Secret Stories: Roslin - ஜீத்து ஜோசப் மேற்பார்வையில் ‘ஸ்லோ பர்ன்’ தொடர் எப்படி? | ஓடிடி விரைவுப் பார்வை

Secret Stories: Roslin - ஜீத்து ஜோசப் மேற்பார்வையில் ‘ஸ்லோ பர்ன்’ தொடர் எப்படி? | ஓடிடி விரைவுப் பார்வை
Updated on
1 min read

அறிமுக இயக்குநர் சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் ஜீத்து ஜோசப்பின் மேற்பார்வையில் வெளியாகியுள்ள மலையாள வெப் சீரிஸ் 'சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின்'. 

17 வயதான ரோஸ்லின் (சஞ்சனா தீபு), தொடர்ச்சியாக வரும் ஒரு கெட்ட கனவால் அவதிப்படுகிறார். ஒரு மர்ம மனிதன் தன்னைத் துரத்துவது போலவும், தாக்க வருவது போலவும் அவருக்குக் கனவு வருகிறது. எதிர்பாராத விதமாக, அதே மர்ம மனிதன் ஜெரி (ஹக்கிம் ஷாஜஹான்) நிஜ வாழ்க்கையிலும் ரோஸ்லின் வீட்டிற்கு விருந்தினராக வந்து தங்குகிறார்.

அவரது பெற்றோர் ஜான் (வினீத்) மற்றும் சோபா (மீனா) இருவரும் ஜெரியை முழுமையாக நம்புகிறார்கள். ஆனால் ரோஸ்லின் மட்டும் அவரை சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார். கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தில், அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே இத்தொடரின் கதை.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' படத்தின் மூலம் ஈர்த்த சஞ்சனா தீபு, இத்தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் பயம், குழப்பம் மற்றும் கோபத்தைத் தனது நுட்பமான நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மீனா, வினீத் இருவருடைய நடிப்பும் கச்சிதம். ஹக்கிம், தனது உடல்மொழி மற்றும் பார்வையின் மூலமே பார்வையாளர்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்குகிறார்.

தொடரின் பின்னணி இசை மற்றும் கேமரா வேலைப்பாடுகள் ஒரு த்ரில்லர் படத்திற்கான சூழலை மிகச்சரியாக உருவாக்கியுள்ளன.

முதல் ஐந்து எபிசோடுகள் மெதுவாகவே நகர்கின்றன. எனினும் ஒரு சிட்காம் தொடரைப் போல ஒவ்வொரு எபிசோடும் குறைவான கால அளவை கொண்டிருப்பது ஆறுதல். ஆறாவது எபிசோடில் வரும் அந்த 'ட்விஸ்ட்' எதிர்பாராத விதமாக அமைந்திருந்தது பலம்.

ஸ்லோ பர்ன் பாணியிலான தொடர் என்றாலுமே கூட, ஆரம்ப எபிசோடுகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மிக மெதுவாக நகர்வது அயர்ச்சியைத் தருகிறது.வசனங்கள் பல இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நாடகத் தன்மையுடன் உள்ளன. சில காட்சிகள் ஏற்கெனவே பார்த்த பல த்ரில்லர் படங்களை நினைவூட்டுகின்றன. எனினும் கடைசி எபிசோடில் வரும் திடீர் திருப்பம் முந்தைய குறைகளை மறக்க செய்து விடுகிறது.

மெதுவாக நகரும் கதைக்களங்களை ரசிப்பவர்களுக்கும், கிளைமாக்ஸ் திருப்பங்களை விரும்புபவர்களுக்கும் இது விருந்தாக அமையலாம். மற்றபடி, ஒரு விறுவிறுப்பான த்ரில்லரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை தரலாம். ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது. 

Secret Stories: Roslin - ஜீத்து ஜோசப் மேற்பார்வையில் ‘ஸ்லோ பர்ன்’ தொடர் எப்படி? | ஓடிடி விரைவுப் பார்வை
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in