Published : 29 Dec 2017 10:25 AM
Last Updated : 29 Dec 2017 10:25 AM

சபரியில் அனைத்தும் செய்யும் ஐயப்ப சேவா சங்கம்

ண்டல பூஜைகள் நிறைவடைந்து அடுத்ததாக மகர ஜோதி தரிசனத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது மணிகண்டனின் மகிமை பேசும் சபரி மலை. இங்கு தன்னார்வ சேவைகளில் ஈடுபடும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினரும் சற்றே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக மலையைவிட்டு கீழே இறங்கி யிருக்கிறார்கள்.

நெகிழ்ச்சி தரும் சேவை

சபரி மலையில் காவல் துறையினர், தேவசம் போர்டு ஊழியர்கள் என பலபேர் நம் கண்ணுக்கு பளிச்செனத் தெரிவார்கள். ஆனால், அதே சபரியில், தங்களை பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் ஐயப்ப பக்தர் களுக்காக எண்ணற்ற சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர். சபரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காகவே 1945-ல், ஐயப்ப சேவா சங்கம் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

 

 

இப்போதுள்ள தேவசம் போர்டு நிர்வாகம் வரும் முன்பே இந்த சங்கத்துக்காக பந்தள மகாராஜா சபரி மலையில் இடம் ஒதுக்கித் தந்தார். தொலைத்தொடர்பு வசதிகள் அவ்வளவாய் இல்லாத அந்தக் காலத்தில், வழிதவறி நிற்கும் பக்தர்களை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் ஒலிபெருக்கி அறிவிப்பு நிலையமாக மட்டுமே அப்போது ஐயப்ப சேவா சங்கம் இருந்தது. ஆனால், இன்றைக்கு இச்சங்கத்தினர் செய்யும் சேவைகளின் பட்டியலைப் பார்த்தால் மிகவும் நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

21 முகாம்கள்

தொடக்கத்தில் 12 பேருடன் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, தெலங்கானா, புதுச்சேரி என இந்திய அளவில் சுமார் 7 ஆயிரம் கிளைகள் பரப்பி நிற்கிறது இச்சங்கம். இதில், தமிழகத்தில் மட்டுமே மூவாயிரம் கிளைகள் இருக்கின்றன. இதனால்தானோ என்னவோ சேவையிலும் தமிழகமே முன்வரிசையில் நிற்கிறது.

 

ஐயப்ப சேவா சங்கத்தினர் ஆங்காங்கே அன்னதானம் அளிப்பார்கள் என்பது மட்டுமே பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் அதையும் தாண்டி பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரும் மகர ஜோதி வரையிலான 60 நாட்கள் சபரி மலைக்கு முக்கிய திருவிழாக் காலம். இந்த நாட்களில் எருமேலி தொடங்கி சபரி மலை சந்நிதி வரைக்கும் 21 இடங்களில் சேவா சங்கத்தின் சார்பில் முகாம் கள் அமைக்கப்படுகின்றன.

24 மணி நேர மருத்துவ சேவை

இந்த முகாம்களில் பக்தர்களுக்குச் சேவை செய்ய சுமார் மூவாயிரம் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் பணி செய்கிறார்கள். இதில், சேவா சங்கத்தினரோடு அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் கல்லூரி மாணவர்களும் கைகோர்க்கிறார்கள். மலையில் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் தருவது இந்தத் தொண்டர்கள்தான். (இப்போது,தேவசம் போர்டும் வழங்குகிறது).

 

டிசம்பர் கடைசியிலிருந்து ஜனவரி 15 வரை பெரிய பாதை வழியாக இருமுடி சுமந்து வரும் பக்தர்களுக்கு முக்கிய இடங்களில் அன்னதானம் வழங்குகிறது சேவா சங்கம். ஆஸ்துமா மற்றும் இதய நோயாளி களுக்கு சில நேரங்களில் மலைப் பாதையில் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும். அதற்காகவே சிறப்பு மருத்துவ மையங்களும் சேவா சங்கத்தால் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. திடீரென உடல் நலம் பாதிக்கப்படும் பக்தர்களை மீட்டு அவர்களை இந்த மையங்களுக்குக் கொண்டு வருவதற்காக 100 தன்னார்வ இளைஞர்கள் மலையில் 24 மணி நேரமும் தயாராய் இருக்கிறார்கள்.

