Last Updated : 03 Jun, 2019 11:09 AM

 

Published : 03 Jun 2019 11:09 AM
Last Updated : 03 Jun 2019 11:09 AM

மாணவர்களுக்கான ஆடை வரம்பு உள்ளிட்ட 11 கட்டளைகள்: வரவேற்பும்; மாற்று கருத்தும்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்தமுறை புதிதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசு ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவை உட்பட மொத்தம் 11 கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1. மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.

2. இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது.

3. செல்போன், ஸ்மார்ட்போன்களை பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது, மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

4. லோஹிப், டைட் பேண்ட் அணிந்து வரக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். அதுவும் இறுக்கமாக, குட்டையாக இருக்கக் கூடாது.

5. தலை முடியை சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும், போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.

6. கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி.

7. டக்-இன் செய்யும்போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக்-இன் செய்யக் கூடாது.

8. மேல் உதட்டை தாண்டி முறுக்கு மீசை, தாடி வைக்கக் கூடாது.

9. கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது.

10. பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11. விடுமுறை எடுக்கும்போது பெற்றோர், ஆசிரியர் அனுமதிக் கையெழுத்து பெற்ற பிறகு மட்டுமே எடுக்க வேண்டும்.

இவற்றில் தென் மாவட்டங்களில் மிகப் பெரிய பிரச்சினையாக திகழும் கையில் கயிறு கட்டும் பழக்கத்துக்கு அரசே முற்றுப்புள்ளி வைத்திருப்பதற்கு கல்வியாளர்களே வரவேற்பு தெரிவிக்கின்றனர். சாதி எங்கே ஒழிக்கப்பட வேண்டுமோ அங்கேயே அவை வளர்வதற்கு தீப்பொறி போல் இருப்பதுதான் இந்த கயிறு கட்டும் பழக்கம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு நிறம் என பிரித்துக் கொண்டு பள்ளியிலேயே குழுவாகப் பிரிந்து பின்னர் வெறுப்பையும் விரோதத்தையும் ஆழப்படுத்தும் இந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது பள்ளிப்பருவத்தில் நற்பண்பை வளர்ப்பதற்கான ஓர் ஆரம்பப்புள்ளி.

குறித்து தி இந்து தமிழ் திசைக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடமும், குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயனிடமும் கருத்து கேட்டோம்.

சேலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சித்ரா கூறும்போது, "எனது பள்ளியில் சாதி சம்பந்தமாக்க கயிறு கட்டும் பிரச்சினை பெரியளவில் இல்லை. ஆனால், ஆடை விஷயத்தில் நிறைய பிரச்சினைகள் நானும் என் சக ஆசிரியைகளும் சந்தித்துள்ளோம். சினிமா நடிகர்களைப் பார்த்து லோ ஹிப் பேண்ட் அணிந்து வருவது குணியும்போது உள்ளாடை தெரியும் அளவுக்கு பேண்டை கீழறிங்கி அணிவது என்று மாணவர்கள் சேட்டைகளை அதிமாகவே சந்திக்க நேரிட்டது.

அதேபோல் மீசை பிரச்சினை. தங்கள் அபிமான ஹீரோக்களின் பாணியில் மாதம் ஒரு மீசை வகை மாதம் ஒரு தலைமுடி ஸ்டைல் என வருவார்கள். தோளுக்கு மீது வளர்ந்த பிள்ளைகள் ஓங்கி குரல் உயர்த்தி திட்டுவதற்குக் கூட சங்கடமாக இருக்கும். ஆனாலும், ஒவ்வொரு முறை அஸெம்ப்ளி நடக்கும்போது தலைமை ஆசிரியர் இது குறித்து எடுத்துரைப்பார். நாங்கள் ஆசிரியர்களும் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் இது குறித்து பேசுவோம்.

இப்போது அரசாங்கமே இப்படி சில கட்டளைகளைப் பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது ஆசிரியர்களாகிய எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி வேலைக்கு சென்றுவிடுவதால் அதிகாலை சென்று அந்தி சாய்ந்த பின்னர்தான் வீடு திரும்புகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு இருக்கும்போது மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடங்கி அனைத்து விஷயத்திலும் வீட்டிலிருந்தே மாற்றத்தைக் கொண்டு வார இயலும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாததால் அரசே ஆசிரியர்களுக்கு இந்த கட்டளைகள் மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறது என்றுதான் சொல்வேன்.

