Published : 03 Jan 2018 07:23 PM
Last Updated : 03 Jan 2018 07:23 PM

யானைகளின் வருகை 111: காணாமல் போன காட்டு மாடுகளின் புகலிடம்

நீலகிரியில் பீன்ஸ், அவரை, பட்டாணி, நூல்கோஸ், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட் என காய்கறி விவசாயம்தான் அதிகம். இவற்றை ஒன்றைக்கூட இவை விடுவதேயில்லை. காடுகளின் பரப்பளவு குறைந்து நிறைய நிலங்கள் எஸ்டேட்டுகள் ஆகிவிட்டன. இருக்கிற காடுகளிலும் உணவு, தண்ணீர் இல்லை. கடும் வறட்சி. அதனால்தான் அவை ஊருக்குள் வர ஆரம்பித்தன. அப்படியே இப்போது அவை பழகியும் விட்டன.

''தவிர 10 வருஷத்துக்கு முன்பு இந்த காட்டு மாடுகள் வேட்டை பெருமளவு நடந்தது. கேரளத்தில் இதன் இறைச்சியை விற்க ஒரு கூட்டமே அலைந்தது. அந்த வேட்டைக்கு தடைபோட்டதோடு, இதில் கண்காணிப்பும் தீவிரமானது. அதனால் இதன் பெருக்கமும் பல மடங்கு உயர்ந்தது. காடுகள், அதற்கேற்ற புல்வெளி, அதற்கேற்ப மாடுகள், அதற்கேற்ப புலி என உயிர்ச்சூழல் சங்கிலி என்பார்களே! அது சுத்தமாக தடைபட்டுவிட்டது. எனவேதான் இவை ஊருக்குள் இவ்வளவு சுற்றித் திரிகின்றன. ஒவ்வொரு பொழுதும் காட்டுமாடுகளுடனேயே விடிகிறது!'' என்கிறார் இந்த காட்டுமாடுகளைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை நீலகிரியின் பல்வேறு இடங்களில் நடத்திய கானுயிர் புகைப்படக் கலைஞர் மதிமாறன்.

''கோத்தகிரி டவுனுக்குள்ளேதான் எங்களுடைய அணையட்டி பகுதியும் உள்ளது. இங்கே மட்டும் 400 காட்டு மாடுகள் திரிகிறது. வீட்டை திறந்தால் 25 மாடுகளாவது முன்பக்கமாக அலைகிறது. அவற்றில் சில வாசலில் நின்றுதான் குட்டிக்கு பால் கொடுக்கிறது!'' என்கிறார் இவர் வேடிக்கை ததும்ப.

ஊருக்குள்ளேயே வாழும் இந்த காட்டு மாடுகளுக்கு என்னதான் தீர்வு?

நீலகிரி வடக்கு மாவட்ட வன அதிகாரி கலாநிதியிடம் பேசியபோது, ''மக்களும், காட்டு மாடுகளும் ஒன்றுக்குள் ஒன்றாகவே வாழ்வதே வழக்கமாகிவிட்டது. அது அவர்களுடன் பழகிவிட்டது. நெருக்கத்தில் அதனிடம் 60 மீட்டர் தொலைவுக்குள் செல்லும்போதுதான் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் காடுகளில் புற்கள் இருக்காது. அந்த சமயம் மட்டும் வெளியே உணவுக்காக அவை வரும். இந்த ஆண்டு கூடுதல் வறட்சி என்பது அனைவருக்குமே தெரியும். எனவேதான் கூடுதலான எண்ணிக்கையில் இவை ஊருக்குள் சுற்றித் திரிகின்றன. எனவே அதன் கிட்ட போகவேண்டாம் என்று தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளோம்!''என்று குறிப்பிட்டார்.

இவர் இப்படிச் சொன்னாலும் நீலகிரி காடுகளில் சாதுவாக திரிந்த காட்டு மாடுகளுக்கு நடந்த துன்பம் சொல்லி மாளாது. அதைக் காட்டி கறியாக்கி கேரளாவிற்கு விற்ற கும்பல் நிறைய என்றால் அதையும் தாண்டி அவை நிறைந்து வாழ்ந்த பிரதேசமே அழிக்கவும்பட்டிருக்கிறது என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். அதற்கு முக்கிய உதாரணம் பைசன்ஸ் வேலி பள்ளத்தாக்கு சம்பவம் என்றும் கோடி காட்டுகிறார்கள்.

ஊட்டியிலிருந்து மசினக்குடி செல்லும் சாலையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தப் பள்ளத்தாக்கு. இங்கு காட்டு மாடுகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக மேய்வதோடு, சீசனுக்கு சீசன் யானைகளும் இங்கே வந்து குவிந்துவிடும்.