இதுவும் இவர்கள் பணிதான்

இவர்களை வழிநடத்த சந்நிதானம் கேம்ப் அலுவலகத்தில் கேப்டன் ஒருவர் இருக்கிறார். வயர்லெஸ் மூலம் தகவல் வந்ததும் கேப்டன் விசில் கொடுப்பார். அடுத்த சில நிமிடங்களில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பக்தரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு முதலுதவி மையத்துக்கு வந்துவிடுவார்கள் தன்னார்வலர்கள். அதன்பிறகும் மேல்சிகிச்சை தேவைப்பட்டால் அப்படியே பம்பாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுவந்து அட்மிட் செய்கிறார்கள்.

 

 

எப்போதாவது, எதிர்பாராத விதமாக ஒருசில பக்தர்கள் வழியிலேயே சரணம் ஆகிவிடுவதும் உண்டு. அதுபோன்ற சமயங்களில் அவர்களின் உடலை பம்பா மருத்துவமனைக்குக் கொண்டு வந்து மருத்துவரிடம் முறையாக இறப்புச் சான்றிதழ் பெற்று, அதன்பிறகு உடலை சேவா சங்கத்தின் இலசவ ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலம் மாவட்ட தலைநகரான பத்தினம்திட்டாவுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கே, சலுகைக் கட்டணத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, சம்பந்தப்பட்டவரின் ஊருக்கு உடலை அனுப்பிவைக்கிறார்கள் சேவா சங்கத்தின் தன்னார்வலர்கள்.

கொடையாளர்கள் தரும் ஆதரவில்..

கடந்த ஆண்டு மண்டல பூஜையின்போது மலையில் நடந்து வந்துகொண்டிருந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கால் தடுமாறி பாதாளத்தில் விழுந்தார். உயிர் பிரிந்த நிலையில் மலைச் சரிவில் தொங்கிக் கொண்டிருந்த அவரது உடலை தங்கவேலு என்ற தன்னார்வலர் தலைமையிலான குழுவினர்தான் மீட்டு மேலே கொண்டு வந்தனர். சாமானியர் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரைக்கும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தன்னார்வலர்களாக இருக்கிறார்கள். ஓய்வுபெற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் இதில் இருக்கிறார்கள்.

 

 

சங்கத்து உறுப்பினர்களின் உதவியாலும் வெளியிலிருந்து கொடையாளர்கள் தரும் ஆதரவிலும் ஐயப்ப பக்தர்களுக்கான இந்த உன்னத சேவைகளை ஓய்வின்றி தொடர்கிறது சங்கம். மண்டல பூஜை, மகரவிளக்கு விழாக்கள் மட்டுமல்லாது தமிழ் மாதங்களின் முதல் வாரத்தில் ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் நாட்களிலும் இவர்களின் இந்த நற்பணிகள் தொடர்கின்றன.

தினமும் 15 ஆயிரம் பேருக்கு

இதுகுறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழக செயலாளர் கே.ஐயப்பன் நம்மிடம் பேசுகையில், “1970-க்கு முன்பு வரை சபரி மலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்துக் கஞ்சி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்து ஐயப்ப சேவா சங்கத்தினர் மெனக்கெட்ட பிறகுதான் நமது பகுதியில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் வழங்கப்பட்டது. காலையும் இரவும் டிபன், மதியம் சாப்பாடு. இப்படி, விசேஷ நாட்களில் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ஐயப்ப சுவாமிகளுக்கு அன்னமிடும் பாக்கியத்தை எங்களுக்கு அருளியிருக்கிறார் ஐயப்பன்.

 

சபரி மலையில் மட்டுமல்ல.. எங்களது சேவா சங்கத்தினர் தங்களது பகுதிகளில் முடிந்தவரை மக்கள் சேவை செய்கிறார்கள். உதாரணத்துக்கு, சென்னை கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் மாதத்தின் அத்தனை நாட்களும் இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம். ஐந்தாவது ஞாயிறு வரும் மாதங்களில் சென்னைக்கு வெளியே ஏதாவதொரு கிராமத்தில் இந்த முகாமை நடத்துகிறோம். இந்த முகாம்களில் ஒரு மாதத்துக்கான மருந்து மாத்திரைகளையும் நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்.

ஆலோசனை நடத்துவோம்

சபரி மகர ஜோதி திருவிழா முடிந்ததும் எங்களது சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்துவோம். அப்போது, அந்த ஆண்டு திருவிழாவின் போது எங்கள் தரப்பில் இருந்த கவனக்குறைவுகள் என்ன, அடுத்த ஆண்டில் அதையெல்லாம் எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியெல்லாம் ஆக்கப்பூர்வமாக விவாதித்து அதை அடுத்த ஆண்டு அமல்படுத்துவோம். இப்படித் திட்டமிடுவதால் தான் எங்களின் ஐயப்ப சேவை தொய்வின்றி தொடர்ந்து நடக்கிறது” என்றார்.

