

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சர்ச்சையாகி, அதன் இயக்குநர், தயாரிப்பாளார், நடிகைகள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினர் வரை அத்தனை பேரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் நையப்புடைக்கப்படுவது சினிமா வரலாற்றில் புதிதல்ல. அதுதான் 2025-ல் வெளியான ‘பேட் கேர்ள்’ (Bad Girl) படத்துக்கும் நேர்ந்தது.
வெற்றிமாறன் - அனுராக் காஷ்யப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில், அஞ்சலி சிவராமன், சாந்தி ப்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் நாட்டர்டம் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. ஆனால், இங்கே ட்ரெய்லர் வெளியானது தொட்டே போதும், போதும் என்றளவுக்கு கல் வீச்சுகளை சந்தித்தது. இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
வெறும் ட்ரெய்லரை மட்டுமே பார்த்துவிட்டு ‘கலாச்சார சீரழிவு’ என்று பக்கம் பக்கமாக எழுதி பரீட்சைக்குக் கூட கேட்காத அடிஷனல் பேப்பரையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர்.
அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் படத்தில் என்று கேட்கிறீர்களா?.
‘பேட் கேர்ள்’ ரம்யா ஒரு பாரம்பரிய இந்துக் குடும்பத்தில் பிறந்தவள். பதின்ம வயதிலிருக்கும் அவளுக்கு சடங்கு, சம்பிரதாயங்கள், பெண் பிள்ளைகள் மீதான கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை. விடலைப் பருவ ஹார்மோன் விளையாட்டுகளும் அதில் சேர்ந்துகொள்ள, அதற்குத் தெளிவான வழிகாட்டுதல் தரும் பெற்றோர், ஆசிரியர், உறவு, நட்பு இல்லாமல் சமூகத்தின் எந்தப் பக்கத்திலும் கரை சேர இயலாமல் தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்கிறாள்.
தவறு செய்கிறாள், அதை திரும்பத் திரும்பச் செய்கிறாள், எல்லோரையும் உதாசீனப்படுத்துகிறாள், தன்னை நொந்து கொள்கிறாள், தன்னையே வதைக்கிறாள், குழம்புகிறாள் ஒருகட்டத்தில் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்ய எத்தனிக்கிறாள். ரம்யாவின் ட்ரான்சிஷன் (Transition) தான் இப்படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ ஜானர் திரைப்பட வரிசையில் ‘பேட் கேர்ள்’ நிச்சயமாக மிக நுட்பமான படம். ஆகையால், படத்தை ‘கலாச்சார காவல்’ லென்ஸ் இல்லாமல் பார்க்க பரிந்துரைக்கிறேன். அப்போதுதான் என்ன சொல்கிறார்கள் என்பதை சரியாக உள்வாங்க முடியும்.
இருப்பினும், ரம்யாவை ஒரு குறிப்பிட்ட சமூகம், மதத்தில் மட்டும் அடையாளப்படுத்தாமல் படத்தை உருவாக்கியிருந்தால் இன்னும் பெரிய வீச்சு கண்டிருக்கும் என்பது பலரின் நிலைப்பாடாகவே உள்ளது. தனக்கான ஒரு ஸ்பேஸ், அதில் ஒரு பாய் ஃப்ரெண்ட் அதுதான் ரம்யாவின் பதின்ம வயது ‘கோல்’. அப்படியான ஒரு ஃபேன்டஸி கனவோடுதான் படமே தொடங்கும்.
அந்தக் குழப்பங்களின் ஊடே தான் உருவாக்கி வைத்துள்ள ஒரு ஃபேன்டஸி உலகுதான் சரியானது, சிறந்தது, தனக்கு பொருத்தமானது என்று அனுமானிக்கும் ரம்யா, அதற்கு வீடும், பள்ளியும், சமூகமும் முட்டுக்கட்டை போடும்போது ‘பிரேக் தி ரூல்ஸ்’ என்று முறுக்குகிறாள்.
வாழ்க்கையின் யதார்த்தம் புரியாத வயதில் இருக்கும் அவளைத் துரத்துகிறது ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்ற கேள்வி.
படத்தில் ரம்யாவை 17 வயதில், 20-களில், 30-களில் என்று மூன்று வெவ்வேறு காலக்கட்டத்தில் காணலாம். ஆனால், எல்லா காலக்கட்டத்திலுமே அந்தக் கேள்வி அவள் மனதில் வெவ்வேறு பரினாமங்களில் எழுகிறது.
