Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்

Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்
Updated on
4 min read

போரையும், போர்க்களத்தையும் அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்க மிகவும் ஏற்ற நாடு என்று கூறினால், வட/தென் கொரிய நாடு(கள்) தான். சித்தாந்த வேறுபாடுகளால் பிரிந்த இந்த நாடுகள், வரலாற்றின் காயங்களை சுமந்த நாடுகள். இன்னும் முடிவுறாத மோதலின் நினைவால் வடிவமைக்கப்பட்ட நாடுகள். அந்த வரலாற்றுக் காயங்களிலிருந்தே உலகின் சிந்தனையூட்டும் போர்த் திரைப்படங்கள் சில தென் கொரிய நாட்டில் இருந்து உருவாகின. அவற்றில் தனித்துவமாக திகழ்வது ‘வெல்கம் டூ டோங்க்மாகோல்’ (Welcome to Dongmakgol).

2005-ஆம் ஆண்டு வெளியான, பார்க் வாங்-ஹியூன் (Park Kwang-hyun) இயக்கிய இந்தப் படம் கற்பனை, நகைச்சுவை, சோகம், பிரிவு, குற்ற உணர்வு மற்றும் அரசியல் சிந்தனையை ஒன்றாக இணைத்து ஓர் ஆழமான போருக்கு எதிரான கருத்தை முன்வைக்கிறது. இது நம்மை ஒரே நேரத்தில் சிரிக்க வைக்கும், மனதை நொறுக்கும், மென்மையும் வேதனையும் கலந்த ஓர் அனுபவத்தை கொடுக்கும்.

முக்கியமாக, மனிதர்களின் அப்பாவித்தனத்தையும், ஒரு சாமானியனின் கோபத்தையும் கொண்டு போரின் விளைவுகளை காண்பிக்கும் ஒரு படம். 2007-ஆம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற சர்வதேச கொரிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் படம் இதுவே.

முதல் பார்வையில் இது ஒரு சாதாரண போர்ப் படமாகத்தான் தெரியும். ஆனால், மெல்ல மெல்ல காட்சிகள் நகர, அங்கே பெரிய போர் காட்சிகள், தேசப்பற்று உரைகள் அல்லது ராணுவ திட்டங்கள் எதுவும் தென்படவில்லை. அதற்கு பதிலாக, நவீன அரசியலால் தொடாத ஒரு மலையக கிராமத்தை படம் அறிமுகப்படுத்துகிறது.

அந்தக் கிராம மக்கள் இயற்கையுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். துப்பாக்கி, விமானம், அரசியல் சித்தாந்தம் போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்களைச் சுற்றி போர் நடக்கிறது என்பதையும் அவர்கள் அறியவில்லை. இதுவே, படத்தின் மிகப்பெரிய பலம்.

எதிர் எதிர் தரப்பில் உள்ள சிப்பாய்களை இந்த அமைதியான உலகுக்குள் கொண்டு வைக்கும்பொழுது படம் ஓர் எளிய, ஆனால் வலிமையான கேள்வியை எழுப்புகிறது. அது:

நவீன சமூகத்தால் நமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள சிந்தனைகளிலில் இருந்தும், பயம் மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்தும் மனிதர்கள் விலகி நின்றால் என்ன நடக்கும்?

1950-களின் கொரியப் போரின் பின்னணியில் கதை நகர்கிறது. மூன்று வட கொரிய சிப்பாய்கள், இரண்டு தென் கொரிய சிப்பாய்கள், மற்றும் ஓர் அமெரிக்க விமானி, எல்லோரும் தவறுதலாக டோங்க்மாகோல் கிராமத்தில் அடைக்கலம் தேடி வந்து சேருகின்றனர்.

வெளி உலகத்தில் அவர்கள் எதிரிகள். ஆனால், இந்த கிராமத்தில் அந்த அடையாளங்கள் மெதுவாக மறைகின்றன. அவர்களின் உடைகளில் இருக்கும் அரசியல் அடையாளங்கள் முக்கியமல்ல; உழைப்பு, சிரிப்பு, நிம்மதியான தூக்கம், ஒருவருக்கு ஒருவர் தரும் அன்பு – இவைதான் முக்கியம். டோங்க்மாகோல் மெதுவாக இவர்களை எதிரிகளில் இருந்து நண்பர்களாக மாற்றுகிறது.

இந்தப் படத்தின் மிகச் சிறந்த அம்சம், அதன் ‘டோன்’. பெரும்பாலான போர் படங்கள் பதற்றம் மற்றும் துயரத்தை மையமாகக் கொண்டிருக்கும். அதனால் போர்க் காட்சிகள் கோரமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கு இயக்குநர் வேறு ஒரு பாதையைத் தேர்வு செய்கிறார். நகைச்சுவை மூலம் போரின் அவலத்தை வெளிப்படுத்துகிறார்.

ஒரு முக்கியக் காட்சியில் சிப்பாய்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் மிரட்டும்போது, கிராம மக்கள் குழப்பமடைகின்றனர். அவர்களுக்கு அது வெறும் “குச்சிகள்” போலத் தெரிகிறது. இந்த ஒரு காட்சியில் வெளிப்படுத்தும் எளிய உண்மை இதுதான்: வெறுப்பு கற்றுக் கொள்ளப்படுவது; இயல்பானது அல்ல.

முதலில் பயந்தாலும், நேரம் கடக்க கடக்க அந்த கிராம மக்கள் அந்த சிப்பாய்களின் ‘மெக்சிகன் ஸ்டாண்ட் ஆஃபை’ அலட்சியமாக எடுத்துக்கொண்டு, அவர்களின் அன்றாட வேலையில் ஈடுபடுகின்றனர். சில தினங்களுக்குப் பிறகு அது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.

