

புதுடெல்லி: பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட போதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்நாட்டில் துரந்தர்-2 திரைப்படம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் துரந்தர்-1 திரைப்படம் கடந்த 2025-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், அக் ஷய் கன்னா, ஆர்.மாதவன், உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாகிஸ்தானில் ரகசிய உளவாளியாக ஊடுருவும் இந்தியரான ரன்வீர் சிங்கின் கதை இது. இந்தப் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான காட்சிகள் இருந்ததால் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் இந்தத் திரைப்படம் ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து துரந்தர்-2 படம் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே, 2-ம் பாகத்தை திரையிடுவதற்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் திரையரங்குகளில் வெளியிடத் தடை இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியிடுவதற்குத் தடை இல்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான சில நிமிடங்களில் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக அளவிலான மக்கள் இந்தத் திரைப்படத்தை ஓடிடி-யில் காண ஆர்வம் காட்டினர். இதனால் ஓடிடி தளத்தின் சர்வர் கிராஷ் ஆனது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தத் திரைப்படம் டிரெண்டிங்கில் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் படம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து மாவியா உமர் பரூக்கி என்பவர் கூறும்போது, “பாகிஸ்தானில் துரந்தர் 2 படம் வெளியாகும் நேரத்துக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் ஓடிடி தளத்தை லட்சக்கணக்கான மக்கள் அணுகியதால் சர்வர் கிராஷ் ஆனது” என்றார். துரந்தர்-2-ம் பாகம் வரும் ஜூன் 4-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
போட்டி படத்துக்கு வரவேற்பில்லை: துரந்தர் திரைப்படத்தின் கதையானது பாகிஸ்தானில் உள்ள லயாரி பகுதியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. துரந்தர்-1, துரந்தர்-2 ஆகிய 2 படங்களுமே இந்த லயாரி நகர வாழ்க்கையை வெளிப்படுத்தின. இதனால் லயாரி நகர மக்கள், துரந்தர் பட லாபத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர்.
இந்நிலையில் துரந்தர் படத்துக்கு போட்டியாக பாகிஸ்தானில், ‘மேரா லயாரி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி வெளியானது. ஆனால், இந்தப் படத்துக்கு போதிய வரவேற்பில்லை. முதல் காட்சிக்கு வெறும் 22 டிக்கெட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.