூடிய விரைவில் குறைக்கும் என்று நம்பலாம்.

அதேபோல, ஜிஎஸ்டி-யை நடைமுறைப்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, சில அதிகாரிகளிடையேகூட ஜிஎஸ்டி-யை அமல்படுத்துவதில் தெளிவின்மை நிலவுகிறது. எனவே, ஜிஎஸ்டி-யை சரியாக அமல்படுத்தும் வகையில், எல்லா அதிகாரிகளும் தேவையான பயிற்சி அவசியம். மேலும், நடைமுறைப்படுத்தலில் உள்ள சிக்கல்களைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலும் முயற்சித்து வருகிறது. இதை விரைவுப்படுத்த வேண்டும்.

இரு காலாண்டுகளில் தீர்வு...

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி, இன்னும் இரு காலாண்டுகளில் நீங்கும். தற்போது அமெரிக்காவில் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளது. இதில் சுணக்கம் ஏற்பட்டால், நமது பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கான காலக்கெடு இன்னும் அதிகமாகும்.

புதிதாக ஒருவருக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஏற்கெனவே வேலை செய்து கொண்டிருப்பவருக்கு பணிவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டால், மக்களின் அச்சம் அதிகமாகும். அவர்களது வாழ்வாதாரமே பறிபோகிறதே என்ற எண்ணம், அவர்களை வேதனைக்குள்ளாக்கும். எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். உரிய முதலீடுகளைச் செய்து, நுகர்வை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும்.

அதேபோல, வங்கிகளும் வட்டி குறைப்பிலும், வட்டி மானியம் வழங்குவதிலும், வாராக்கடன் வரையறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நிபந்தனைகளில் கொஞ்சம் தளர்வு கொடுத்து, சில சலுகைகளை வழங்கினால், தொழில்முனைவோருக்கு ஆறுதல் கிடைக்கும். அதேசமயம், தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் வங்கிகள் இணைப்பு என்பது தேவையற்றது. இந்த நடவடிக்கையை ஒத்திவைத்திருக்கலாம்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதை தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டு தொழில் நிறுவனங்கள் அச்சம் கொள்ளாமல், நிறுவனச் செலவுகளைக் குறைத்தல், உற்பத்தி திறனை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கையில் பணம் இருப்பு வைத்திருப்பவர்கள், அதிக கடன் வாங்காமல் முதலீடு செய்வது தற்போது சரியானதாக இருக்கும். இது, மீண்டும் நெருக்கடி தீர்ந்தவுடன், சந்தையில் தங்களது பொருளின் விற்பனையை சில மடங்கு அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.

ஆக்கப்பூர்வமான அணுகுமுறை அவசியம்!

ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இதை அரசியல் பிரச்சினையாக அணுகாமல், தேசத்தின் பொருளாதாரப் பிரச்சினையாகக் கருதி, மத்திய, மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதில் உதவ வேண்டும். ஆக்கப்பூர்வமான கருத்துகள், விவாதங்களில் ஈடுபடுவதுதான் தற்போதைய சூழலில், சரியான அணுகுமுறையாக இருக்கும்.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளிலும் தற்போது பொருளாதார சுணக்கம் நிலவுகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் சுணக்கத்துக்கும் இதுவும் ஒரு முக்கியக் காரணம். இந்த பொருளாதார சுணக்கம் குறுகிய காலம்தான் என்பதை இந்தியா மட்டுமின்றி, எல்லா நாடுகளுமே உணர்ந்திருக்கின்றன. மக்களும், தொழில் துறையினரும் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். மீண்டும் வசந்தகாலம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று உறுதியாய் கூறினார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

- ஆர்.கிருஷ்ணகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x