Last Updated : 15 Jun, 2019 01:15 PM

 

Published : 15 Jun 2019 01:15 PM
Last Updated : 15 Jun 2019 01:15 PM

எங்கேயும் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துதல்; நார்சிஸத்தின் அறிகுறியா?- வழிகாட்டும் மனநல மருத்துவர்

என்ன ‘ஸ்டேட்டஸ்’ போடுவீர்களோ, எந்தப் படத்தை ‘அப்லோட்’ செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உங்கள் ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒட்டு மொத்தமாக 10 லட்சம் ‘லைக்’குகளை வாங்கி விட்டு வாருங்கள். அடுத்த நாளே எம் மகளுக்கும் உங்களுக்கும் திருமண நாள் குறித்துவிடலாம்.

- ஏமனில் சலீம் அயாஸ் என்ற மாமனார் மருமகனிடம் கேட்ட வரதட்சணை இதுதான்.

அமெரிக்காவில் ஒரு வகுப்பறையில் ஆசிரியரும் ஒரே ஒரு மாணவரும் மட்டும் இருந்தார்கள். அந்த ஆசிரியர் கர்ப்பமாக இருந்தார். திடீரென்று அந்த ஆசிரியருக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கே இருந்த மாணவன் செய்த முதல் காரியம் செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

முஜிபுர் ரஹ்மான், ரம்ஜான் பண்டிகை அன்று தனது சகோதரி குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்குச் சென்றார். அங்கு அழகான பெண் சிற்பங்கள் இருந்தன. அதிக 'லைக்' பெறும் எண்ணத்தில் அந்த சிற்பங்களுடன் நாகரிகமற்ற முறையில் விதவிதமான போஸ்களில் இருப்பது போன்ற படங்களை எடுத்து சில வாசகங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்டார். அவர் செய்த செயல், இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருந்ததால் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவை நாளேடுகளில் வெளியான சமீபத்திய செய்திகள்.

800 அடி உயரத்தில் செல்ஃபி எடுக்க முயன்று  தவறிவிழுந்து உயிரிழந்த இளைஞர், டிக் டாக்கில் காணொலி வெளிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண், நில்லு நில்லு சேலஞ்ச் மூலம் போலீஸ் ஜீப்பை மறித்து நடனமாடிய இளைஞர்கள் என்று சமூக வலைதளங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது சமூக வலைதளத்தில் சின்னதாய் ஒரு ‘லைக்’ வாங்கத்தான். அதிக நேரம் தனிமையில் இருப்போரில் பெரும்பாலானவர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி எடுக்கப்படும் படங்களை சமூக வலைதளங்களிலும் பதிகிறார்கள். இன்று உலக அளவில் 10 லட்சம் செல்ஃபிகள் ஒரே நாளில் எடுக்கப்படுகின்றன. 2015-ம் ஆண்டில் கூகுள் தேடலில் 2.4 கோடி செல்ஃபி புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன.

செல்ஃபி எடுக்க ஒரு சராசரி இளம்பெண் அல்லது இளைஞர் 12 நிமிடங்களைச் செலவழிக்கிறார் அல்லது வீணடிக்கிறார்.

அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும்.

இன்ஸ்டாகிராமில் பதியப்படும் படங்கள், வீடியோக்களை ஆய்வு செய்து பார்த்தால் பெரும்பாலும் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சொல் ‘#Me’ என்பதுதான்.  அதாவது, ‘நான்’. நான், எனது, என் அழகு, என் செல்ஃபி என்பது மாதிரியான பகிர்வுகள், அந்தப் படங்களுக்குரிய இளைஞர்களைச் சுயமோக மனநிலைக் கோளாறுக்குத் தள்ளிவிடும் சாத்தியங்கள் உண்டு.

நம்மை அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும், பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும், புகழ வேண்டும் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிடுகிறோம். நம்மை நாம் அழகு பார்ப்பதும், ரசிப்பதும், புகழ்ச்சி மயங்குவதும் சாதாரணமானதுதான், பொதுவானதுதான். ஆனால், இன்று அது எல்லை மீறிப் போவதைத்தான் உளவியல் பாதக விளைவு, நார்சிஸப் பார்வை என்று உளவியல்ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக் போஸ்ட், படங்கள் பார்க்க பிறரைத் தூண்டுவது 'லைக்'குக்காக ஏங்குவது கவன ஈர்ப்பு நோய் என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.

செல்ஃபி மோகத்தால் நார்சிஸம் (சுயமோகம்), ஆளுமைக் கோளாறு போன்ற மனநோய்கள் அதிகமாகி வருவதாகக் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.

