Last Updated : 09 Feb, 2018 10:15 AM

 

Published : 09 Feb 2018 10:15 AM
Last Updated : 09 Feb 2018 10:15 AM

சுடுகாட்டுப் பூ அன்னக்காமு: இவர் அரியமங்கலத்தின் பிதாமகள்

றந்துவிட்ட உறவுகளை மண் மூடுவதற்கு முன் கடைசியாக ஒருமுறை பார்க்க நினைக்கும் பெண்களுக்கு தெருக் கோடி வரைதான் அனுமதி. சடலத்தின் பின்னால் ஆற்றொணா துயரத்துடன் பின்தொடரும் பெண்களின் அழுகைச் சத்தம்கூட சுடுகாடு வரை எட்டுவதில்லை.

ஆனால் சுடுகாட்டிலேயே வாழ்கிறார் அன்னக்காமு. திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் உள்ள மதநல்லிணக்க சுடுகாட்டில் சடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் இருப்பவருக்கு அந்த சுடுகாடுதான் உலகம்.

நெருக்கமான உறவுகளை இழந்த துக்கத்துடன் சுடுகாட்டுக்கு வருவோரிடம் அன்னக்காமு காட்டும் ஆறுதலான அணுகுமுறை, அவர் மீது அன்பு செலுத்த வைத்துவிடுகிறது. இதனாலேயே சுடுகாட்டுப் பணியில் எந்த சுணக்கமும் இல்லாமல் சுறுசுறுப்பு காட்டுகிறார்.

தனது பணியும் தனது வாழ்வும் குறித்து, நம்மிடம் அவர் கூறியது:

என் கணவர் அமாவாசைதான் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் இருந்தார். அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதால், அவருக்கு உதவி செய்வதற்காக அவ்வப்போது நானும் சுடுகாட்டுக்கு வருவேன். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. 2013-ல் கணவர் திடீரென இறந்துவிட்டார். 3 பெண் குழந்தைகள். வேறு வேலை தெரியாத எனக்கு, இந்த சுடுகாட்டு வேலையே நிரந்தமாகிவிட்டது. இங்கு வந்தபிறகு பேய், பிசாசு என ஒன்றுமில்லை என தெரிந்து கொண்டேன்.

அனைத்தையும் துறந்தவர் துறவி. அனைத்தையும் விட்டுவிட்டு உயிரில்லாத நிலையில் இங்கு கொண்டு வரப்படும் சடலங்கள், என்னைப் பொருத்த வரைக்கும் சாமியைப்போல. அதனால், சாமிக்கு என்ன மரியாதை செய்கிறமோ அதேபோல ஒவ்வொரு சடலத்தையும் அவர்கள் நம்பும் ஐதீக அடிப்படையில் பயபக்தியுடன் நல்லடக்கம் செய்வேன். இப்போ இந்த சாமிகள்தான் என்னை காப்பாற்றுகிறார்கள். சாமிக்கு சேவை செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இந்த வேலையில் பணத்தைவிட நான் புண்ணியத்தையே அதிகம் சம்பாதிக்கிறேன்.

இதுவரை ஆயிரக்கணக்கான சடலங்களை தனியாகவும் உதவியாளர்களுடனும் தகனம் செய்திருக்கிறேன். சுடுகாட்டில் அவரவர் வழக்கப்படி சடங்குகளைச் செய்வதுடன் சரி. இரவு எத்தனை மணி ஆனாலும் சடலம் எரிந்து முடியும் வரை சுடுகாட்டிலேயே காத்திருந்து, அதன்பிறகு குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குப் புறப்படுவேன் என்கிறார் அன்னக்காமு.

“எல்லோருக்கும் இறப்பு ஒரு நாள் வரும். அப்போது உடன் எதையும் கொண்டுபோவதில்லை. இருந்த வரை எப்படியோ இறந்தவர் வரப்போவதில்லை. இனி இருப்பவர்கள் மீதாவது அன்பு செலுத்துங்கள் என எனக்கு தெரிந்ததை கூறுவேன். சுடுகாட்டுக்கு வரும் பலரும் இதைக் கேட்டு கண் கலங்கியபடி ஆமோதிப்பார்கள்” என்கிறார் அன்னக்காமு.

இறப்புக்குப் பிறகும் ஒருவர் வாழ வேண்டுமானால் இருக்கும்போதே பேதமற்ற அன்பையும் சமூகத்தின் மீதான மாசற்ற அக்கறையுடனும் வாழ வேண்டும் என்பதைத்தான் சொல்ல வருகிறார் அன்னக்காமு. காட்டுப்பூவுக்கு மனமிருக்காது என கூறுவதுண்டு. இந்த சுடுகாட்டுப் பூவுக்கு மனமும் இருக்கிறது நல்ல குணமும் இருக்கிறது.

வாழ்த்துவதற்குரிய சமூகப் பணிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x