Last Updated : 03 Mar, 2025 07:14 PM

1  

Published : 03 Mar 2025 07:14 PM
Last Updated : 03 Mar 2025 07:14 PM

Anuja: ஆஸ்கர் தவறினாலும் உலுக்கும் வாழ்க்கைப் பாடம் | ஓடிடி திரை அலசல்

வாழ்க்கை சிலருக்கு வரம், சிலருக்கு கடமை, இன்னும் சிலருக்கு வெறுமனே பிழைத்திருத்தல்! அவ்வாறாக, பிழைத்துக் கிடப்பதையே சவாலாகக் கொண்ட அக்கா, தங்கையின் லட்சிய வாழ்க்கைக்கான போராட்டம்தான் ‘அனுஜா’ (Anuja). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 97-வது ஆஸ்கர் விழாவில், இறுதிப் பரிந்துரை வரை முன்னேறி, சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் பிரிவில் போட்டியிட்டு விருதைத் தவறவிட்டாலும் கூட ‘அனுஜா’ தவறவிடக் கூடாத படைப்பு தான்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் குறும்படத்தின் காட்சி நேரம் வெறும் 23 நிமிடங்கள் தான். ஆனால் சோகத்தைப் பிழிந்து, கண்களில் கண்ணீர், இதயத்தை கனக்க வைக்காமல், வறுமையில் உழன்று தவிக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஒரு ‘அம்பீஷியஸ் லைஃப்’ சாத்தியமாவது எத்தகைய சவாலானது என்று சொல்லிச் செல்கிறாள் அனுஜா. அழுக்கான தேகம், அம்சமில்லாத ஆடை என்றாலும் கூட சிறிய மூக்குத்தியில் அழகாகத் தெரிகிறாள் அனுஜா. அவளுள் இருக்கும் கணித அறிவு அந்த ஒளியைத் தருகிறதோ என்னவோ!.

பாலக் (அனன்யா ஷான்பாக்), அனுஜா (சாஜ்தா பதான்) இருவரும் தாய், தந்தை இழந்த சகோதரிகள்.பாலக் வயதில் அப்படியொன்றும் மூத்தவள் இல்லையென்றாலும் கூட கதை சொல்லியாக, தங்கைக்காக சிந்திப்பவளாக, அவள் நலன் பேணுபவளாக அக்கறையில் தாயின் அன்புருவத்தைத் தாங்கி நிற்கிறாள். இருவருமே ஒரு கார்மென்ட் ஃபேக்டரியில் வேலை செய்கின்றனர். அனுஜாவுக்கு வயது 14-க்கும் கீழ். குழந்தைத் தொழிலாளி. இதனைத் தெரிந்து கொண்ட அந்தப் பகுதியில் சமூக ஆர்வலர் ஒருவர் மிகப் பெரிய போர்டிங் பள்ளியில் ஸ்காலர்ஷிப் தேர்வின் மூலம் அவளை சேர்த்துவிட முயல்கிறார்.

கார்மென்ட் ஃபேக்டரியின் முதலாளியிடம் அனுஜாவை தேர்வுக்கு அனுப்பக் கூறும் மிஸ்ராவிடம் பணமா, கனவா என்று வந்தால் அனுஜாக்கள் என்ன தேர்வு செய்வார்கள் என்ற தொனியில் பேசி அனுப்பிவைக்கிறார். குழந்தைத் தொழிலாளர்கள் நம் சமூகத்தில் இன்னும் ஒழிந்துவிடவில்லை. ஏன் என்பதற்கான சமூக சிக்கல்கள் பற்றி நம்மை சிந்திக்கச் செய்கிறது கார்மென்ட் நிறுவன முதலாளியின் பேச்சு. “இந்தப் பெண் தனது சொந்தப் பணத்தில் கவுரமவமாக உணவருந்துகிறாள். அதற்கு அவள் எனக்கு நன்றி கூற வேண்டும்” என்கிறார்.