ஒருமுறை எங்கள் பள்ளிக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் விழாவிற்கு தலைமை தாங்க வந்தார். அவர் என்னிடம், உங்கள் கைகளில் இருந்து கம்பை பிடுங்கிவிட்டார்கள்; நாங்கள் லத்தியை அதிகமாக சுழற்ற வேண்டியிருக்கிறது என்றார்.

இதைக் குறிப்பிடுவதன் மூலம் மாணவர்களை அடிப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், மாணவர்களிடம் வார்த்தையால் கூட கடுமைகாட்ட இயலாத சூழலில் கட்டுபாடற்ற சுதந்திரம் போல் ஆகிவிடுகிறது. அந்த சுதந்திரத்தை சரியான முறையில் அவர்களுக்குக் கையாளவும் தெரிவதில்லை. நல்ல வேளையாக அரசாங்கமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்தது. இனி நாங்கள் போதனை செய்ய வேண்டாம், வேதனையும் பட வேண்டாம். பள்ளி வளாகத்தில் இந்தக் கட்டளைகளை எழுதி வைத்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கலாம்" என்றார்.

இதேபோல் திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஷெர்லியை தொடர்பு கொண்டோம். அவரும் பல முக்கியமானத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறும்போது, "முதலில் அரசு பிறப்பித்துள்ள இந்த கட்டளைகளை நான் வரவேற்கிறேன். நான் பணியாற்றுவது நடுநிலைப் பள்ளி. நடுநிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும்கூட ஒரு விஷயன் ஆழமாகத் தெரிகிறது. நான் இந்த சாதி. இந்தந்த சாதியினருடன் பழகலாம், பேசலாம். இன்னாருடன் பழகக்கூடாது, பேசக்கூடாது என்ற முன்முடிவுடன் வருகின்றனர்.

பாடம் பற்றி எதுவும்  தெரியாமல் வருபவர்கள் எளிதாக புதிய பாடத்தைக் கற்பிக்க முடிகிறது. ஆனால், சாதி விஷயத்தில் ஏற்கெனவே கற்பிதங்களுடன் வரும் அவர்களை எப்படி அதை மறக்க வைத்து சமத்துவத்தைப் போதிப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

ஏனெனில் நான் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் பள்ளி வகுப்பறையில் போதித்தால் போதுமென்று நினைக்கும் ஆசிரியை அல்ல. கல்வி என்பது சமூகத்தையும் சேர்த்துக் கற்பதே. அதனால், ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவது குறித்தும் பேசுகிறேன்.

நடுநிலைப் பள்ளி மாணவர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் ஸ்டைல், நடை, உடை என எல்லாமே இவர்களை ஈர்க்கிறது. அவர்களும் இவர்கள் மீது தாக்கத்தைச் செலுத்துகின்றனர். பெரும்பாலும் அவர்கள்தான் கயிறு கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு ஊட்டுகின்றனர். நடிகர்களின் ரசிகராக இருப்பதில் கூட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதி பார்க்கின்றனர். சில நேரங்களில் தேசத்தின் எதிர்கால தூண்கள் இப்படி சாதியில் திளைத்திருப்பதைப் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது.

எங்கள் பள்ளிக்கு எதிராக இரண்டு கோயில்கள் உள்ளன. அது இரு வேறு சமூகத்தினருக்கு உட்பட்டது. ஒரு சமூக கோயில் கொடையை இன்னொரு சமூக சிறுவர்கள் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என்றால் இயல்பாகவே வேடிக்கைப் பார்க்கும் ஆர்வம் இருக்குமல்லவா. இவர்கள் வேடிக்கைப் பார்க்கக்கூட அங்குமிங்கும் திரும்பாமல் பள்ளிக்கு வருவார்கள். சாதி அவர்களுக்கு அவ்வளவு இறுக்கத்தை தந்திருக்கிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் அதுவும் இருபாலர் பள்ளியில் இன்னும் சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன. இன்ஃபாச்சுவேசன் எனப்படும் ஈர்ப்பால் இணையும் ஜோடிகள் ஊர் கலவரம் வரை கொண்டு விட்டுவிடுகின்றனர். காரணம் அதிலும் சாதி இருக்கிறது. எங்கள் ஊரில் அதனால் ஒரு பள்ளியே ஆண், பெண் என தனித்தனி பள்ளியாக மாற்றப்பட்டது.

