

‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதன் எதிரொலியாகத்தான் இப்போது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மத்தியில் தற்கொலை மரணங்கள், தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் போக்குகள் அதிகரித்த சூழலில் இந்தச் சட்டம் அவசியமானது என்று அரசுத் தரப்பில் அப்போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது இந்தத் தடைச் சட்டம் அமலாகியுள்ளது குறித்து பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “இந்த நாள் ஆஸ்திரேலிய குடும்பங்கள் டெக் ஜாம்பவான்களிடம் இருந்து அதிகாரத்தைத் திரும்பப் பெற்ற நாள். குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பதற்கான உரிமையை நிலைநாட்டிய நாள். இனி பெற்றோருக்கு அமைதி கிட்டும்” என்று பேட்டியளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தொலைத் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ், “எங்களது இலக்கு குழந்தைகள் நேரத்தை முழுக்க முழுக்க கேட்ஜட்ஸ் திரையில் குவிப்பதைத் தடுக்க வேண்டும். அவர்கள் மைதானங்களில் விளையாடுவதையும், கவின் கலை வகுப்புகளில் சேர்வதையும், ஒருவொருக்கொருவர் நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே” என்றார்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், த்ரெட்ஸ், ஸ்நாப்சாட், டிக்டாக், யூடியூப், எக்ஸ், ரெட்டிட், ட்விட்ச், கிக் உள்ளிட்ட 10 சமூக வலைதளங்களை ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அணுக தடை விதிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இன்னும் சில சமூக வலைதளங்களும் இணையலாம் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 2 லட்சம் டிக்டாக் பயனர்கள், 4 லட்சத்து 40 ஆயிரம் ஸ்நாப்சாட் பயனர்கள், 1 லட்சத்து 50 ஆயிரம் பேஸ்புக் பயனர்கள் மற்றும் 3.5 லட்சதுக்கு இன்ஸ்டாகிராம் பயனர்கள் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று பிரதமர் அல்பனீஸ் தெரிவித்தார்.
இத்தகையச் சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள நிலையில், உலக நாடுகளும் பலவும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தத் தடையானது, சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதால் ஏற்படும் சோஷியல் மீடியா அடிக்ஷன் பிரச்சினைகள், வயதுக்கு மீறிய விஷயங்களுக்கு ஆன்லைனில் எக்ஸ்போஸ் ஆவதால் குழந்தைகளுக்கு தம் சுயபிம்பத்தின் மீது ஏற்படும் குழப்பநிலை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுதல், செல்போன் பயன்பாட்டுக்கு அடிமையாதல் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கை என்று ஒரு புறத்திலிருந்து ஆதரவுக் குரல் குவிகிறது.
மறுபுறம், இவ்வாறாக தடை விதித்தல் என்பது வளரும் குழந்தைகளை ஒரு முக்கியமான தகவல் ஆதாரத்திலிருந்து விலக்கி வைக்கும் செயல். இது அவர்களின் சுய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் செயல். அதுமட்டுமின்றி அவர்களுக்கான ஓர் ஆன்லைன் சமூகத்தை உருவாக்கத் தடை விதிக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்று எதிர்ப்பை பதிவு செய்கிறது.
இதற்கிடையில், சமூக வலைதள நிறுவனங்கள் பலவும் ஆஸ்திரேலியாவின் வழியில் இன்னும் எத்தனை நாடுகள் இத்தகைய முடிவை எடுக்கக்கூடும். அதனால் தங்களுக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்படும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து வருகின்றன.
இருப்பினும், பல்வேறு சமூக வலைதளங்களும் ஆஸ்திரேலிய அரசின் உத்தரவை முழுவீச்சில் அமல்படுத்துவதாகக் கூறியுள்ளன. இந்தத் தடைக்கு ஒத்துழைக்காத சமூக வலைதள நிறுவனங்கள் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அபராதமாகக் கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதன்படி, சமூக வலைதளங்கள் பலவும் பயனர்களின் வயதை சரிபார்த்து கணக்குகளை முடக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளன.
ஒருவேளை முடக்கப்படும் கணக்குகள் 16 வயதுக்குக் கீழ் இருக்குமென்றால், அந்தக் கணக்கை அவர்கள் 16 வயதை எட்டியவுடனேயே பயன்படுத்த முடியும், அவர்களின் தரவுகள் எல்லாமே பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
ஆனால், சில குழந்தைகள் தங்கள் முக அடையாளங்களை மாற்றி கணக்கு பறிபோகாமல் தக்கவைத்துக் கொண்டதாகவும் பெற்றோர் தரப்பிலிருந்து இப்போதே புகார்களும் எழ ஆரம்பித்துள்ளன.
“எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம்...” - இந்த நிலையில், இந்தத் தடைச் சட்டம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவின் ‘தி சென்டர் ஃபார் மல்டி கல்ச்சரல் யூத்’ என்ற அமைப்பு இந்தத் தடை குறித்தப் பார்வையைப் பகிர்ந்துள்ளது.
அந்த அமைப்பானது, “இத்தகைய தடையானது நலிந்த பின்னணி கொண்ட குழந்தைகளைப் பாதிக்கும். சிலர் மிகவும் தொலதூரப் பகுதிகளில் வாழும் குழந்தைகள், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத குழந்தைகளுக்கு தொடர்புச் சிக்கலை ஏற்படுத்தும். இந்தக் குழந்தைகள் இதுநாள் வரை தங்களுக்கேற்ற ஓர் ஆன்லைன் சமூகத்தை உருவாக்கியிருப்பார்கள். அது இனி துண்டிக்கப்படும். இதனால், இந்தத் தடை எதிர்மறையாக அக்குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும். அவர்களுக்கு தகவல் பற்றாக்குறையும் ஏற்படும்” என்று எச்சரிக்கிறது.
அதேபோல், ஆஸ்திரேலிய பெற்றோர்கள் தரப்பில் இன்னொரு கவலையும் முன்வைக்கப்படுகிறது. அதில் அவர்கள், அரசு தடை செய்துள்ள சமூக வலைதளங்கள் பலவும் மெயின் ஸ்ட்ரீம் தளங்கள். ஆனால், பல சிறிய வலைதளங்கள் உள்ளன. அவற்றில்தான் அதிகப்படியான அபாயகரமான விஷயங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதள தடை தேவைதானா? - -ஆஸ்திரேலியாவைப் போல சமூக வலைதளத் தடை தேவைதானா என்பது குறித்து திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சர்மிளா பாலகுருவைக் கேட்டபோது, “16 வயதுக்கு உட்பட்டோருக்கான தடை வரவேற்கத்தக்கது தான். அதை பரவலாகவே அமல்படுத்தலாம்.
சமூக வலைதளங்களில் சிறுவயதிலேயே மூழ்கினால் கவனச் சிதறல் ஏற்படும். சராசரியாக ஒருவருக்கு 45 நிமிடங்கள் ஒரு விஷயத்தில் ஆழமாக கவனம் செலுத்த இயலும். அதனால்தான் பள்ளிகளில் கூட 45 நிமிடம் வகுப்புகள் நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் 15 விநாடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை தான் அட்டன்ஷன் ஸ்பான் இருக்கிறது. ஒரு ரீல்ஸ் நேரம் என்று வைத்துக் கொள்ளலாம். இது ஆபத்தான போக்கு.
எல்லா விஷயங்களையும் 3 நிமிடங்களுக்குள் சொல்லிவிட முடியாது. இப்படியாக, ரீல்ஸ் பார்த்துப் பார்த்துதான் பெற்றோரோ, ஆசிரியரோ 3 நிமிடங்களுக்கு மேல் ஏதாவது பேசினால், அது குழந்தைகள் கவனத்துக்குள் வருவதே இல்லை. சோஷியல் மீடியா அடிக்ஷன் அதிகமான டோப்பமைன் சுருக்கச் செய்யும். அது மூளைத் திறனை, முடிவுகள் எடுக்கும் திறமையைப் பாதிக்கும்.
வழக்கமாக தாயின் ஸ்பரிசம், ஆசிரியரின் பாராட்டு, நண்பனின் சின்ன பரிசுகளால் டோப்பைமன் சுரக்கும்போது மகிழ்ச்சி ஏற்படும். ஆனால், இவ்வாறான சோஷியல் மீடியா அடிக்ஷனால் ஏற்படும் டோப்பைமன் சுரத்தல் ஆபத்தான அளவுகளாக இருக்கும். அதனால், இதைவிட இதைவிட என்று ஏதேனும் ஒன்றை தேடித்தேடி ஸ்க்ரால் செய்து கொண்டே இருப்பார்கள். இத்தனை ஆபத்துகள் இருக்கும் சோஷியல் மீடியா அடிக்ஷனில் இருந்து குழந்தைகளை மீட்க என்னைப் பொறுத்தவரை தடை அவசியம்தான் என்பேன்” என்றார்.
எங்கெல்லாம் தடை உள்ளது? - ஆஸ்திரேலியாவில் தடை முழு வீச்சில் அமலாகியுள்ள நிலையில், மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடங்கி 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதளத்துக்கு தடை கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவும் சமூக வலைதளப் பயன்பாட்டுக்கு வயது வரம்பு குறித்து பரிசீலித்து வருகிறது. ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தினமும் 2 மணி நேரம் தான் ஒருவர் ஸ்மார்ட் போனில் பொழுதுபோக்கு அம்சங்களைப் பயன்படுத்த முடியும் என்று வயது வரம்பின்றி அனைவருக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.