மேலும், “எனது நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களின் ஆவணங்களும் மிகச் சரியாக உள்ளது. இங்கே உள்ள அனைவரும் மனம் உவந்தே பணி செய்கின்றனர். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்” எனக் கூறுகிறார். சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது சட்டத்தை எப்படி வளைத்துக் கொண்டார் என்பதன் அதிகார தொனி. எல்லோரும் மனம் உவந்தே வேலை செய்கிறார்கள் என்று சொல்வது வறுமையில் பிழைத்திருக்க விரும்பி வருகிறார்கள் என்ற நிதர்சனத்தின் முகம்.

அனுஜாவை தேர்வுக்கு தயாராக்கும் பாலக், டார்ச்லைட் வெளிச்சத்தில் செய்தித்தாளில் ஒரு மணமகள் தேவை விளம்பரத்தை வாசிக்க வைக்கிறாள். அந்த விளம்பரம் படித்துவிட்டால் மட்டும் பெண்கள் சுதந்திரமாக இருந்துவிட இந்தச் சமூகம் அவ்வளவு சீக்கிரம் அனுமதித்து விடாது என்ற உண்மையை அனுஜாவும் - பாலக்கும் பகிரும் பகடியால் உணர்த்துகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் என்றால் தொழிற்சாலைகளிலும், செங்கல் சூளைகளிலும் பணி புரிபவர்கள் என்றே நினைத்துக் கொள்ளும் நமக்கு நாம் அன்றாடம் பொது இடங்களில் கடந்து செல்லும் புத்தகம், பேணா, கைப்பை, கடலை இன்னும் பல விற்கும் குழந்தைகளின் முகம் தெரியாமல் போய்விடுகிறது. ஒரு தேர்வுக்கான கட்டணத்துக்கு பாலக்கும், அனுஜாவும் தெருவில் கைப்பையை விற்கும் காட்சிகள் அதனை நமக்கு நினைவுபடுத்துகிறது.

தெருவெங்கும் அலையும் அனுஜா அந்தப் பைகளை விற்க ஒரு மாலுக்குள் நுழைந்துவிடுகிறாள். அங்கே எதையோ ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் மேல்தட்டு பெண்மணி ஒருவர் அனுஜா கேட்கும் தொகையைக் கொடுத்து அந்தப் பைகளை வாங்கிக் கொள்கிறார். அங்கே அவளை கடை முதலாளி துரத்த, அவள் தப்பிக்க உதவுகிறார் காவலாளி. வறுமையின் முகம் தெரிந்த நபராகத்தானே அவரும் இருப்பார்.

வறுமையில் பிழைத்திருப்பவர்களுக்கு சிறு தொகையும் பெரும் புன்னகையைத் தரும் என்பதற்குக் கையில் கிடைத்த காசுடன் ஜிலேபி, பாப்கார்ன், பழைய திரைப்படம் என்று மகிழ்ந்திருக்கும் சகோதரிகள் சாட்சியாகி நிற்கிறார்கள்.

வாழ்க்கை தரும் நெருக்கடிகள் சிலரை குற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும், சிலரை கிடைத்த வாய்ப்புகளை எப்படி சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று யோசிக்கச் செய்யும். அப்படி பாலக் கார்மென்ட் ஃபேக்டரியில் மீந்தும் போகும் துணியை பைகளாக தைத்தெடுக்கும் காட்சிகள் நம்பிக்கை ஊட்டுபவைதான். அது அனுஜாவுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் தான். நெருக்கடி நம்மை துரத்தும்போது அதை நமக்கு ஏற்றார்போல் வளைப்பதில் தானே சாதுர்யம் இருக்கிறது.

அனுஜாவின் கணக்குத் திறனை பரிசோதிக்க நினைக்கும் கார்மென்ட்ஸ் ஃபேக்டரி முதலாளிக்கு அவளது மதிநுட்பம் ஷாக் தருகிறது. ஆனாலும் கூட முதலாளித்துவ மனம் அவளுக்காக ரூ.400 கொடுத்து போர்டிங் பள்ளிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. மாறாக, அந்த மதிநுட்பத்தை சொர்ப்ப பணத்துக்கு எப்படி விலைக்கு வாங்கலாம் என யோசிக்க வைக்கிறது. அதன் விளைவாக குழந்தையிடம் டீல் பேசுகிறார். “நீ எனக்காக கணக்கில் உதவி செய்தால், கூடுதல் சம்பளம் தருவேன். இல்லாவிட்டால் நீயும், உன் அக்காவும் எங்குமே வேலை செய்ய முடியாது” என்று மிரட்டுகிறார்.

