Published : 13 May 2014 08:33 PM
Last Updated : 13 May 2014 08:33 PM

தனுஷ்கோடியை எட்டும் இலங்கை செல்போன்களின் சிக்னல்: கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்?

இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின.

இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்போன் நிறுவனங்கள் பல இலங்கையில் தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன.

தற்போது இலங்கையிலுள்ள தலைமன்னார் துறைமுகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவை 30 கி.மீ. தூரம் வரை துல்லியமாக கிடைக்கிறது. இதனால் கடத்தல்காரர்களுக்கு இவை பெரும் உதவியாக உள்ளதாம்.

கச்சத்தீவு, இந்திய - இலங்கை மணற்தீடைகள் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் இலங்கை செல்போன் நிறுவனங்களின் சேவை எட்டுவதால் கடத்தல் கும்பல்கள் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொண்டு படையினரிடம் இருந்து டிமிக்கி கொடுத்து விட்டு எளிதாக தப்பி விடுவதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோவிற்கும் அதிகமான தங்கக் கடத்தலை காவல்துறையினர் பறிமுதல் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x