

பட்ட மேற்படிப்பு பயிலும் எனது மகளுடனான ஒரு தேநீர் கோப்பை உரையாடலில், “இந்தக் காலத்திலும் இச்சமூகம் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பதால் தான் நிறைய பெண்கள் திருமண பந்தத்துக்குள் நுழைகின்றனர்.
திருமணம் என்பது ஒரு பெண் அந்த வயதை எட்டிவிட்டார் என்பதாலோ, குடும்பப் பெருமையை கடத்துவதற்காகவோ இல்லை... ‘நாங்கள் முற்போக்கானவர்கள்தான். பாருங்கள், எங்கள் பெண் பிள்ளையை படிக்க வைத்தோம், அவள் இப்போது பொருளாதார சுதந்திரத்தை எட்டிவிட்டார். அதனால் அவள் வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக திருமணம் செய்து பெற்றோர் கடமையை நிறைவேற்றுகிறோம்’ என்ற போர்வைகளில் எல்லாம் நடக்கக் கூடாது.
திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு செய்துவைக்கப்படும் ‘சடங்காக’ இல்லாமல், அவள் நினைக்கும்போது செய்து கொள்ளக் கூடிய ‘சாய்ஸ்’ ஆக இந்தச் சமூகத்தில் இருக்க வேண்டும்” என்றார்.
எனக்கு ஒரு ஜெர்க் கொடுத்த உரையாடல் அது. சில, பல மாதங்கள் கடந்திருக்கும் என நினைக்கிறேன், இந்த உரையாடல் நிகழ்ந்து. அதனால், நினைவுப் பெட்டகத்தில் எங்கோ புதைந்து போயிருந்தது.
ஓர் ஓய்வுநாளில் ஓடிடி பக்கம் உலாவி நெட்ஃப்ளிக்ஸில் கரைஒதுங்கியபோது இந்தியில் ஹூமா குரேஷி நடிப்பில் வெளியான ‘சிங்கிள் சல்மா’ (Single Salma - 2025) படத்தை பார்க்க நேர்ந்தது. படம் முடிந்த தருணம் சல்மாவாக நடித்த ஹூமா கதாபாத்திரத்தின் அணுகுமுறையும், மகள் எப்போதோ பேசிவைத்த திருமணத்தின் மீதான சடங்கு Vs சாய்ஸ் வாதமும் பெர்ஃபெக்டாகப் பொருந்திப் போனது எனக்குப் புரிந்தது.
ஒரு பெண் தனது அடையாளத்தைத் தேடும் கதைக்களம் இந்திய சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. அதுவும், திருமணம் நிச்சயமாகி, அது நின்றுபோய் தேன்நிலவுக்காக புக் செய்யப்பட்ட டிக்கெட்டில் தனியாகப் பயணித்து தன்னைத் தானே வெளிக் கொணர்ந்த ‘குயின்’ போன்ற திரைப்படங்கள், பெண்கள் மீதான ஸ்டீரியோடைப் பார்வைகளுக்கு வலுவாக அடி கொடுத்த திரை வரலாறு இருக்கிறது.
அப்படியிருக்க, ‘சிங்கிள் சல்மா’ புதிதாக என்ன கொடுக்கப் போகிறாள் என்று கேள்வி எழலாம். ராணி, சல்மா மட்டுமல்ல, இந்தியப் பெண்கள் பலருக்கும் தங்களை கட்டுப்படுத்தும், மட்டுப்படுத்தும் சமூக நெருக்கடிகள் இன்றளவும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அதில் நம் ‘சிங்கிள் சல்மா’வை கட்டுப்படுத்தியது பேரிளம் பெண் வயது வரம்புக்குள் வந்தும் திருமணம் ஆகவில்லையா என்ற அழுத்தமே.
திருமணம் என்பது என் சாய்ஸ், இதுதான் நான், இப்படித்தான் நான், என் தேவை இதுதான் என்று தனது குடும்பத்துக்கும், தனக்காக நிச்சயக்கப்பட்டவனுக்கும், தன்னுடன் காதல் வாழ்க்கையை தொடர வந்தவனுக்கும் உணர்த்தி திரை தேவதையாக ஜொலித்திருக்கிறார் ‘சிங்கிள் சல்மா’.