குழந்தை அனுஜா தன் மதிநுட்பத்தைப் பற்றி சிலாகித்து பெருமிதம் கொள்ளும் மனநிலையில் எல்லாம் இல்லை. மிரட்டலைக் கேட்டு அதிர்ந்து வெளியேறுகிறாள். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிக்கபெரியது என்றால் கல் நெஞ்சம் கொண்ட முதலாளிகள் கறையாமல் இருந்தால் அது முற்றிலும் சாத்தியப்படாது எனச் சொல்கிறாள் அனுஜா. தொடர்ந்து பரீட்சை எழுத வேண்டுமா என்ற அக்கா தங்கை உரையாடலில், கல்வியே முக்கியம் எனது கல்யாணம் அல்ல என்று பெண் பிள்ளைக்கான அவசியம் எதுவென்று தங்கைக்கு புரிய வைக்கிறாள் பாலக்.

மறுநாள் பொழுது புலர்கிறது. அனுஜாவுக்காக 3 பேர் காத்திருக்கிறார்கள். அவளை பரீட்சைக்கு அனுப்பிவைத்துவிட்டு கார்மென்ட்ஸ் செல்லும் பாலக், அவள் ஃபேக்டரிக்கு வருவாளா, மாட்டாளா என்று மணியைப் பார்க்கும் முதலாளி, பரீட்சையை அனுஜா எழுதுவாளா இல்லையா என்று எதிர்பார்ப்பில் ஆசிரியர் மிஸ்ரா. அனுஜாவின் திறமைக்கு தேர்வெழுதினாள் நிச்சயம் வெற்றி பெறுவாள். கல்வி அவளை புதிய உலகத்தில் நிறுத்தும். ஆனால் அதில் ஒருவேளை தேறாவிட்டால் ஃபேக்டரியில் தங்களின் வேலை, எதிர்காலம் என்னவாகும்? இவ்வளவு பெரிய முடிவை எடுக்க அனுஜாவின் கணித அறிவு மட்டும் போதாது அல்லவா? உணர்வுப் போராட்டத்தில் சிக்குகிறாள். அழுத்தமான பின்னணி இசை, நம்மையும் அதேவித மனப்போராட்டத்துக்குள் தள்ளுகிறது.

ஒரு ஃப்ரேமில் அனுஜா வீட்டு மேற்கூரையில் சொட்டும் நீரை தாங்கும் குவளை, இன்னொரு ஃப்ரேமில் அக்கா பாலக் விரலில் ஊசி தைத்து வெளியேறும் ரத்தம். இதை வைத்து Blood is thicker than water என்பார்களே அந்தச் சொலவடைக்கு ஏற்ப உறவே முக்கியம் என்று ஃபேக்டரிக்கு செல்வாளா அனுஜா? இல்லை தீர்க்கமாக முடிவெடுத்து பரீட்சைக்குச் செல்வாளா? குறும்படத்தில் முடிவு ஓபனாக சொல்லப்படவில்லை. அது கேள்வி தான். நமக்கானது அல்ல. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டிய, வறுமையை ஒழிக்க வேண்டிய அத்தனை ஸ்டேக் ஹோல்டர்ஸுக்குமான கேள்வி.

அனுஜாவாக நடித்துள்ள சாஜ்தா பதான் உண்மையில் டெல்லியில் வாழும் தெருவோரக் குழந்தைகளில் ஒருவர்தான். எண்ட் கிரெடிட்ஸில் அவர்கள் அதனைச் சொல்லும்போது தான் ஏன் அனுஜாவால் அவ்வளவு நேர்த்தியாக உணர்வுகளைக் கடத்த முடிந்தது என்று புரிகிறது. ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டாலும் கூட தாராளமாக அப்ளாஸ் கொடுக்கலாம் அனுஜாவுக்கு. இந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. படத்தை ஆடம் ஜெ கிரேவ்ஸ் இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் விருதினை ‘ஐ ஆம் நாட் ஏ ரோபோ’ தட்டிச் சென்றது. மேலும் வாசிக்க>> ஆஸ்கர் 2025 விருதுகள்: முழுப் பட்டியல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x