

“இன்றும் நான் என்னை மீட்டெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில நினைவுகள் அப்படியே கூர்மையாக, தெளிவாக உள்ளன. இன்னும் சில நினைவுகள் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் தொடர்ச்சியாக மங்கலாக உள்ளன. எப்படியோ நான் அதிலிருந்து தப்பித்தேன். தப்பித்தது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்று யாரேனும் கேட்டால், ஆம் என்பேன்.
ஏனெனில், நான் அனுபவித்ததை வேறு யாரும் கடந்து செல்லக்கூடாது என்று விரும்புகிறேன். ஆண் - பெண் உறவில் ஏற்படும் சிக்கல், உணர்வுபூர்வ துஷ்பிரயோகம் வெறும் மனவேதனை மட்டுமல்ல, அது காதல் என்ற முகமூடியோடு நிகழ்த்தப்படும் உளவியல் தாக்குதல். அதிலிருந்து தப்பிப்பது பலவீனம் அல்ல, அதுவே துணிச்சலின் தொடக்கம்.”
- இது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான ‘த கேர்ள் ஃப்ரெண்ட்’ (The GirlFriend) படத்தைப் பார்த்த ஒரு பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்த கருத்து. அந்தப் படத்தில் வந்த ராஷ்மிகா போலவே ஒரு நச்சு உறவில் (அப்யூஸிவ் ரிலேசன்ஷிப்பில்) இருந்து பின் மீண்டவர் அவர் என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
‘த கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல பத்திகளாக பல தளங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. அத்தனையும் ஒருமித்த குரலில் முன்வைக்கும் ஒரு பரிந்துரை, ‘பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்’ என்பதே. படத்தின் நாயகி ராஷ்மிகா போன்ற கல்லூரி பருவப் பெண் மட்டுமல்ல, நச்சு உறவில் இருக்கும்? இருந்த எல்லா வயதுப் பெண்களுமே இந்தக் கதையில் தங்களைப் பொருத்திப் பார்க்கலாம். படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வரும் ரோகிணி போதும் அதை உறுதிப்படுத்த.
காதலில் மட்டுமல்ல, பாரம்பரிய குடும்பக் கட்டமைப்பு முதல் நவநாகரிக லிவ்-இன் வரை நச்சு உறவுகள் தொடர்கதையாகத் தான் இருக்கின்றன. அதுதான் இப்படத்துக்கான தேவையை உருவாக்கியிருக்க முடியும்.
உடனே நீங்கள் இப்படிக் கேட்கலாம்... ஏன் இதுபோன்று பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் பற்றி படம் எடுக்கமாட்டார்களா என்று? அப்படி ஒரு கேள்வி ஒரு நேர்காணலில் இயக்குநர் ராகுல் ரவீந்திரனிடமே முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர், ”எடுக்கலாம். எனது நண்பர்கள் சிலர் பெண்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சு உறவுக்குள் இருந்திருக்கிறார்கள். ஆனால், இங்கே இன்னும் அதிகாரம் ஆண்கள் கையில்தானே இருக்கின்றது. அப்படியிருக்க, அதுபோன்ற கதையை எடுத்தால், அதை ஒரு கதையாகப் பார்க்காமல் ஒட்டுமொத்த பெண்களின் குணமாகவேப் பார்ப்பார்கள். இதற்குத்தான் பெண் சுதந்திரம் வழிகோலும் என்று வரிந்து பேசுவார்கள்” என்றார்.
இது ‘அவள் அப்படித்தான்’ என்று பிராண்ட் செய்யும் பொது புத்திக்கு நெத்தியடி பதில். அதேவேளையில், பாதிக்கப்பட்ட ஆண்கள் இருந்தாலும் அவர்களும் தங்களின் நச்சு உறவை மறுபரிசீலனை செய்து விடுபடலாம் என்பது மறுப்பதற்கில்லை.
