

பாகிஸ்தானில் உருவான வெப் தொடரை இந்தியாவில் ஒளிபரப்ப வேண்டாம் என நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் 2025 மே, 8-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரபல பாகிஸ்தான் நடிகர்களான ஃபவத் கான், மஹிரா கான், சனம் சயீத் இணைந்து நடித்திருக்கும் பாகிஸ்தான் அசல் வெப் தொடரான ‘ஜோ பச்சே ஹைன் சங் சமாயித் லோ’வின் ட்ரெய்லரை செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளம், இத்தொடர் டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பும் (AICWA), மேற்கு இந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பும் (FWICE) இந்த பாகிஸ்தான் வெப் தொடர் இந்தியாவில் ஒளிபரப்பு ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.
அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் கடிதத்தில், ‘அந்தத் தொடர் இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டால், அது அரசு வழங்கி இருக்கும் ஆலோசனையின் நோக்கத்துக்கும், நாட்டின் உணர்வுக்கும் எதிரானதாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.
எஃப்டபில்யூஐசிஇ தனது கடிதத்தில், ‘பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் ஒளிபரப்பப்படுவது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு, தகவல் ஒலிபரப்புத் துறைக்கும், சம்பந்தப்பட்ட பிற துறைகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025 ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மே 8 அன்று, இந்தியாவில் உள்ள ஓடிடி தளங்கள், ஒளிபரப்பு சேவை வழங்குபவர்கள் பாகிஸ்தானில் இருந்து வரும் உள்ளடக்கங்களை நிறுத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், பாகிஸ்தானில் உருவாக்கப்படும் திரைப்படங்களையோ, தொடர்களையோ இந்திய சந்தாதாரர்களுக்கு வழங்கமாட்டோம் என தகவல் ஒலிபரப்புத் துறையிடம் தெரிவித்திருந்தது.
இந்தப் பின்னணியில், பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், இந்த தடை விதிக்கும் கோரிக்கை குறித்து விமர்சித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கலை மற்றும் கலாச்சாரத்தை இந்தியா ஆயுதமாக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.