தைரியமாக கயிறு, வளையம், அந்த வளையத்தில் தங்கள் சாதி தலைவரின் பெயர், முத்திரை என்று மாணவர்கள் ஆசிரியர்களையே அச்சுறுத்தி வந்தனர். ஆனால், அரசாங்கம் எங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரு கட்டளையைப் பிறப்பித்துள்ளது. இது எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் கூறியதாவது:

நானும் அந்த 11 கட்டளைகளைப் பார்த்தேன். சிலவற்றை நான் ஆதரிக்கிறேன். சிலவற்றில் திணிப்பு தொணி தெரிகிறது. சாதிக் கயிறுகள் தென்மாவட்ட பள்ளிகளில் பெரும் பிரச்சினை என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படி ஒரு கட்டளையைப் பிறப்பிப்பதற்கு முன்னதாக மாணவர்களிடமும் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். மாணவர்களிடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டளைகளை விதித்திருக்க வேண்டும். எங்குமே திணிப்பு இருப்பது நல்லதல்ல.

 

987447611436469817969272972195938382951307745488909njpgதேவநேயன்100

 

எத்தனைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அவரவர் சாதி ஆசிரியர்களுடன் மட்டுமே மதிய உணவு உண்கிறார்கள் என்பது தெரியுமா? ஆசிரியர்களே இப்படி இருக்க மாணவர்களுக்கு மட்டும் கட்டளையிட்டு என்ன நடக்கப்போகிறது. சாதிக் கயிறுகளை மட்டுமே தடுக்கலாம் அவர்கள் மனதிலிருக்கும் சாதியை மட்டுப்படுத்த வேண்டுமானால் ஆசிரியர்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான நிலவரம். தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் என போதிக்கும் போதே சாதியும் ஒரு பெருங்குற்றம் என போதிக்க வேண்டும்.

முன்பெல்லாம் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்புகள் இருந்தன. அந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மனம்விட்டு பேசிக் கொள்ள முடிந்தது. பல பிரச்சினைகள் வகுப்பறைகளிலேயே தீர்த்துவைக்கப்பட்டன. ஆனால், இன்று நீதி போதனை வகுப்புகள் என்ன ஆகின?

மாணவர்கள் சினிமா நடிகர்களாலும் ஈர்க்கப்படுகின்றனர். சினிமாக்களையும் பொறுப்புணர்வுடன் எடுப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட சாதியைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் வசனங்கள் எழுதுவது, காட்சிகளை அமைப்பது, பாடல்கள் எழுதுவது இளம் மாணவர்களுக்குள் எரியும் சாதி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல் அமையும். எனவே, திரையுலகமும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டும் போராட்டம் நடத்துபவர்கள் என்ற பிம்பம் மட்டுமே இருக்கிறது. ஆனால், அவர்களும் அன்றாடம் மாணவர்களிடம், அதுவும் சாதியம் ஊறிப்போன கிராமங்களில் இருந்து மாணவர்களுடன் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை ஆசிரியர்கள் சித்ரா, ஷெர்லியின் வாக்குமூலமாகக் கூறுகிறது.

பள்ளி என்பது பாடத்தைத் தாண்டி பொது ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் கூடம். தனியார் பள்ளிகளில் சீருடை போன்ற விஷயங்களில் ஒழுங்கிண்மை மிகக் குறைவு. ஆனால், அரசுப் பள்ளிகளில் இவை சற்று அதிகமாகவே இருக்கின்றனது.

மாணவப் பருவத்தில் சாதி விஷம் கயிறு மூலம் பரவாமல் இருக்க அரசு இட்ட கட்டளை எப்படிப் பார்த்தாலும் வரவேற்கத்தக்கது. இதை உயர் கல்விக் கூடங்களிலும் அமல்படுத்தலாம்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x