இங்கிருந்து நாம் ‘த கேர்ள் ஃப்ரெண்ட்’ சொல்லும் பரந்துபட்ட பார்வையை அலசலாம். படத்தில் ராஷ்மிகாவின் பெயர் பூமா தேவி (அத்தனை ‘பொறுமைசாலி’). கல்லூரியில் ‘ஆல்ஃபா மேலாக’ கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டியில் வரும் தேவரகொண்டா போல் ‘கெத்து’ காட்டித் திரியும் விக்ரமுக்கு ராஷ்மிகாவை பார்த்ததும் பிடித்துவிடுகிறது.
அமைதியாக, கழுத்தில் துப்பாட்டாவை சுற்றிக் கொண்டு எப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உலா வருபவளை தன் துணையாக ஆக்கிக் கொள்ள விழைகிறான். (பொறுப்புத் துறப்பு: துப்பட்டா பிற்போக்கு அல்ல. அது அவரவர் சாய்ஸ். கதையில் துப்பட்டா ஒரு குறியீடு) அவனுடைய அராத்து ஸ்டைலில் ஈர்க்கப்பட்ட அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு ஃபேஷனபிள் மங்கை துர்காவின் காதலை அவுட்ரைட்டாக நிராகரிக்கிறான். ஏனென்றால், துர்காவுக்கு அவனைக் கட்டுப்படுத்தவும், தூக்கி எறியவும் தெரியும் என்பது அவனுக்குப் புரிந்திருந்தால்.
அன்பென்ற பெயரில், அக்கறை என்ற போர்வையில் தனக்கு ஓர் அடிமையை உருவாக்க வேண்டும் என்பதே விக்கியின் திட்டம். அதனால் தான் அவனுக்கு அவனது கேர்ள் ஃப்ரெண்ட் தனது தனித் திறமையில் ஜொலிப்பது, பிறரின் பாராட்டைப் பெறுவது, தனது எதிர்காலம் பற்றி யோசிப்பது, தனது கனவுகளை நோக்கி நகர்வது போன்ற முன்னெடுப்புகள் தேவையற்றதாக தெரிகிறது.
தன்னைப் பார்த்துக் கொண்டு, தனக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, வயதான தன் தாயை ரீப்ளேஸ் செய்ய இன்னொருத்தியை உருவாக்க மெனக்கிடுகிறான் ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவமாகவே உலா வரும் விக்கி.
அவனுக்கு பகுத்தறிவு கொண்ட, கேள்வி கேட்கும், சிந்திக்கும் பெண் பிடிக்காது. இப்படிப்பட்டவனுடன் நச்சு உறவுக்குள் சிக்கிக் கொள்ளும் பெண் அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல. அவள் எப்போதெல்லாம் விழித்துக் கொள்ள முற்படுகிறாளோ அப்போதெல்லாம் உணர்வுபூர்வமாக பேசி ‘கேஸ் லைட்டிங்’ செய்வான் விக்கி.
அதாவது ராஷ்மிகா தெளிவாக யோசித்தால் அதை நாம் யோசிப்பது தவறோ என்று அவளையே நம்பவைப்பான். அப்படி நம்பவைத்ததால் தான் விக்கியின் அம்மா ரோகிணி தலைநிமிர்ந்து நேருக்கு நேர் கண் பார்த்து கூட பேச முடியாத அளவுக்கு கூனிக்குறுகிப் போயிருப்பாள். நம் குடும்பங்களிலேயே இப்படியான பெண்கள் பலரைப் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் விக்கி எவ்வளவு டாக்ஸிக்கோ அவ்வளவு டாக்ஸிக் ராஷ்மிகாவின் தந்தை கதாபாத்திரம். பொதுவாகவே சிங்கிள் பேரண்ட்ஸ் பலர் மத்தியில் நிலவும் “நான் உனக்காகத் தான் வாழ்கிறேன்” என்ற ஆபத்தான மனோபாவம், இந்தப் படத்தில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.
இதுவரை சிங்கிள் பேரன்ட்ஸின் டாக்ஸிகாலஜி பற்றி எந்தப் படமும் இவ்வளவு அழுத்தமாகப் பேசியதா என்று தெரியவில்லை. ஒரு காட்சியில் அத்தையுடன் செல்கிறேன் என்று சொல்லும் சிறு வயது ராஷ்மிகாவிடம் கோபித்துக் கொண்டு, அவளுக்கு உணவு தராமல் புறக்கணிப்பார். அப்போது கட்டிலில் குறுகி, சுருண்டு கவலையில் அழ்ந்துபோகும் ராஷ்மிகா கல்லூரியில் விக்கி ஒவ்வொரு முறை தன்னை அடக்கும், நசுக்கும் காட்சிகளில் அதேபோல் சுருண்டு படுப்பார். குடும்பத்தில் நச்சு உறவை எதிர்கொண்டவர்கள் வாழ்க்கைத் துணையையும் அப்படியே தேர்வு செய்வார்கள் என்றொரு உளவியல் ஆய்வு சொல்கிறது. அவர்களது மூளை, ‘இது உனக்கு பழக்கப்பட்ட உறவு. உன்னால் இதைக் கையாள முடியும்” என்று உந்தும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. விக்கி, அவள் தந்தையின் நீட்சி தான் என்பதை பூமா தாமதமாகவே புரிந்து கொள்கிறாள்.
நாம் விருப்பப்பட்டோ இல்லை ஏதோ அசம்பாவிதங்களாலோ சிங்கிள் பேரன்ட் ஆகலாம். சிங்கிள் பேரன்ட்டுக்கு நிச்சயமாக அழுத்தங்கள் உண்டு. ஆனால், அதை நம் குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது. அது வன்முறை, நச்சு உறவின் உச்சம். ‘நான் தனியாக இருக்கிறேன்’, ‘உனக்காகத் தான் வாழ்கிறேன்’ போன்ற தியாகச்சுடர் வசனங்கள் எல்லாம் குழந்தைகளை கட்டுப்படுத்தும் முயற்சி. மறைமுகமாக குழந்தையை சுமையாகக் கருதுவதால் வெளிப்படும் வார்த்தைகள்.
நாம் தெரிந்துதான் அந்தக் குழந்தையை பெற்றுக் கொண்டோம் என்றால் அதற்கான நீதியை செய்வது அடிப்படை மனிதப் பண்பு. அதைச் சுற்றி தியாக பிம்பத்தை கட்டமைப்பது ஆதிக்கம், அதிகாரத்தின் வெளிப்பாடு. அதை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் ராகுல். க்ளைமாக்ஸில் ‘செத்து ஒழி’ என்று தன் தந்தை கூறும்போது செல்போனை நொறுக்கி அந்த நச்சு உறவில் இருந்து விடுபடுவார் ராஷ்மிகா.
இப்போதெல்லாம் ‘பப்பி லவ்’ தன்மை வெறும் ஈர்ப்பை தாண்டி ரொம்பவே சீரியஸாக மாறிவருகிறது. சிறகுகளை விரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் காதல் என்று நம்பி எதிலெதிலோ சிக்கிக் கொள்கின்றனர் குழந்தைகள். கல்லூரி சென்றவுடன் க்ரஷ், பாய் பெஸ்டி, கம்பேனியன்ஷிப், சிச்சுவேசன்ஷிப் என்று பல சுகர் கோட்களுடன் கிளைவிடும் இந்த பப்பி லவ்கள், உறவுச் சிக்கல்களுக்கு வழி வகுக்கின்றன. ட்ரீமியான் ப்ரோபோசல்ஸ், அவுட் ஆஃப் தி வேர்ல்டு பிஹேவியர் எல்லாம் டாக்ஸிக் பிஹேவியரால் மூடப்பட்டிருக்கலாம்!
நாம் அணியும் ஆடையும், நாம் உபயோகிக்கும் லேட்டஸ்ட் கேட்ஜட்ஸும், ட்ரெண்டில் இருக்கும் சீரம், சன்ஸ்க்ரீனை பயன்படுத்துவதும் அல்ல நம்மை நாகரிகமானவர் என்பதை நிர்ணயிப்பது மாறாக நமது சிந்தனைத் தெளிவும், பகுத்தறிவும்தான் நம்மை நவ நாகரிக மங்கையாக்கும். தோற்றத்தைவிட சிந்தனையை அழகாக வைத்திருந்தால் நம்மை குடும்பத்துக்கு உள்ளும் வெளியும் இருக்கும் நச்சு உறவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நச்சு உறவுக்குள் தள்ளும் சமூக அழுத்தம் (Peer Pressure) பற்றியும் இப்படம் ஆழமான பார்வையை நிறுவியிருக்கிறது. இந்த சக / சமூக அழுத்தத்தால் தான் பூமா, தான் விக்கியை காதலிப்பதாக நம்ப வைக்கப்படுகிறாள்.
