

விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’. இதை மணிகண்டன், அஜித்குமார் இயக்கியுள்ளனர். மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன், விஜே பார்வதி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தொடரில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, ``ஒரு நாள், என் அலுவலகத்தில் இருந்தேன். ஹாட் ஸ்டார் பிரதீப் வந்தார். ‘பிக் பாஸி’ல் நீங்கள் தான்தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். ‘அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பார்த்தது கூட கிடையாது.
சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப்பாருங்கள்’ என்று நான் சொன்னேன். ஆனால் பிரதீப், ‘நீங்கள் செய்யுங்கள்’ என்று கேட்டார். வாழ்க்கையில் நான் இன்று ஓரளவுக்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் பெரிதாக அனுபவம் இல்லாத, அறிமுகம் இல்லாத, ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது.
என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்துப் பாராட்டும் போதுதான் எனக்குத் தெரியவரும், ‘ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்று. ஆனால், அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
இதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இயக்குநர் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான், நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தைத் தரும். இந்தவெப் தொடர் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.