பதின்ம வயது ரம்யா, “திண்ணை வெச்ச வீடு, குட்டி குருவி கூடு, என் கூடவே இருப்பியாடா? கட்டிப் புடிச்சு தூங்கலாம், கத்தி சிரிச்சு பேசலாம்...” என்ற கனவுப் பாடலோடுதான் நம் முன்னால் நிற்பாள்.
முழுக்க முழுக்க ஹார்மோன் மாற்றங்களுக்கு தன்னை இழந்த சராசரி பெண்ணான அவளை, பள்ளிக்கூட பியர் பிரெஷர் இன்னுமே அழுத்துகிறது. செல்போன்கள், இன்டர்நெட் வசதி என தொழில்நுட்ப சாதனங்களும், மெசேஜிங், மெயில், ஆர்குட் போன்ற கிளை சேவைகளும் கிடைக்கப்பெற்ற முதல் தலைமுறை சந்தித்த பிரச்சினைகள் க்ளாஸ் ரூம் காட்சிகளில் இயல்பாகக் கடத்தப்பட்டிருக்கிறது.
பதின்ம வயது பள்ளிக்கூட இன்ஃபேச்சுவேஷனை சுற்றித்தான் அந்த அத்தியாயம் சுழல்கிறது. இந்தியச் சமூகத்தில் இருபாலர் பயிலும் பள்ளியில் ஆசிரியர்கள் எப்படி மாரல் போலீஸிங்கை சேர்த்தே செய்யப் பணிக்கப்பட்டிருப்பார்கள் என்பது, அவர்கள் ஸ்டாஃப் ரூம் கான்வர்சேஷனில் தெரியும். பதின்ம வயதினரின் சேஷ்டைகளை மட்டுமே பேசும் அவர்கள், அதற்கு தீர்வு வேண்டுமல்லவா என்று தூக்கத்திலும் கூட யோசிக்காதவர்களாக இருப்பார்கள்.
அந்த வயதில் பாலுணர்வு தலைதூக்குவது, எதிர்பாலினத்தர் மீதான ஈர்ப்பு எழுவதும் இயல்பென்றாலும் கூட உடலியல் அறிவு, ஆரோக்கியம், மற்றும் பாலுறவில் பொறுப்பான நடத்தையை உள்ளடக்கமாகக் கொண்ட ’பாலியல் கல்வி’ போதாமை விடலைகளை என்ன செய்யும் என்பதற்கு ரம்யா ஒரு க்ளாஸிக் உதாரணமாக இருப்பாள்.
மாதவிடாய் ‘தீட்டு’, எதிர்பாலின ஈர்ப்பு துண்டிக்க மற்றும் தண்டிக்கப்பட வேண்டியது, காதல் பற்றிய பேச்சு ‘குற்றம்’, அது அதற்கான வயதுவந்த ரம்யாவின் அத்தை பெண் வாதிட்டாலுமே குற்றம்தான் என்பதை மட்டும்தான் ரம்யா 17 வயதில் சந்திக்கிறாள்.
பள்ளிச் சுற்றுலா சென்ற இடத்தில், நளன் மீதான வயதின்பால் விளைந்த ஈர்ப்பை எக்ஸ்ப்ளோர் செய்ய முயற்சிக்கிறாள். வெளிநாடுகளில் ‘டீன் செக்ஸ்’ எனப்படுவது மிகப் பெரிய சமூகச் சிக்கலாகவே உருவாகியிருக்கிற சூழலில், ஈர்பை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ரம்யா தனது அறிவற்ற செயலால் அப்பாவின் கோபத்துக்கு ஆளாகிறாள். அவளை அடித்தும், வார்த்தைகளால் துன்புறுத்தாமலும் பேசி, அறிவூட்டி, ஆலோசனை வழங்கி அவளது எனர்ஜியை மடைமாற்றியிருக்க வேண்டும் பெற்றோர், பள்ளி உள்ளடக்கிய இச்சமூகம். ஆனால் அதைச் செய்ததா?!
போதாதற்கு, ரம்யாவின் பாட்டி அவளின் தவறுகளுக்கு ரம்யாவின் தாயின் நடத்தையை காரணமாகச் சொல்வாள். அதை தந்தையும் மறுதலிக்காமல் வேடிக்கை பார்ப்பார். அந்த நொடி பதின்ம வயது ரம்யா, பள்ளிக்கூட ஆசிரியரான தாய் என இருவருமே சமூகத்தில் ‘உத்தமிகள்’ இல்லாமல் போயிருப்பர். அங்கே ரம்யாவின் வாய்ஸ் ஓவர் வரும், “நியாயமா அம்மா என் பக்கம் நின்றிருக்கணும்”னு சொல்லும்.
