BTS: The Return - ‘ஆரிராங்’ உடன் திரும்பும் பிடிஎஸ் இசைக் குழுவும், ஓடிடி தரிசனமும்!

BTS: The Return - ‘ஆரிராங்’ உடன் திரும்பும் பிடிஎஸ் இசைக் குழுவும், ஓடிடி தரிசனமும்!
Updated on
2 min read

உலக ