Last Updated : 03 Feb, 2018 11:26 AM

 

Published : 03 Feb 2018 11:26 AM
Last Updated : 03 Feb 2018 11:26 AM

புதுச்சேரி சாராய தொழிலதிபர் ராமுவின் கொலையை அடுத்து தொடரும் பழிவாங்கும் படலம்... அடுத்த குறி யார்?-‘பெண் தாதா’ எழிலரசியின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்கும் போலீஸார்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் சாராய தொழிலதிபர் ராமு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்களும் அடுத்த டார்கெட்டுக்கான திட்டமிடல்களும் மக்களை திகிலடையச் செய்திருக்கின்றன.

காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளில் சாராயம் மற்றும் மதுபானத் தொழிலில் உச்சத்தில் இருந்தவர்கள் காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆனந்தன், ராமு (எ) ராதாகிருஷ்ணன். காரைக்கால் பிராந்தியம் மட்டுமல்லாது தமிழகப் பகுதிகளிலும் செல்வாக்குடன் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் புதுச்சேரியில் அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பதவி வகித்த விஎம்சி. சிவக்குமாருக்கு நெருக்கமாக இருந்தனர். அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு இவரும் காரணமாக இருந்துள்ளார்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் விஎம்சி. சிவக்குமார் போட்டியிட்டபோது பண உதவி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு உதவிகளை இந்த சகோதரர்கள் செய்து கொடுத்தனர். பின்னர் சகோதரர்கள் இடையே பிரிவு ஏற்பட்டது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவக்குமாருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டார். அப்போது, அனைத்து வகையிலும் சிவக்குமாருக்கு ராமு பக்கபலமாக இருந்தார். அத்தேர்தலில் சிவக்குமாரின் வெற்றிக்கு பிரதான காரணம் ராமுவின் பங்களிப்புதான் என பரவலாகப் பேசப்பட்டது.

பின்னர், தொழில்ரீதியாகவும் இருவருக்கும் தொடர்பு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ராமுவுக்கும் அவரது மனைவி வினோதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் போலகம் பகுதியைச் சேர்ந்த எழிலரசிக்கும் ராமுவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

எழிலரசியுடன் திருமணம்

ராமுவுக்கும் வினோதாவுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் எழிலரசியை, ராமு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். எழிலரசியின் பெயரில் நிறைய சொத்துகளையும் வாங்கிக் கொடுத்ததுடன், தொழில் நடைமுறைகளையும் கற்றுக் கொடுத்தார். இந்நிலையில், வழக்கு ஒன்றில் தமிழக போலீஸாரால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ராமு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் ராமுவின் சொத்துகளை சிவக்குமார் அபகரிக்க முயன்றதாகவும், குடும்ப விவகாரங்களில் தலையிட்டதாகவும் கருதிய ராமு, சிவக்குமார் மீது கருத்து வேறுபாடு கொண்டு விலகினார். மேலும், தன் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கு முதல் மனைவி வினோதா மற்றும் சிவக்குமார்தான் காரணம் எனவும் கருதினார்.

இந்நிலையில், வினோதாவை தாக்கிய வழக்கில் 2013 ஜன.11-ம் தேதி காரைக்கால் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பிய ராமு மற்றும் அவரது 2-வது மனைவி எழிலரசி ஆகிய இருவரையும், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கினர். இதில் ராமு சம்பவ இடத்திலேயே இறந்தார். எழிலரசி பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் நீண்ட காலம் தீவிர சிகிச்சைப் பெற்று மீண்டு வந்தார்.

தன் கணவர் ராமு கொலை செய்யப்பட்ட சதியின் பின்னணியில் முதல் மனைவி வினோதாவும் அவருக்கு துணையாக விஎம்சி. சிவக்குமாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என எழிலரசி தரப்பினர் பலமாக நம்பினர்.

பழிக்குப் பழியாக கொலை

இந்தச் சூழலில் ராமு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான டிராவல்ஸ் உரிமையாளர் திருப்பட்டினத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தபோது 2013 ஜூலை 10-ம் தேதி நிரவி ஓஎன்ஜிசி அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

ராமுவின் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக கருதப்பட்டது. இந்தக் கொலை வழக்கில்தான் எழிலரசி முதன்முதலாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து எழிலரசி ஜாமீனில் வெளியே வந்திருந்த காலகட்டத்தில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் 2015 ஏப்.27-ம் தேதி ராமுவின் முதல் மனைவி வினோதா படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கிலும் எழிலரசி கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், எழிலரசி தரப்பினரால் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக திருமலைராயன்பட்டினம் காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்ததால் அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டு ஜன.3-ம் தேதி நிரவியில், கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த தனது புதிய திருமண மண்டப வளாகத்திலேயே மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் சிவக்குமார் கொலை செய்யப்பட்டார்.

பிரதான குற்றவாளி எழிலரசி

இவ்வழக்கில், எழிலரசி பிரதான குற்றவாளியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுவரை எழிலரசி உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து எழிலரசி புதுச்சேரியை அடுத்துள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் எழிலரசி மனுத்தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தனது கணவர் ராமுவின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கொலை செய்ய புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனின் உதவியை எழிலரசி நாடியதுடன், சிறையில் இருந்தபோது அதற்காக சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. மணிகண்டன் சிறையில் இருப்பதால் அவரது மகன் டேவிட்டின் ஆதரவு, ஜாமீனில் வெளியே வந்த எழிலரசிக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் விழா நடத்துவதுபோல ரவுடிகளை ஒருங்கிணைத்துள்ளனர். அங்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவரான வழக்கறிஞர் ஆனந்த் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியபோது, மணிகண்டன் ஆதரவு ரவுடிகள் 14 பேருடன் எழிலரசியை போலீஸார் கைது செய்தனர். தற்போது எழிலரசி மீண்டும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எழிலரசி சிறையில் இருந்தாலும், அவர் குறி வைத்துள்ளவர்கள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடைபெறலாம் எனக் கருதி, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் ராமுவின் கொலைக்குக் காரணமானவர்கள் என எழிலரசி கருதும் டார்கெட் பட்டியலில் இன்னும் சிலர் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x