சல்மாவாக ஹூமா குரேஷி, சல்மாவுக்கு நிச்சயக்கப்பட்ட நபராக ஸ்ரேயாஸ் தல்படே, சல்மாவின் தோழி ரத்னாவாக வரும் நிதி சிங், சல்மா தனது அடையாளத்தை உணர உந்துதலாக இருக்கும் மீத் கதாபாத்திரத்தில் நடித்த சன்னி சிங் என அனைவரும் சேர்ந்து கலகலப்பாகவே கதையை நகர்த்தியுள்ளனர்.
இன்னும் சிங்கிளா?
நம் நாயகி சல்மா 30+ வயதில் இருக்கிறார். பொறியாளராக பணி செய்கிறாள். சுய சம்பாத்தியத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். தந்தை நவாப் பெருமையை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிய, அவர் பட்ட கடனை அடைத்து வீட்டை மீட்பதுதான் சல்மாவின் பிரதான இலக்காக இருக்கிறது. மற்ற குடும்பப் பொறுப்புகள் எல்லாம் கிளை இலக்குகள். சல்மா திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவரது அம்மாவுக்கு மட்டுமே அக்கறை இருக்கிறது. இது அம்மாவுக்கு கவலை என்றால், சல்மாவின் ஏரியாவாசிகளுக்கு அது ‘கலகல’ டாபிக்.
சல்மாவுக்கு ‘சிங்கிள்’ என்ற அடைமொழியைக் கொடுத்து லூட்டி அடிக்கும் சமூகத்தை தன் கோபத்தால், கல்வியும், வேலையும் தந்த துணிச்சலால் குதறினாலும்கூட சமூக நெருக்கடிகளை அவளால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.
சல்மாவுக்கான மாப்பிள்ளை தேடும் படலத்தை கொஞ்சம் காமெடி தூக்கலாகக் காட்டிய இயக்குநர் நச்சிகேட் சமந்த், சிக்கந்தர் - சல்மா சந்திப்பிலிருந்து படத்தை வேகமெடுக்க வைக்கிறார்.
சமூகத்துக்காகவும், தாய் வாங்கிய சத்தியத்துக்காகவும் சிக்கந்தரை சந்திக்க வரும் சல்மாவுக்கு முதல் சந்திப்பில் அவர் மீது ஏற்படுவது பரிதாப உணர்வு. அவளை இதுவரை எள்ளி நகையாடிய ஆண்களையே பார்த்திருந்த சல்மாவுக்கு தனது பரிதாப நிலையை பட்டவர்த்தமாக ஒப்புக்கொண்ட சிக்கந்தர் மீது நல்லெண்ணம் ஏற்படுகிறது. சல்மாவுக்குக் காட்டப்பட்ட மணமகன்களில் சிக்கந்தர் முதல் ரேங்க் எடுத்து நிற்க சல்மா மனம் சமரசம் அடைகிறது.
திருமணம் நிச்சயமான கையோடு சல்மாவுக்கு லண்டனில் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு வர, சிக்கந்தர்தான் குடும்பத்தினரிடம் சிபாரிசு செய்து அனுப்பிவைக்கிறார். அதனால் சல்மாவுக்கு அவர் மீதான நல்லெண்ணத்தோடு மரியாதையும் சேர்ந்து கொள்கிறது. பேண்ட் வாத்தியங்களோடு வருங்கால கணவரால் லண்டனுக்கு வழியனுப்பப்படும் சல்மா அங்கே முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குள் செல்கிறாள்.
விமர்சன எல்லைகளுக்கு அப்பால்...
சல்மா லண்டனில் தன்னை ஜட்ஜ் செய்யும் கண்களுக்கு, விமர்சனம் செய்யும் வம்பர்களுக்கு அப்பால், சென்றுவிட்டதால் தனக்குப் பிரியமான ஆடைகள் தொட்டு அனைத்தையும் செய்து பார்க்கிறாள். கார் ரேஸ், மாடலிங் என்று எக்ஸ்ப்ளோர் செய்வது, மது விருந்து, பிகினி, மனசுக்குப் பிடித்த இளைஞருடன் உறவு என்று அவளது எக்ஸ்பெரிமென்ட்கள் விரிகின்றன.
அதில் முதன்முதலில் மது அருந்தியது சல்மாவுக்கு தனது மத, கலாச்சார, பாலின அடையாளங்களுக்கு ஏதோ அவமரியாதை செய்துவிட்டதாக குற்ற உணர்வை ஏற்படுத்த, அதை உடைக்கிறார் அவருடன் வந்த மத்திம வயது பெண்ணான திருமதி ஸ்ரீவஸ்தவா.
