Published : 14 Aug 2019 01:48 PM
Last Updated : 14 Aug 2019 01:48 PM

அவலாஞ்சி  வரலாறு காணாத மழை: நிஜமா? பொய்யா?

கா.சு.வேலாயுதன்

‘‘அவலாஞ்சி... சாக்லெட் ஃபாக்டரி... அவலா..ஞ்சி... சாக்லெட்..பாக்டரி!’’ விக்ரம் தெய்வத்திருமகள் படத்தில் கீறல் விழுந்த ரெக்கார்டு போல் திரும்பத் திரும்ப சொல்லும் வசனம். தற்போது அதே அவலாஞ்ச் மழை அளவு கணக்கிடும் வேளாண் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு விஞ்ஞானிகளுக்கு தொடர் உச்சரிப்பாகி சர்ச்சைகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

உலகிலேயே அதிக மழைபொழிவுள்ள இடம் சிரபுஞ்சி. அதிலும் சமீபகாலமாக சர்ச்சைகள் புகுந்து விட்ட நிலையில் அதற்கும் மழைக்குமான வரலாற்றுத் தொடர்பு இன்னமும் அறுபடவில்லை.

அப்படிப்பட்ட சிரபுஞ்சியிலேயே இதுவரை அதிகபட்சமாக பதிவான ஒரு நாள் மழையளவு 471.7 மி.மீட்டர். இந்த அவலாஞ்சியிலோ கடந்த 9ம் தேதி பதிவான மழையின் அளவு 91 செ.மீ. அதாவது 910 மி.மீட்டர். தென்னிந்தியாவிலேயே அதிகமான மழைபொழிவு உள்ள இடம் என்று கண்டறியப்பட்ட கூடலூர் தேவலா காடுகள் இதற்கு அருகாமையில்தான் அமைந்துள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் மழைபொழிவு உள்ள அப்பர்பவானி அவலாஞ்சியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. அங்கெல்லாம் குறிப்பிட்ட நாளில் 260 மி.மீ, 450 மி.மீ என மழையளவு பதிவாகியிருக்கிறது.

அதே நாளில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் முக்கிய இடங்களில் பதிவான மழையளவு: சின்னகல்லார், 37; எமரால்டு, 36; வால்பாறை, 35; சோலையாறு, 28; தேவாலா, 26; தேக்கடி, 23; நடுவட்டம், 22; பெரியார், 20; ஊட்டி, 18; பொள்ளாச்சி, 16; தெற்கு கோவை, 12; கேத்தி, 11; உடுமலைப்பேட்டை, 7; உத்தமபாளையம், 6; செங்கோட்டை மற்றும் அவிநாசி, 5 செ.மீ., இப்படி எல்லா இடங்களிலும் வழக்கமான மழையளவே பதிவாகியிருக்க, அவலாஞ்சியில் மட்டும் 910 மி.மீட்டருக்கு மழை அளவு எகிறிக்குதித்திருக்கிறதென்றால் யாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்?

இதுதான் தட்பவெப்ப, வேளாண்மை மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர்களின் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ‘மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் கனமழை பெய்வது நிஜம்தான். ஆனால் அது என்றைக்குமே 40 செ.மீ மழைளவை தாண்டியதில்லை. அப்படியிருக்க ஒரே இடத்தில் ஒரே நாளில் இரட்டிப்பு மடங்குக்கு மேல் பெய்திருப்பது அங்குள்ள மழைமானியின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!’ என சென்னை வானிலை மையமே அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் இப்படித்தான் கடந்த 4ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. ஆனால் அதன் அருகாமையில் உள்ள கடலூர், விழுப்புரம் பகுதிகளில் வெப்பநிலை இவ்வளவு குறைவாக இல்லை. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்டதில் வெப்பமானிகள் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. அதேநிலைதான் அவலாஞ்சி மழைமானியிலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அறிவிப்புக்கு காரணம்.

நீலகிரி மக்களும் கூட இதையேதான் வழிமொழிகிறார்கள். ‘‘சாதாரண மழை என்றாலே அவலாஞ்சி, தேவலா, பந்தலூர் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் இருக்கும். குறிப்பாக அவலாஞ்சில் 20- 30 இடங்கள் கூட நிலச்சரிவு இருக்கும். இந்த முறை அவலாஞ்சில் மூன்று இடங்களில் மட்டுமே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்து நின்று போய் அங்குள்ளவர்களை ஹெலிகாப்டரில் சென்று மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு பெரியதாக உள்ளதால் சீரமைப்பதில் தாமதமாகியுள்ளது!’’என்கிறார் இப்பகுதியை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர்.