பேஸ்புக் புரொஃபைல் படம் மாற்றுவது, அதிகம் ஸ்டேட்டஸ் போடுவது, வாட்ஸ் அப் டிபி மாற்றுவது, இன்ஸ்டாகிராமில் படங்களைப் பதிவேற்றுவது, டிக் டாக்கில் திரைப்படப் பாடல்களுக்கு வாயசைத்து நடனம் ஆடுவது, டப்ஸ்மாஷ் வெளியிடுவது, பக்கெட் சேலஞ்ச் செய்வது, அதிக 'லைக்'குக்காக சில வேடிக்கையான செயல்களில் ஈடுபடுவது, தனக்குத் தான் எல்லாம் தெரியும், ஊருக்கு முன் முதலில் தெரியும் என்பதற்காக சில செய்திகளைப் பதிவிடுவது என எல்லாமே தன்னை முன்னிலைப்படுத்த விரும்புவதின் செயல்பாடுகள்தான். இதன் பின்னணி குறித்து மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்திடம் விரிவாகப் பேசினோம்.

'' தேர்வு, வேலை வாய்ப்பு, வீடு வாங்குவது, கார் வாங்குவது என எதுவாக இருந்தாலும் கடந்த 10, 15 ஆண்டுகளாக சமூகத்தில் தன்னை முன்னிலைப்படுத்துவது பொதுவாகிவிட்டது. தான் வெற்றி பெற வேண்டும், தான் தோல்வி அடையக் கூடாது என்கிற முனைப்பு மட்டுமே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தேர்வில் டாப் ரேங்க் எடுத்தால் வெற்றிக்கான நபர். எடுக்காவிட்டால் நான் தோல்விகரமான ஆள். தோற்றாலும் ஜெயித்தாலும் நானே பொறுப்பு. அதற்கான முழு கிரெட்டிட்டும் எனக்கே என்ற மனநிலை எல்லோருக்கும் உள்ளது.

தனி மனித முயற்சி, காலச்சூழல், சமூகத்தில் உள்ள வாய்ப்புகள் எல்லாம் கலந்துதான் ஒருவருக்கு வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு அது தள்ளிப் போகிறது. ஆனால், இன்று வரும் விளம்பரங்கள் எல்லாம் நீ முயற்சி பண்ணால் கிடைக்கும். முயற்சி செய்யவில்லையென்றால் கிடைக்காது. தோல்விக்குக் காரணம் நீதான். நீ மட்டும்தான். உன்னோட உழைப்பு சரியாக இல்லை. சரியாக முயற்சி பண்ணவில்லை என்று தனிநபரை மறைமுகமாகச் சொல்கின்றன.

'பக்கத்து வீட்டுப் பையனும் உன்னை மாதிரிதான். அவனுக்கும் லேங்வேஜ் பிராப்ளம் எல்லாம் இருக்கு. ஆனாலும் அவன் ஜெயிச்சிருக்கான். ஆனா, நீ ஜெயிக்கலை. அவனால முடியுது. உன்னால முடியலை'ன்னு பெற்றோர் ஒப்பிடும்போதும் தனிநபரைத் தான் தூக்கிப் பிடிக்கிறோம். சுய முன்னேற்றம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், அறிவுரைகள் எல்லாமே அறிவுரை என்கிற பெயரில் தனிநபர் மீதுதான் பழி சுமத்துகின்றன. இதனால் தோல்வி அடைந்தவர்கள் குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். காயப்படுத்துதல், தீங்கு செய்தல், தற்கொலை முயற்சி என்று தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் தன்னை முன்னிலைப்படுத்தும் கலாச்சாரம்தான். வகுப்பில் முதல் ரேங்க் எடுக்க வேண்டும், போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும், காசு இல்லாவிட்டாலும் பல லட்சங்கள் செலவு பண்ணியாவது எம்பிபிஎஸ் சீட் வாங்க வேண்டும் என்பதே இன்றைய சமூகத்தின் போக்காக உள்ளது. இதனால் தன்னைப் புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற உந்துதலும், தன்னை முன்னிலைப்படுத்தும் கலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது. இதன் உச்சகட்டம்தான் நார்சிஸம்.