 

யாருக்காகவும் காத்திருக்காமல் ஐயப்ப பக்தர்களுக்காக சேவை செய்யும் ஐயப்ப சேவா சங்கத்தினர் தான் சபரி மலை தொடங்கி பம்பா வரைக்கும் துப்புரவுப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் நடை சாத்தப்பட்டதும் மலையில் குவிந்திருக்கும் குப்பைகளை சங்கத்தின் தன்னார்வலர்களே அப்புறப்படுத்துகிறார்கள். மலையில் துப்புரவுப் பணிகளை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் இவர்கள், வழி நெடுகிலும் மலைப்பாதையில் சேர்ந்திருக்கும் குப்பைகளையும் அப்புறப்படுத்திக் கொண்டே வருகிறார்கள். நிறைவாக, பம்பா நதியில் பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டு ஊர்களுக்குத் திரும்புகிறார்கள்.

மண்டல பூஜை நாட்களில் சபரி மலையை சுத்தப்படுத்த, ‘புண்ணிய பூங்காவனம்’ என்ற புதிய திட்டம் ஒன்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் காலை 9 மணிக்கும் மாலை 3 மணிக்கும் சபரி மலையின் முக்கியப் பகுதிகளில் சிறப்புத் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணியிலும் ஐயப்ப சேவா சங்கத்தினர் பங்கெடுக்கிறார்கள்.

கொடி மரம் சுமந்தார்கள்

கடந்த ஜூன் மாதம் சபரி மலையில், 41 அடியில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டது. இந்தக் கொடி மரத்தை பம்பாவிலிருந்து ஐயப்பன் சந்நிதிக்கு தோள் தூக்காக தூக்கிச் சென்று சேர்த்தவர்கள் ஐயப்ப சேவா சங்கத்தினர்தான். இந்தப் பணியில் மட்டுமே ஒரே சமயத்தில் சுமார் இரண்டாயிரம் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

இதை பெருமிதத்துடன் நம்மிடம் தெரிவித்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழக தலைவர் எம்.விஸ்வநாதன், “ஐயப்ப சாமிகளுக்கு சேவை செய்யும் எங்களுக்கு ஐயப்பன் தந்த அனுக்கிரகமே அவரது கொடி மரத்தை சுமந்து சென்றது. இந்தப் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருமே முறையாக விரதமிருந்து தான் கொடி மரம் சுமந்தோம்” என்று சொன்னார்.

எங்களுக்கு கிடைத்த பாக்கியம்

தொடர்ந்தும் அவர் பேசினார். “மண்டல பூஜைக்கு முதல் நாள் பந்தளத்திலிருந்து ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி எடுத்துவரப்படும். (மகர ஜோதிக்காக கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி வேறு) பம்பாவி லிருந்து திருவாபரணப் பெட்டியைச் சுமந்து செல்லும் பாக்கியத்தையும் எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். திருவாபரணப் பெட்டியை சுமந்து செல்லும் வழியில் சரங்குத்தி முதல் சந்நிதானம் வரை எங்களது தொண்டர்கள் சீருடை அணிந்து வரிசையாக நின்று வரவேற்புக் கொடுப்பார்கள்.

அதுபோல, ஜூன் மாதத்தில் வரும் ஆராட்டு விழாவின் போது உற்சவ மூர்த்தி ஐயப்பன் யானையில் அமர்ந்து பம்பாவுக்கு வருவார். அப்போதும் எங்களது தொண்டர்கள் சீருடையில் அணிவகுப்பு மரியாதை செய்வார்கள். வழக்கமாக இருமுடி சுமக்காதவர்கள் பதினெட்டாம் படியில் ஏறமுடியாது. ஆனால், திருவாபரணப் பெட்டி சுமந்து செல்லும்போது எங்களில் நான்கு பேரை இருமுடி இல்லாமல் படி ஏறவும் அனுமதிக்கிறது தேவசம் போர்டு. இதுவும் அந்த ஐயப்பன் எங்களுக்குத் தந்திருக்கும் வரம்தான்” நெகிழ்ந்துபோய் சொன்னார் விஸ்வநாதன்.

படங்கள் உதவி: திருச்சி ஸ்ரீதர்,

மதுரைமணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x