ரம்யாவின் அம்மா தன் மீதான குற்றச்சாட்டையும் எதிர்க்கவில்லை, மகளின் அறியாமையையும் நீக்க முற்படவில்லை. மாறாக, க்ளீஷே அட்வைஸ்களை மட்டும் சொல்கிறாள். அதனால்தான் தன்னை வேறு பள்ளிக்கு மாற்றும்போது ரம்யா, “இனி ஹாஸ்டலில் தான் படிப்பேன். எனக்கு பிடிச்சதெல்லாம் செய்வேன். உனக்குப் பிடிக்காததை நிச்சயமாகச் செய்வேன். தடுத்தால் தற்*லை செய்து கொள்வேன்...” என்று மிரட்டுவாள்.
தன் உணர்வுகளை மதித்து, தன் வார்த்தைகளைக்கு செவி கொடுக்க யாரும் இல்லாத நிலையில் ரம்யாவின் அந்த சவால் வார்த்தைகள் 17 வயதுக்கான யதார்த்தம்தான்!
ரம்யா இப்போது கல்லூரிக்கு வந்துவிட்டாள். சொன்னதுபோலவே விடுதியில் இருக்கிறாள். அவள் கல்லூரிக்குள் நுழைந்ததுமே செக்ஸுவலி ஆக்டிவாக இருக்கிறாள் என்பது நமக்குப் புலப்படுகிறது.
ஓர் ஆணுடன் படுக்கையில் இருக்கும் ரம்யா, அப்போதும் தனக்கு ஏற்படும் ஃபேன்டஸி கனவை அவனுடன் பகிர்கிறாள். அது அர்ஜுன் என்ற அந்த கல்லூரிக் காதலனுக்கு விசித்திரமானதாகவே இருக்கிறது. சிறுவயது ஃபேன்டஸி கனவு இன்னமும் அவளுக்கு வருகிறதென்றாள், அவள் நினைத்ததுபோல் ஓர் ஆண் நண்பர் மட்டுமே அதை பூர்த்தி செய்ய முடியாது என்பது ரம்யாவுக்கு அப்போது புலப்படவில்லை. அவளிடம் அவனுக்குத் தேவையானதைப் பெறுபவனாக மட்டுமே அர்ஜுன் இருக்கிறான்.
அவனுக்காக வீட்டில் பொய் சொல்கிறாள், புதிதாக மதுப் பழக்கத்தையும் கற்றுக் கொள்கிறாள். அங்கே தோழிகள் தங்கள் வயதில் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள் குறித்து அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொள்கிறார்கள். குடும்பத்தில் பார்க்க நேர்ந்த சில அனுபவக் கதைகள் அவர்களுக்கு சிறியளவிலான் இம்பாக்ட் எவிடன்ஸாக இருக்கின்றன.
நாளடைவில் அர்ஜுன் தன்னை புறக்கணிக்கிறான் என்று தெரிந்தாலும், அவனைத் துரத்துகிறாள். அவனோடு கல்லூரி அறிய உறவில் இருந்துவிட்டோம், அவனை விட்டுவிடக் கூடாது என்று பதற்றப்படுகிறாள். படிப்பில் கவனம் செலுத்தாமல், தன் மீது அக்கறையில்லாமல் விட்டேத்தியாகத் திரிகிறாள்.
ஆனால், இந்த முறை ரம்யாவுக்கு உதவிக்கு வருகிறாள் தோழி செல்வி. ரம்யாவின் மடத்தனங்களை, முதிர்ச்சியின்மையை கண்டித்தாலும் ரம்யா மீண்டும் மீண்டும் சறுக்கினாலும் அவளை தூக்கிவிடத் தயாராகவே இருக்கிறாள்.
அவளால் மட்டுமே, ஒரு டாக்சிக் உறவையும், அதைத் தக்கவைக்க தான் மேற்கொண்ட முட்டாள்தனங்களையும் ரம்யா புரிந்து கொள்கிறாள். கண்கள் மறைக்கக் குடித்தால், தவறான உறவை தேர்வு செய்தால் அவமானமும், ஏமாற்றமும்தான் மிஞ்சும் என்ற படிப்பினை அவளுக்குக் கிட்டுகிறது. அவளுக்கு தெளிவு பிறக்கிறது. தன்னிலை உணர்கிறாள், தன்னையே ஹீல் செய்ய முயற்சிக்கிறாள்.
“உன்ன வச்சுகிட்டு என்ன பண்றதுனே தெரியலடா கண்ணா...” என சொல்லும் தந்தையின் வேதனை ரம்யாவுக்குப் புரிகிறது. பெற்றோருடன் பேட்ச் அப் ஆக முயற்சி செய்கிறாள். அர்ஜுனை கடந்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தும் ரம்யாவுக்கு பாட்டி மரணச் செய்தி வருகிறது.