சல்மா அந்தத் தருணத்தில்தான் தனக்கென்று தனியாக இருக்கும் ஆசைகள் பாவமல்ல, அது இயல்பானவை என்பதையே உணர்வாள்.
அதேபோல், சல்மா தன் செயல்கள் மீது குற்ற உணர்வு எழும்போதெல்லாம் அதற்கு ஊரில் இருக்கும் தோழி ரத்னாவிடம் ஆலோசனை கேட்டுத் தெளிவாள். தோழி ரத்னாவின் ஆலோசனைகள் எல்லாமே சல்மாவைப் போல் குழப்பத்தில் இருக்கும் பெண்கள் ரெஃபரன்ஸ் எடுத்துக் கொள்ளக் கூடிய ரகம்.
அடுத்த சில நாட்களில் பெரிய மனத்தடங்கல்கள் இல்லாமல் அவள் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வாள்.
தன்னை, தனது ஆசைகளை மதிக்க ஆரம்பித்துவிட்ட சல்மாவுக்கு ஒரு மனப் போராட்டம் எழும். சிக்கந்தர் மேல் இருந்த பரிதாபம், மரியாதை, தன்னை இம்ப்ரெஸ் செய்ய அவர் மேற்கொள்ளும் மெனக்கிடல்கள் ஒருபுறமும், நினைத்ததைப் பேசும், பிடித்ததை செய்யும், “என் தாய் விவாகரத்து வாங்கி தன்னை கைவிட்டதை எல்லாம் நான் குற்றமாகவே பார்க்கவில்லை. என் தாய்க்கும் ஒரு வாழ்க்கை உள்ளது” என்று அதிமெச்சூரிட்டி பேச்சை வெளிப்படுத்திய மீத் மீதான ஈர்ப்பு மறுபுறமும் அவள் மனதை ஊசலாட்டத்தில் வைத்திருக்கும்.
ஆனால், உண்மையில் மீத் மீதுதான் அவளுக்கு காதல், காம உணர்வுகள் ஏற்பட்டிருந்தது என்பதை அவனுடனான உறவுக்கு அவள் அத்தனை இயல்பாய் சம்மதிக்கும்போது தான் சல்மா புரிந்துகொள்வாள். தன் ஆசை, தேவை என்னவென்பதை, தன் திறமை, தன் மதிப்பு என்னவென்பதை புரிந்துகொண்டு லண்டனிலிருந்து புறப்படுவாள் சல்மா.
லண்டன் டூ லக்னோ...
சல்மா லண்டனிலிருந்து லக்னோ திரும்புவதற்குள் அவரது பீச் பிகினி படம் வைரலாகிவிட, அதன் பின்னர் நடப்பதெல்லாம்தான் திருமணம் சடங்காக திணிக்கப்படும் சமூகச் சிக்கலை சல்மா எப்படி எதிர்கொள்கிறாள் என்பது.
லண்டன் ரிட்டர்ன் சல்மா லக்னோ சல்மாவைப் போல் அல்லாமல் தந்தையிடம் துணிந்து கேள்வி கேட்பாள். தனது பிகினி உடைக்கு அவமானப்படவில்லை என்று உறுதியாகச் சொல்வாள். அந்த உடையில் நான் மகிழ்ச்சியாக, அதுவே நான் நானாக உணர்ந்த தருணம் என்று சிலாகிப்பாள். வீட்டை விட்டு வெளியேறி என் வாழ்க்கையை வாழ்ந்து கொள்வேன் என விடுதலையை ஏற்பாள்.
இந்தக் கட்டத்தில்தான், தன்னை தகவமைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சல்மா தன் கைநழுவவிடுவாரோ என்ற பதற்றம் சிக்கந்தருக்கு ஏற்படும். நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் திருமணம், அதுவும் அழகான பெண்ணுடன் என்று ஊர் முழுவதும் தம்பட்டமும் அடித்தாகிவிட்டது. அதனால் முன்பைவிட இன்னும் தாராள மனம் கொண்டவராவார் சிக்கந்தர்.
அதனாலேயே சல்மா மீதான விமர்சனங்களை எல்லாம் ‘பெருந்தன்மை’ காட்டிக் காட்டியே சல்மாவிடமிருந்து விலகிப் போவார்.
‘பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் மெட்டீரியல்’ ஆக காட்சியளிக்கும் சிக்கந்தரின் நேர்மை சல்மாவை இன்னும் ஆழமாக யோசிக்க வைக்கும். சிக்கந்தரை திருமணம் செய்துகொண்டு தன் கையில் கிடைத்த தனது வாழ்க்கையை இழந்தவிடக் கூடாது என்ற முடிவுக்கு சல்மாவை நகர்த்தும்.
