Published : 26 Oct 2014 12:15 pm

Updated : 27 Oct 2014 11:26 am

 

Published : 26 Oct 2014 12:15 PM
Last Updated : 27 Oct 2014 11:26 AM

காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்!

ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று!

இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன.

எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்தபோது எடுத்த புகைப்படம் கிடைத்துவிட்டது. அந்தப் புகைப்படத்தில் நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுக்குள் 'போட்டா'போட்டி!

காரை பெயர்ந்த பள்ளிக்கூடத்தின் பின்புறம் செங்கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் சுவரின் பின்புலத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தின் நடு நாயகமாக உட்கார்ந்து இருப்பது மரிய சூசை சார். வரிசையாக நிற்கும் அத்தனை பேரையும் வகுப்புக்குச் செல்ல வைக்க அவரால் மட்டுமே முடியும். புகைப்படத்தைச் சற்று அருகில் கொண்டுவந்தால் பெரிதாக மீசை வைத்துக்கொண்டிருக்கும் தமிழாசிரியர் 'தஸ்புஸ்'என்று மூச்சு விடுவது கேட்கக் கூடும். பெண் பிள்ளைகள் வரிசையில் உட்கார்ந்துகொண்டி ருக்கும் அமராவதி இப்போது எங்கே எப்படி உட்கார்ந்து கொண்டிருப்பாள்? ரெட்டை மண்டை கோவிந்தராஜூ என் அருகில்தான் உட்கார்ந்திருக்கிறான். கூப்பிட்டால் போதும் ஓடி வந்துவிடுவான் என்னோடு விளையாட. 44 ஆண்டுகள் தள்ளி அல்லவா உட்கார்ந்திருக்கிறான். அவன் காதில் விழுமா என் அழைப்பு? பதினாறாம் வாய்ப்பாட்டைத் தலைகீழாக ஒப்பிக்கும் ரங்கனை எப்படியாவது இந்தப் புகைப்படத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டும். அண்மையில் கேள்விப்பட்டேன்: அவன் இப்போது நகராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்க்கிறானாம்!

'ஒளிபடைத்த கண்ணினாய் வா வா'என்று கீச்சுக்குரலில் பாடும் இந்திராவையும் இப்போதே காப்பாற்றியாக வேண்டும். போன வருஷம் மனநோயாளியாக தற்கொலை செய்துகொண்டாளாம் இந்திரா. போட்டோவில் எல்லோர் மீதும் மழை கொட்டுவதுபோல தாரைதாரையாக வெள்ளைச் சுவடுகள். எல்லோரும் மழையில் நனைந்து கொண்டு நிற்பதுபோல் இருக்கிறது. காலம்தான் மழையாகக் கொட்டுகிறது. காணாமல் போன பெண்!

பெட்டியை எதற்கோ குடைந்தபோது என் பழைய பர்ஸிலிருந்து ஒரு சின்னஞ்சிறு புகைப்படம் நழுவி விழுந்தது. ஒல்லியான உடம்புடன் கண்களில் வெட்கப் பிரகாசத்துடன் 'எனக்கு நீள முடியாக்கும்'என்று பீற்றிக்கொள்கிற மாதிரி தரையைத் தொடும் பின்னலை எடுத்து முன்னே விட்டுக்கொண்டு அந்த அழகிய பெண்! 'எந்த போட்டோவை அப்படி உத்து உத்து பாக்குறீங்க?' என்றாள் என் மனைவி. பெண் பார்க்கும் முன் எங்களுக்கு அனுப்பிய அவள் போட்டோதான் அது! 'இந்தப் பொண்ணு காணாம போயிட்டா! அவ போட்டோதான்!' என்றேன். முறைத்துவிட்டுப் போனாள் குண்டு உடம்பும் குழந்தைமை தொலைத்த முகமுமாய். 'கனமான' புகைப்படம்!

செத்துப்போனவர்களுக்கு மாலை போட்டு, நாற்காலியில் உட்காரவைத்து போட்டோ எடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அப்படியான ஒரு படம் எங்கள் வீட்டிலும் இருந்தது. இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்த என் தாத்தா - அவர் அருகே கண்ணீரும் கம்பலையுமாக என் பாட்டி - இடுப்பில் இரண்டரை வயதுக் குழந்தையாக மிரள விழித்தபடி என் அம்மா - ஒரு குடும்பம் நிராதரவாக நிற்கும் சோகத்தைச் சுமந்துகொண்டு பாட்டியின் வீட்டில் பல வருஷங்கள் அந்தப் படம் இருந்தது. என்னால் அந்தப் படத்தைத் தூக்கவே முடியாது என்று தோன்றும். சோகத்தைக் காட்சியாக்கி அந்தப் படத்துக்கு 'கனம்' ஏற்றியிருந்தது காலம்!

ஸ்டுடியோவுக்குக் குடும்பத்துடன் போய் போட்டோ எடுத்துக்கொள்வது குடும்ப விழாவாக அனுசரிக்கப்படும். ஆடை அணிகலன்களும், பவுடர் அப்பிய முகங்களும் ஜடையும் பூவுமாய் பெண்களும், புதுச்சட்டை சலவை வேட்டி சகிதம் ஆண்களுமாய் ஸ்டுடியோ விஜயம் நடக்கும். அங்கே போட்டோகிராபரின் அதட்டலும் பிரகாசமான விளக்குகளுமாய் ஆச்சரியமும் ஆனந்தமும் சொல்லி மாளாது! அதுவரை சிரிப்பும் கூத்துமாய் சந்தோஷமாய் இருப்பவர்கள் போட்டோவுக்கு நிற்கும்போது உம்மணாமூஞ்சியாய் மாறி விடுவார்கள்!

போட்டோகிராபர் கறுப்பு முக்காடு போட்டதும் பூச்சாண்டி மாதிரி இருப்பதாலோ என்னவோ எல்லாக் குழந்தை களும் கலவரத்துடன் காட்சியளிக்கிறார்கள். இப்போது புகைப்பட ஆல்பங்களின் காலமும் போய்விட்டது. ஐம்பது நூறு அல்ல; ஆயிரக்கணக்கான படங்கள். அவ்வளவும் ஒரு சின்னஞ்சிறு பென்டிரைவில் அல்லது மெமரி ஸ்டிக்கில் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள்.

லேட்டஸ்டாக செல்ஃபி வந்துவிட்டது! வர்ணமிழந்த வாழ்க்கைக்கு வண்ண வண்ண புகைப்படங்கள்! நழுவிச் செல்லும் கணங்களை நின்று ரசிக்க நேரமில்லாத இன்றைய மனிதன் அழகான நொடிகளை அடைத்து வைத்திருக்கிறான், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று!

- தஞ்சாவூர்க் கவிராயர்,கவிஞர், தொடர்புக்கு:thanjavurkavirayar@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

செல்ஃபிபுகைப்படங்கள்புகைப்படம்கிராமஃபோன்போட்டோபோட்டோகிராஃபர்பள்ளி நினைவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author