ஏனென்றால் மனிதன் ஒரு சமூக விலங்கு. தன்னைப் பாராட்டவேண்டும் என்று எப்போதும் நினைப்பான். ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டால் எவ்வளவு 'லைக்', கமெண்ட் வந்திருக்கிறது என்று பார்ப்பதில் ஆர்வம் செலுத்துவதும் அப்படித்தான். அதில் வரும் எண்ணிக்கையைப் பொறுத்து வெற்றி, தோல்வியை அவர்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். நேற்று போட்ட போஸ்ட்/ படத்துக்கு 100 'லைக்' வந்தது. ஆனால், இன்றைக்கு 25 'லைக்' தான் வந்தது என்று வருத்தப்படுவதும், மனக்கவலை அடைவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இன்றைக்கு திரைப்படங்கள், விளம்பரங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் அம்பானி, பில்கேட்ஸ் என்று தனிநபரையே ரோல் மாடலாகச் சொல்கிறார்கள். போராடி வெற்றி பெற்றவர்களை அப்படிச் சொல்வதில் தவறில்லைதான். ஆனால், அவர்கள் எல்லாம் விதி விலக்குகள். அவர்களை திரைப்படம் போன்ற ஊடகங்களில் பொதுமைப்படுத்தி பெரிய ஆளுமை என்று கட்டமைப்பதின் மூலம் விதிவிலக்குகளை விதிகளாக மாற்றுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு இளைஞனும் குழு மனப்பான்மையில், கூட்டுச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இதுதான் சமூக வலைதளங்களிலும் தனி நபர் வெற்றியாகப் பிரதிபலிக்கிறது. லைம் லைட்ல இருக்க வேண்டும் என்று இளைஞர்களை திசை மாற்றுகிறது.

சமூகம் தனிநபரைத் தூக்கிப் பிடிக்கிறது. ஆனால், அவன் தனக்கு எதுவும் தேவையில்லை, தன்னிடம் எல்லாமே இருக்கிறது. என்னால் எல்லாம் முடியும் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறான். இதனால் பிரச்சினை வந்தாலும், சங்கடங்கள் இருந்தாலும் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. உதவி கேட்பது குறைந்துவிடுகிறது. இதனால் தனிமை ஆக்கிரமிக்கிறது. அப்போது மனநலப் பிரச்சினைகள் வருகின்றன.

குழு மனப்பான்மை, கூட்டுச் செயல்பாடு, தன்னைத் தாண்டின விஷயங்கள், காரணிகள் உள்ளன. அதுதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் நமக்குக் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம்மிடம் பிரச்சினை இருந்தால் அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நம்மை எவ்வளவு பேர் பாராட்டினார்கள், ஏன் ஒருவரும் பாராட்டவில்லை, 2 மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் இவ்வளவு 'லைக்'கா, போன போஸ்ட்டுக்கு 100 'லைக்' வந்ததே என்று சதா சர்வநேரமும் அதையே யோசித்துக் கொண்டிருந்தால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படும். மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்படும் போது அது மன அழுத்தமாகவோ, மனப்பதற்றமாகவே மாறும். நரம்புகளைப் பாதிப்பதாலே மனநலப் பிரச்சினைகள் வரும். இதற்காக கவலைப்பட வேண்டாம். காரணிகளைக் கண்டுபிடித்தாலே அதற்கான தீர்வும் கிடைத்துவிடும்.

பேஸ்புக் இல்லாதபோது இவ்ளோ பேர் 'லைக்' போட்டார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். 'லைக்', கமெண்ட், ஆங்கிரி, ஷேர் ஆகியவற்றை வைத்து வெற்றி, தோல்வியை முடிவு செய்யக்கூடாது. நிஜ வாழ்க்கையில் சமூகத்துடனும், உறவுகளுடனும் பழக வேண்டும்.

வெற்றி, தோல்விகளுக்கு தனி நபர் மட்டுமே காரணமல்ல என்ற புரிதலும், தங்களுடைய சிக்கலை பிறருடன் பகிர்ந்து குழு மனப்பான்மையுடன் தீர்வு காண முயல வேண்டும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்போது அறுபது வயதுகளில் இருக்கிற தாத்தா, பாட்டிகள் பெரும்பாலும் அவர்களின் இளம் வயதில் 7-8 மணி நேரம் வேலை செய்வது, குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவது,

சேமிப்புத் திட்டங்கள், கொடுத்துப் பழகுவது என்று சரியான வாழ்க்கை முறையில் இருந்தார்கள். இப்போது வேலைவாய்ப்புக்காக எல்லோரும் நகர்ந்து தனிக்குடித்தனம் போவதால் சமூகப் பழக்கம் குறைகிறது. பேசுவது, பழகுவது, பிரச்சினைகளைப் பகிர்வதும் குறைகிறது.

பெற்றோர்கள் ஆன்லைன் டீம், ஃபேஸ்புக் டைம், சோஷியல் மீடியாவுக்கு லீவ் விட்டுவிடலாம். ஒரு நாள் முழுக்க அப்படி இருந்து பாருங்கள். அலுவலக மெசேஜுக்கு மட்டும் பதில் அளியுங்கள். இதைப் பார்க்கும் குழந்தைகளும் அதையே பின்பற்றுவார்கள்.

தனிநபர் வெற்றி, தோல்விக்கு தான் மட்டும் காரணமில்லை. சுற்றி இருக்கக்கூடிய சமூக பொருளாதாரக் காரணிகளும் காரணம் என்ற புரிதலுடன் அணுகும்போது  மனநலப் பிரச்சினை வராது'' என்கிறார் கார்த்திக் தெய்வநாயகம்.

- க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x