சிக்கந்தரிடம் நேர்மையாக தனக்கு லண்டன் நண்பர் மீது ஏற்பட்ட ஈர்ப்பை கூறுவாள். ‘ஆனஸ்ட்’ சிக்கந்தர் அப்போது ‘ஆவேச’ சிக்கந்தராக மாறுவார்.
“திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நான் பேண்ட் வாத்தியங்களோடு வருவேன், தைரியும் இருந்தால் அங்கே என்னை நிராகரி” என்று சவால் விட்டுச் செல்வார்.
மறுபுறம் லண்டனிலிருந்து புறப்பட்டுவரும் மீத், சல்மாவிடம் இடம், பொருள் ஏதும் பார்க்காமல் காதலை அவசர கதியில் வெளிப்படுத்துவார். அதுவும் முழுமையாக சல்மா எதிர்பார்க்கும் காதலாக இல்லாமல், தனக்கு கம்ஃபர்டபிளான ‘லண்டன் வா நாம் வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற இன்விடேஷனாக வைப்பார்.
நிச்சயிக்கப்பட்டவனின் சவால், காதல் கொண்டவனின் இன்வைட் இடையே சல்மாவின் சாய்ஸ் சிக்கி நிற்கும்.
சல்மாவின் சாய்ஸ்!
இந்தப் படத்தை சீரியஸாக சொன்னால் பிரச்சாரமாகிவிடும், சற்றே பிசகினால் கேலிக் கூத்தாகிவிடும். அப்படியான கதைக்களத்தின் க்ளைமாக்ஸை லாவகமாக கையாண்ட இயக்குநர், சல்மாவின் சாய்ஸை அங்கே பேச வைத்திருப்பார்.
நவாப் வம்சாவளி பெருமை பீற்றும் தந்தைக்கு, தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதற்காகவே அடுத்தடுத்து மகள்களைப் பெற்று அவர்கள் அனைவரையும் சுமக்கும் பொறுப்பை தன் மேல் சுமத்திவிட்டதாக சல்மா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுவாள்.
அத்தனை சங்கடங்களையும் பொறுத்துக் கொண்டு வீட்டையும் மீட்டுக் கொடுத்ததையும், அதற்குப் பின்னால் தனது பிகினி உடை ஃபோட்டோ வைரலானதால் கிடைத்த மாடலிங் வாய்ப்புதான் இருக்கிறது என்பதையும் பெருமைப் பொங்க கூறுவாள். அது ரிஸ்வி போன்ற தந்தைகளின் ஈகோ நொறுங்குமிடம்.
தனது சாய்ஸ் மாடலிங் என்று தெளிவாக முடிவு செய்ததோடு, எப்போதும் தன்னைக் கட்டுப்படுத்தாத ஓபன் ரிலேஷன்ஷிப் தான் வேண்டும் என்று கூறும் மீத்துக்கும் பளீர் பதில் கூறுவாள். அதேபோல், சிக்கந்தரை அணுகும் விதமும் மாஸ் ரகம்.
திருமணம் அவளின் சாய்ஸ் வரம்புக்குள் எடுத்துக் கொண்ட கெத்தை வெளிப்படுத்தும் தருணம் அது.
‘சிங்கிள் சல்மா’ பேசும் அரசியல்
பெண் அடிமைத்தனத்துக்கு முதன்மைக் காரணம் அவளுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லாததே என்ற அரசியலைத்தான் ‘சிங்கிள் சல்மா’ பேசியிருக்கிறது என்று கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தெளிவாக படம் முழுவதும் அதை கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
பெண் விடுதலை என்பது சமூகப் பொருளாதார பங்களிப்பில் அவள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் இருந்தே தொடங்கும். பொருளாதார விடுதலையே அவளுக்கு அனைத்து விடுதலைகளையும் தரும். அதுதான் பெண்ணியம் என்ற அரசியலை ‘சிங்கிள் சல்மா’ பேசியிருக்கிறது.
வழக்கமாகவே பெண்ணியம் பேசும் படங்களில் இருக்கும் பிரச்சார நெடி இல்லாமல் லைட்டர் வெயினில் படத்தை சொல்லியதால்தான் சல்மா ஒரு திரை தேவதையாக மிளிர்கிறாள்.
| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |