Last Updated : 29 May, 2018 07:05 PM

 

Published : 29 May 2018 07:05 PM
Last Updated : 29 May 2018 07:05 PM

ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை இல்லையா? கடந்த 3 ஆண்டுகளில் 295 பயிற்சி நிறுவனங்கள் மூடல்

இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததாலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் 295 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுளன.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2002-ம் ஆண்டு வரையிலும் இடைநிலைப் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் பாடம் கற்பித்தனர். மேலும் இவர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் 2003-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். இதனால் இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பினை முடித்தவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிக் கல்வித்துறையில் தற்பொழுது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தரமான கல்வி அறிவை அளிக்க வேண்டும் என்பதற்காகவே பட்டதாரி ஆசிரியர்கள் 2003-ம் ஆண்டு முதல் நிரப்பப்பட்டு வருகின்றனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டில் 32 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2,700 இடங்களில் 1,047 இடங்கள் மட்டுமே நிரம்பின. 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 480 இடங்களில் 113 இடங்களே நிரம்பின.

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் மத்திய அரசின் நிதியுதவி உடன் புதியதாக 7 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது-. ஆனால் 2016-ம் ஆண்டில் 61 மாணவர்களும், 2017-ம் ஆண்டில் 66 மாணவர்களும் சேர்ந்தனர்.

அதேபோல் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 2015-ம் ஆண்டில் 39 ஆக இருந்து 2017-ம் ஆண்டில் 33 ஆக குறைந்தது. 33 அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் கடந்த 2017-ல் 2780 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் 459 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வந்தன. அந்த நிறுவனங்களில் 25,200 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால் 4,825 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதே எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 279 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனமாக குறைந்ததால், மாணவர்கள் சேர்ப்பதற்கு 18,800 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அவற்றில் 3,419 மணாவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.

மேலும் நடப்பு கல்வியாண்டான 2018-19 ஆம் கல்வியாண்டில் சுமார் 42 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவதற்கு அனுமதி பெற்றுள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது-. மேலும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றி வரும் நபர்கள் ஒய்வூபெறும் போது அந்த இடங்களும் 2002-ம் ஆண்டின் அராசாணையின் படி 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சரிந்து வரும் மாணவர் சேர்க்கையின் காரணமாகவும் தொட்க்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது.

எனவே இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலைதான் தற்பொழுது உள்ளது. மேலும் மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.

தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறை பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியலை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வெளியிட்டது. அதில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் இடைநிலை ஆசிரியர்களுக்கு காத்திருந்தது. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வினை முடித்து விட்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து 681 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்ற செய்திதான் அது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் 9.5.2018 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரின் கருத்துருவினை ஏற்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புவியியல் அமைப்பின் அடிப்படையிலும், மாணவர்கள் சேர்க்கையின் தேவையின் அடிப்படையில் 2 பிரிவாக பிரிக்கப்படுகிறது.

சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, கோத்தகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தலா 100 மாணவர்கள் சேர்க்கவும், கடலூர், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கவும் என மொத்தம் 1050 மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான எல்லையும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியை மட்டுமே அளிக்கும். அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பணியிடைப் பயிற்சியை மட்டுமே வழங்கும் என அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட 2,700 மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 1050 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 42 ஆக இருந்தது தற்பொழுது 33 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கையை தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நிறுத்தி வருகின்றன. மேலும் சில ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் மூடுவதற்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியாகி உள்ளன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் சில தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதல் மற்றும் ஆசை வார்த்தைகளால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்கின்றனர். மாணவர்களுக்கு இலவசமாகவும், கட்டணமின்றியும் கல்வி அளிப்பதாக கூறினால் யாரும் ஏமாற வேண்டாம் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாகவே உள்ளது. அதனை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்பதும் அனைவரின் விருப்பமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x