Published : 16 Jul 2014 10:15 AM
Last Updated : 16 Jul 2014 10:17 AM
சுனாமி தாக்குதலின்போது மக்களுக்கு ஆறுதல் சொல்ல கருணாநிதி செல்லவில்லை என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைமுருகன் பதிலளித்தார்.
பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தபிறகு நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:
சமூக நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் எங்கள் கட்சி உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது அமைச்சர் அடிக்கடி குறுக்கீடு செய்தார். சுனாமி தாக்குதலின்போது திமுக தலைவர் எதுவுமே செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதற்கு பதிலளிக்க முயற்சித்தபோது சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
சுனாமி வந்த நாளில் எங்கள் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். சுனாமி காலை 7 மணியளவில் வந்தது. ஆனால் மதியம் வரை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. சுனாமியெல்லாம் ஓய்ந்த பிறகு மாலையில் சென்று அவர் பார்வையிட்டார்.
ஆனால், திமுக தலைவரோ உடல்நிலை சரியானதுமே சென்னை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அங்கு நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதை மறைத்துவிட்டு எங்கள் தலைவர் எதுவுமே செய்யவில்லை என்று முதல்வர் சொல்கிறார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின், சுனாமி வந்தபோது முதல் ஆளாக கடற்கரை முதல் சீனிவாசபுரம் வரை சென்று அங்குள்ள மக்களுடன் இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இவற்றை சொல்ல எழுந்தால் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே, நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.