அவள் சடலத்தின் முன்னால் அமர்ந்து கொண்டு, “என் மீது பல்லி விழுந்ததற்கு, தான் நேப்கின்களை ஒழுங்காக டிஸ்போஸ் செய்யாததே காரணம்னு பாட்டி சொன்னா” என்று நினைவுகூர்வாள். உண்மையில் அது அவளுக்கு நடந்ததல்ல. அவள் அம்மாவுக்கு நடந்தது.
மூன்றாவது மற்றும் கடைசி ட்ரான்சிஷன் ஃபேஸில் ரம்யா பொருளாதார சுதந்திரம் பெற்றவளாக இருக்கிறாள். அதைவிட, அவள் நினைத்ததுபோலவே அவளெக்கென்று குட்டி வீடு, அதில் ஒரு காதலன் இருக்கிறான். அவன், “நான் எப்பவும் உன்னை கைவிட மாட்டேன்,” என்று வாக்குறுதி தருபவனாகவும் இருக்கிறான். அவள் ஃபேன்டஸி கனவில் வருவதுபோல் பூனைகளும் அவள் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனாலும் அவள் தம் அடிக்கிறாள், மது அருந்துகிறாள், ரிலேஷன்ஷிப் பிரேக் அப் செய்கிறாள்.
அப்போது அவளுக்குள் ஒரு கேள்வி எழுகிறது:
“நான் நினைச்ச மாதிரி எல்லாம் கெடச்சிடுச்சு. ஆனாலும் நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை. எல்லோரைப் போலவும் ஏன் நான் இயல்பா இல்லை. எனக்கு என்னதான் பிரச்சினை?!”
அவளுடைய இந்தக் கேள்வி அவளிடம் சில மாற்றங்களை உண்டாக்குகிறது. முதன்முறையாக, “நான் குடியை நிறுத்துகிறேன். இவ்வளவு நாள் அதை நான் விரும்பித்தான் குடித்தேனா என்று கூட தெரியவில்லை” என்கிறாள்.
தன் பள்ளிப் பருவ காதலன் நளனை பல ஆண்டுகளுக்குப் பின் கைக்குழந்தையுடன் பார்க்கிறாள். அவனுடன் தனிமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தும் அவன் முத்தத்தை மறுக்கிறாள்.
நளன், அர்ஜுன், இர்ஃபான் என்று ஆண் உறவுகள் இல்லாத வாழ்க்கை அத்தியாயமே இல்லை என்றளவுக்கு இருந்த ரம்யா முதன்முறையாக வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் உறவு வேண்டுமா என்று தன் சுயத்திடம் கேள்வி கேட்கிறாள். ‘செல்ஃப் கேர்’ மீது நாட்டம் காட்டுகிறாள்.
ரம்யாவின் நட்பு வளையத்தில் எல்லோருமே அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட, தனித்து நிற்கும் அவளுக்கு ஆறுதலாக இருந்த பூனைகளில் ஒன்றும் காணாமல் போகிறது.
காணாமல் போன பூனையை மீட்க உதவவரும் இர்ஃபானையும், “நீ எனக்கு ஆறுதலாக இருக்க வேண்டாம், உன் கேர்ள் ஃப்ரெண்டோட போ” என்று வழியனுப்புகிறாள். சிம்பத்தி உருவாக்கி அர்ஜுனை பிடித்துவைக்க நினைத்ததுபோல், தற்போதைய பரிதாபகரமான சூழலிலும் கூட இர்ஃபானை தக்கவைத்துக் கொள்ள விரும்பவில்லை.
அப்போதும் அவளைத் தேற்ற தோழி செல்வி கை நீட்டுகிறாள். அவளுக்கு என்ன தேவை என்பது செல்விக்குத்தான் சரியாகத் தெரிகிறது. ரம்யாவுக்கென்று ஒரு தனி வீடு கிடைத்துவிட்டாலே அதன் பின்னால் அவள் தன்னைத் தானே சரிசெய்வாள் என்பதுதான் செல்வியின் கணிப்பு.
செல்வி முன்பு அருகிலிருந்து அரவணைத்தால், பின்பு தொலைதூரத்தில் இருந்தும் விரல் பற்றிக் கொண்டாள். ரம்யாவே சொல்வதுபோல், உண்மையில் செல்வி இல்லாவிட்டால் அவள் என்றோ போய் சேர்ந்திருப்பாள்தான்!