தவிர இங்கே மான் கரடி, செந்நாய், புனுகுப்பூனை, சில சமயம் புலி, சிறுத்தைகள் தென்படுவதும் உண்டு. நீலகிரி வடக்குக் கோட்ட வனத்துறை அதிகாரியின் கட்டுப்பாட்டில் வரும் இப்பகுதியில் சின்னதாக ஒரு குழி தோண்டுவதானாலும், அடர்ந்து வளர்ந்து நிற்கும் புற்களைப் பிடுங்குவதென்றாலும் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறையை எல்லாம் தலைகீழாக்கிவிட்டது இங்கே 9.12.2004 அன்று நடந்த சம்பவம். அன்றைய தினம் இங்குள்ள எஸ்டேட்டுக்காரர்கள் இரண்டு புல்டோசர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பாறைகளை உடைத்துச் சாலை போட்டிருக்கிறார்கள். இங்குள்ள மலைப்பாறைகளை உடைக்க சரமாரியாக வெடி மருந்துகளையும் பயன்படுத்தியுள்ளனர். வெடிச் சப்தத்தில் அரண்டு போன காட்டு மாடுகள் (இதை இப்பகுதி மக்கள் காட்டெருமைகள் என்றே அழைக்கிறார்கள்) யானைகள் என்றில்லை. காக்கா, குருவிகள் கூட பஞ்சாய் பறந்திருக்கின்றன.

இந்நிலையில் இவ்வழியே சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் வெடிச்சத்தம் கேட்டு அதிர்ந்து போய் அங்கே சென்று பார்த்துள்ளனர். இரண்டு புல்டோசர்களுடன் பாறைகள் உடைபட்டு, 25க்கும் மேற்பட்டவர்கள் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்ததையும் கண்டுள்ளனர். அதிர்ச்சியுடன் அப்போதைய வனத்துறை அதிகாரி அசோக் உப்ரத்தி முதற்கொண்டு உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று தகவல் கொடுத்துள்ளனர். வழக்கம்போல் அதிகாரிகள் தரப்பில் மெத்தமனமே இருந்திருக்கிறது.

ஆனால் இவர்கள் விடவில்லை. சுற்றுப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை திரட்டிக் கொண்டு எஸ்டேட்டையே முற்றுகையிட்டு விட்டனர். அதனால் சாலைப் பணியில் ஈடுபட்டவர்கள் அலறிப் புடைத்து ஓடிப்போக, இரண்டு புல்டோசர்களை மட்டும் பிடித்து வைத்துள்ளனர். அதை வைத்து வழக்கு போட்டனர் போலீஸார். இந்த பிரச்சினையை அதிகாரிகள் மத்தியில் கொண்டு போன தமிழக பசுமை இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் அப்போது பேசினார்.

இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள தனியார் தோட்டங்கள் அனைத்தும் தமிழக அரசின் காடுகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த எஸ்டேட் பகுதியை ஓய்வு பெற்ற முதன்மை வனப் பாதுகாவலர் சங்கரமூர்த்தி தலைமையில் ஒரு குழு 2003 ஏப்ரலில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், ''இது முழுக்க, முழுக்க யானைகளின் வழித்தடம். காட்டு மாடுகள் நிறைந்து வாழும் பகுதி. எனவே பக்கத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டையும் அரசே விலை கொடுத்து வாங்கி வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்!'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அதை வனத்துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார். அப்படிப்பட்ட முக்கியத்துவம்மிக்க பகுதியில்தான் இப்படியொரு அடாத செயல். இப்போது இரண்டு புல்டோசர்களை வைத்து சாதாரண வழக்குதான் இதில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியே அவர்கள் அகப்பட்டாலும் ஈஸியாக அபாரதம் செலுத்தி வெளியில் வந்து விடலாம். வரும் காலங்களில் இதனை தண்டிக்க கடுமையான விதிமுறைகள் வனத்துறையால் இயற்றப்படவேண்டும்!'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது நடந்து சில மாதங்கள் கழித்து இன்னொரு சாலை விவகாரம். அதில், ''உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காத நீலகிரி மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போகிறோம்!'' என்று ஆவேசமாக கிளம்பியிருந்தார் இதே தமிழக பசுமை இயக்கம் ஜெயச்சந்திரன். அதுவும் வனப்பகுதிக்குள் நடந்த சாலைப் பணி சம்பந்தமானதுதான்.

பொதுவாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எந்த கட்டுமானப் பணிகள் செய்வதென்றாலும் ஜனாதிபதியின் ஒப்புதல் வாங்க வேண்டுமென வனச்சட்டம் சொல்கிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டராக முத்துசாமி இருந்தபோது கூடலூர் வனப்பகுதியில் சாலை போட கான்ட்ராக்ட் விடப்பட்டது. அம்மன்காசு- பொன்னானி, கோட்டப்பாடி- முருக்கம்பாடி, கொலப்பள்ளி-, சன்னக்கல்வி- அம்பல மூலை, கோழிக்கொள்ளி- புளியம்பாறை போன்ற பகுதிகளுக்கு சாலை அமைக்க அனுமதிக்கப்பட்டது. இதற்காக பிரதான் மந்திரி சதக் யஜ்வனா என்ற திட்டத்தின் மூலம் ஐந்து கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மேற்படி கான்ட்ராக்ட் எடுத்தவர் அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சருக்கு நெருக்கம். அதனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலைப் பணி செய்ய சட்டப்படி அனுமதி பெறாமல் வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் வளைந்து கொடுத்து இந்த அனுமதியை கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது. தவிர, ரோடு வேலையை எடுத்தவர்கள் சாலையோரம் இருந்த மூங்கில்கள், ரோஸ்வுட் எனப்படும் ஈட்டி மரங்கள், மர நாற்றுகள் எல்லாம் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நாற்றுகள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x