‘‘நீலகிரியில் அத்தனை அணைகளும் நிரம்பி வழிவதாக சொல்லுகிறார்கள். அதுவும் முழு உண்மையில்லை. இங்கே பைக்காரா, காமராஜ்சாகர், பார்சன்வேலி, குந்தா, அப்பர்பவானி, எமரால்டு, போர்த்திமந்து, கிளன்மார்கன், போர்பே, டைகர் கில், அப்பர் கோடப்மந்து, கோரிசோலை, மரவைக்கண்டி, ரேலியான்னு சின்னதும் பெரிசுமா 14 அணைகள் இருக்கு. அதெல்லாமே ஒரு காலத்தில் பெருமழை ஒரு மாசம் பெஞ்சாத்தான் ரொம்பும். உதாரணமா பைக்கரா அணை மட்டும் 98 அடிங்கிறாங்க.

அது தொடர்ந்து நிரம்பி வழியணும்ன்னா மழை 15 நாளாவது விடாம பெய்யணும். இந்த தடவை ஒரே நாள்ல ரொம்பி வழியுது. அப்பிடின்னா என்ன அர்த்தம். இந்த அணை ரொம்ப காலமாவே தூர்வாரப்படலை. முக்கால்வாசி சேரும், சகதியும் மரங்கள், குப்பைகளும்தான் தேங்கிக் கிடக்கு. இதே நிலைமைதான் மத்த அத்தனை அணைகளும். அதுதான் சின்ன மழை பெய்ஞ்சாலே அணை நிரம்பி வழியறமாதிரி ஆயிடுது. அவிலாஞ்சில வச்சிருக்கிற மழைமானி மேல சென்னை வானிலை மையம் சந்தேகப்படறது சரிதான்.

இந்த மழை மானிகளில் மனுசங்களே தண்ணி ஊத்தி விட்டுட்டு அதிகமா மழை பெய்ஞ்சதா அறிவிப்பு சொல்ற கதையெல்லாம் நடக்குது!’’ என்கிறார் ஊட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
இவர்கள் சொல்லுவதெல்லாம் எந்த அளவு உண்மை? ஊட்டியில் இயங்கி வரும் தேசிய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணனிடம் பேசினேன்.
‘‘இன்றைக்கு புவி வெப்பமயமாதல் காரணமாக மழை பொழிவு, பருவ கால நிலை மாற்றம் என்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பருவத்தில் இருபது நாள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து விடுவதும், இடம் மாறி பெய்வதும் கூட நடக்கிறது. அதனால்தான் உலகிலேயே மழை பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்பது மாறி வேறு பல இடங்கள் இப்போது சொல்லப்படுகிறது.

அவலாஞ்சியை பொறுத்தவரை பருவகாலங்களில் 400- 430 வரை மழையளவு காட்டப்பட்ட பெருமழை பொழிவு உள்ள பிரதேசம்தான். வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் காரணமாக பத்து நாள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து முடித்திருக்கிறது.எனவேதான் 900 மி.மீ மழையளவு மானியில் பதிவாகியிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டை தேசிய வானிலை ஆராய்ச்சி மையமே ஏற்றுக் கொண்டு விட்டது.

அதை சர்ச்சை கிளப்புவதிலோ, அந்த மானியை ஆராய்ச்சி செய்வதிலோ அர்த்தமில்லை, அவசியமுமில்லை. பத்து நாள் மழை கொஞ்சம் கொஞ்சமாக பெய்யும் போது நிலம் ஈரமாகும். இளகும் தன்மை ஏற்படும். இப்படியே தொடர்ந்து மழை இருந்தால் தண்ணீர் நிலத்தில் உறிஞ்சி ஏகப்பட்ட இடங்களில் நிலச்சரிவையும், சேதத்தையும் ஏற்படுத்தும்.

அதே சமயம் பூமி நன்றாக காய்ந்திருக்கும்போது ஒரே நாளில் பத்து நாள் மழையும் பொழிந்தால் நிலத்தில் நீர் ஊறுவதை விட வழிந்தோடி ஆற்றில் சேருவதும், கடலுக்கு போவதும்தான் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலை இருந்ததாலேயே இங்கே இவ்வளவு மழை பொழிந்தும் சேதம் ஏதும் பெரிதாக ஏற்படவில்லை.

இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பத்து நாள் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பதாலும், அது இடம் மாறி பெய்வதாலும் அதற்கேற்ப நாம் நம் வாழ்நிலையை எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். மழை நீர் சேமிப்பு, அதை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளை தேட வேண்டும்!’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x