படத்தின் மிகவும் நினைவில் நிற்கும் ஒரு காட்சி, ஒரு குண்டு வெடிக்கும்போது சோளம் பாப்கார்னாக வானத்தில் பனி போல விழுகிறது. போரின் ஆயுதம் ஓர் அற்புதமாக மாறுகிறது. அந்த பாப்கார்ன் மழையில் நனையும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அதன் பின் அந்த கிராம மக்களின் சோளக் கிடங்கை அழித்தற்காக இரு தரப்பு சிப்பாய்கள் வெட்கப்படுகிறார்கள். குளிர்காலத்துக்காக உழைத்து சேர்த்து வைத்திருந்த உணவை அழித்துவிட்ட குற்ற உணர்வில் நிற்கின்றனர் சிப்பாய்கள்.

இந்தப் படத்தில் டோங்க்மாகோல் கிராமம் என்பது ஓர் இடம் மட்டுமல்ல. அது ஒரு சின்னம். அரசியல் பிரிவுகளுக்கு முன்பிருந்த ஒரு கொரியாவை அது குறிக்கிறது. படம் முழுவதும் இப்படி ஒரு கனவாக செல்லவில்லை, மாறாக இறுதியில் அந்தக் கிராமத்தையும் போர் தாக்குகிறது. அதுவே கதைக்கு உணர்ச்சியும் வலிமையும் தரும் தருணமாக மாறுகிறது.

இந்தப் படத்தின் ஆழத்தில் வலிமை கொண்ட நாடுகளின் போர் வெறியால் சரியாக புரிதல் இல்லாத இளம் சிப்பாய்களின் அறியாமையையும் கண்மூடித்தனமான சித்தாந்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறார் இயக்குநர்.

காங் ஹையி-ஜுங் (Kang Hye-jung) நடித்த யியோ-யில் (Yeo-il) என்ற கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அவள் குழந்தை போன்றவள். எதிரி என்ற கருத்தே அவளுக்குத் தெரியாது. அவளே கதையின் இதயத் துடிப்பு. அவளின் இழப்பு தரும் சோகம்தான் அங்கே கிராம மக்களும், சிப்பாய்களும் உணரும் முதல் மனக்கசப்பு.

படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல மனிதர்களை இணைக்கிறது. சாப்பாடு, உழைப்பு, சிரிப்பு - இவற்றால் எதிரிகளாக நின்ற மனிதர்களின் மனதில் ஒரு நட்புக்கான நம்பிக்கையை உருவாக்குகிறது அந்த கிராமத்தின் சூழல்.

ஒரு காட்டுப் பன்றி தாக்கும் காட்சி மிகவும் முக்கியமான ஒன்று. அந்தப் பன்றி போரின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதை வென்ற பிறகு அனைவரும் ஒன்றாக இணைகிறார்கள். எதிரிகள் அனைவரும் நண்பர்களாக மாறுகிறார்கள். இதில் என்னவென்றால், அந்த கிராம மக்கள் சுத்த சைவம்.

இரு தரப்பு சிப்பாய்களும் அந்த காட்டுப் பன்றியை கொன்ற பின், மக்கள் அதை புதைக்க, வெகு நாட்களாக அசைவம் சாப்பிடாத அந்த சிப்பாய்கள் இரவில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அந்த பன்றிக் கறிக்காக ஒன்றுகூடுவது நம்மை சிரிக்க வைக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும், இதில் அரசியல் சதஜ் தாந்தமும் ஒன்று போல. அடிப்படையில் வேறொருவர் ஊட்டி வளர்த்த சித்தாந்தத்தில் நமக்கு நம்பிக்கையில்லை என்றால் அதற்கு ஆயுள் காலமும் கம்மிதான்.

“இவர்கள் தான் எதிரி”, “அவர்கள் தான் எதிரி” என்று கற்றுக் தருகிறது அரசியல் சூழல்கள். ஆனால், அருகில் வாழும்போது எதிர் தரப்பு மனிதர்கள் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் என்பதைக் காட்சிகள் வாயிலாக காணமுடிகிறது.

படத்தின் இறுதிப் பகுதி மிகவும் உணர்ச்சிமிக்கது. கிராமத்தை காப்பாற்ற சிப்பாய்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள். அவர்கள் போருக்காக அல்ல, அந்த கிராமத்தின் அமைதிக்காக இறக்கிறார்கள்.

இந்தப் படம் நமக்கு ஒரு தீர்வும் சொல்லாது. ஆனால், ஓர் உண்மையை நினைவூட்டுகிறது. அமைதியான ஒரு சூழலில், இக்கட்டான ஒரு நிமிடங்களில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.

இது ஒரு சாதாரண போர்ப் படம் அல்ல. இது மனிதம் பற்றிய ஒரு கதை. இது சிரிக்க வைக்கும், அழ வைக்கும், சிந்திக்க வைக்கும். அதன் மென்மைதான் அதன் வலிமை. இன்றும் இந்தப் படம் பொருத்தமானதாக இருப்பதற்குக் காரணம், உலகம் இன்னும் பிரிவினைகளால் நிரம்பியுள்ளது.

மொத்தத்தில், ‘வெல்கம் டூ டோங்க்மாகோல்’ ஓர் அரிதான படம். இது ரசிக்க வைப்பது மட்டுமல்ல, மனதை மாற்றும். எதிரிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், நட்பு இயல்பாக வருகிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய உண்மை. இந்தப் படத்தை நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கண்டு நல்ல திரை அனுபவம் பெறலாம்.

> தொடர்புக்கு: drmanoideunom@gmail.com

Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்
Silenced: மக்களின் ‘மவுனம்’ கலைத்து சட்டத்தையே மாற்றிய கொரிய படைப்பு | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in