இந்தப் படத்தில் தோற்றத்தையும், சிந்தனையையும் தெளிவாக வைத்திருக்கும் துர்கா கவனிக்கப்பட வேண்டியவர். கல்லூரியில் பூமாவின் உருவத்தை வரைந்து விக்கி கேவலப்படுத்தும்போது, பூமாவுக்கு துணையாக நிற்பார் துர்கா. படித்த, சிந்தனை தெளிந்த பெண்கள் எப்போதும் தன் சக மனிதி விடுதலை பெற உதவியாக இருப்பார் / இருக்க வேண்டும் என்பதற்கான உருவகம் துர்கா.
பூமா மீண்டும் விக்கியிடம் சரணாகதி ஆகவும் செய்திருப்பாள், துர்கா இல்லாவிட்டால். துர்கா ஆதரவான அரவணைப்போடு தனது துணிச்சலையும் பூமாவுக்குக் கடத்துகிறாள். கதவில் வரையப்பட்ட உருவம் அழித்துவிட்டு கடந்து செல்ல வேண்டியது மட்டுமே அதைவைத்து வெட்கிப் போகக் கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள். க்ளைமாக்ஸில், துப்பட்டாவை வீசிவிட்டு, வீறுகொண்டு செல்லும் பூமா மைக்கில் அதைத்தான் உரக்கப் பேசுகிறாள்.
விக்கியுடனான நச்சு உறவில் துர்கா போன்ற பெண் இருந்து விக்கிக்கு பாடம் புகட்டுவது போல் படம் எடுத்திருக்கலாமே என்று இயக்குநர் ராகுலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படி எடுத்திருந்தால், துர்கா போன்ற அல்ட்ரா மாடர்ன் பொண்ணுக்கு, காதலை கிஸ் பண்ணி வெளிப்படுத்த தயாராக இருக்கும் பெண்ணுக்கு இப்படித்தான் நடக்கும் என்று ஆப்ஜக்டிஃபை பண்ணியிருப்பார்கள். அதனால்தான் நான் பூமாவை தேர்வு செய்தேன்” என்று கூறியிருப்பார்.
உண்மைதான். அண்மையில் ‘ஆண் பாவம் பொல்லாதது’ என்றொரு படம் வந்தது. அதில் பெண்கள் என்றாலே ப்யூட்டி பார்லர், பொட்டிக் வைப்பார்கள் என்றும், ஆள் அடையாளமே தெரியாமல் கூட மார்க்ஸை பின்பற்றுகிறேன் என்று பிதற்றுவார்கள் என்றும் பெண்ணை சிறுமைப்படுத்தியிருப்பார்கள்.
நமக்கான விடுதலையை நாம் அனுபவிக்க எது விடுதலை, எது சுதந்திரம் என்று நமக்குத் தெரிந்திருந்தால் போதும் மார்க்ஸோ, பெரியாரோ என்ற உருவத்தையும், அவர்களின் எழுத்தையும் முழுமையாக உள்வாங்கியவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. விடுதலை ஓர் உணர்வு, அந்த உணர்வு சிந்தனையில் உதிக்கும்போது அது உரிமைக் குரலாக உருவாகும். அந்த உரிமைக் குரலுக்கு உறுதுணையாக யாராவது தலைவரை, ஏதேனும் கோட்பாட்டை துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.
ஆண்கள் இங்கே விடுபட்டுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய. விடுபட்டாலும் கேள்விக்குள்ளாக்கப் பட மாட்டார்கள். அவர்களுக்கான சுதந்திரத்தைப் பெறுவது அவ்வளவு கடினமும் அல்ல. அதனால், இங்கே ‘ஆண் பாவம்’ பொல்லாததை விட ‘The GirlFriend’ தான் தேவை!