அப்பேற்பட்ட தோழி அவளுடைய பச்சிளம் குழந்தைக்கு சொல்லும் உத்தரவாதம், ரம்யாவுக்கு தன் தாயின் தவிப்பை உணர்த்துகிறது. அம்மாவிடம் இணக்கம் காட்டுகிறாள் ரம்யா. அவளுடைய பணி பிரியாவிடை நிகழ்ச்சிக்காக பள்ளிக் கூடத்துக்குச் செல்கிறாள். அங்கே, அவள் தான் பள்ளிக்கூடத்தில் பரபரப்பு டாப்பிக்கான எஸ்.ரம்யா என்று மாணவிகள் அடையாளம் கண்டுகொள்ள, “ஓ! உங்களுக்கெல்லாம் நானொரு காஷனரி டேல்-ல” (Cautionary Tale) என்று புன்னகைக்கிறாள்.
ரம்யா பூனைக்காகப் பதறுவதும், அவள் தாய் ரம்யாவுக்காகப் பதறுவதுமாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகள், ‘இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் செல்ல வேண்டும் என்று வகுக்கப்பட்ட கோட்டிலிருந்து விலகுவோர் மீது சமூகம் காட்டும் ‘பதற்றம்’ மீதான உணர்வைக் கடத்தும் திரை வடிவம்.
ரம்யா எனும் தனி மனுஷிக்கு தன்னைத் தானே தகவமைக்க ஒரு குட்டி வீடும், அவளுக்குப் பிடித்த பூனைகளும், அவளை டைரக்ட் செய்யும் உறவுகளும் அற்ற சூழலும் தேவைப்படுகிறது. அதுதான் அவள் கடைசியில் தஞ்சமடையும் ட்ரான்சிஷன் ஃபேஸும். அங்கு அவள் தன்னை சமூக, பொருளாதார, சுய ஒழுக்கம் ரீதியாக இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் மீண்டும் பழைய முட்டாள்தனங்களையும் செய்து துன்பப்படலாம். எல்லோரைப் போலவும் அவளும் மனித குலம் தானே!
அப்படியிருக்க, ஓர் ஊதாரி மகன் (Prodigal Son) மனம் திருந்த நேரமும், வாய்ப்பும், சூழலும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ‘வாரணம் ஆயிரம்’ நாயகன் மது அருந்தி, போதைப் பொருள் எடுத்துக் கொண்டு, ஊர் சுற்றி மீண்டு வந்து ராணுவ வீரனாக வாய்ப்புகளுக்கும், வரவேற்புகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், ரம்யாக்களுக்கு கல் வீச்சு மட்டுமே காத்திருக்கும். அது திரைப்படமாக இருந்தாலும்.
உண்மையில் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் எவ்வித கலாச்சார சீரழிவையும் காட்சிகள், வசனங்கள் வழியாக ஊக்குவிக்கவில்லை. மாறாக, சமூகத்தில் சில நேரங்களில் சில மனுஷிகள் தங்கள் சுயத்தை எக்ஸ்ப்ளோர் செய்கிறோம் என்று தோற்றுப் போனால், அவர்களை ‘பேட் கேர்ள்’ என்று முத்திரைக் குத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறது.
இதைத்தான் ‘பேர்ட் கேர்ள்’ எடுத்துரைக்கிறது. ஒரு காட்சியில் அம்மாவிடம் ரம்யா பேசும்போது, “என்னோட டீன் ஏஜ்ல பாய்ஃப்ரெண்ட் இருந்த நிறைய பொண்ணுங்க நல்லாத்தான் இருந்தாங்க; இப்போ என் வயது கொண்ட திருமணமாகாத பெண்களும் நல்லாத்தான் இருக்காங்க” என்று சொல்வார்.
ஒரு மேம்பட்ட சமூகத்தில் திருடாதே, கொலை செய்யாதே, பாலியல் வன்கொடுமை செய்யாதே, யாரையும் புண்படுத்தாதே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற நன்னெறிகள் இருக்கலாம்; ஆனால், பாலினங்கள் கடந்து ஒரு தனிநபருக்கு இதுதான் நல்லது, இது நிச்சயமாக கெட்டது என்ற ரூல் புக்கை சமூகம் தீர்மானிக்க முடியாது.
அப்படி நீங்கள் எழுதி ரூல் புக்கையும் தாண்டி எழும் ரம்யாக்கள் மீது கல் வீசப்பட்டே ஆக வேண்டுமென்றால், உங்களில் தவறு செய்யாதவர்கள் ரம்யாக்களுக்கு எதிரான முதல் கல்லை எடுத்துக்கொண்டு வரிசையில் நிற்கலாம்!
| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in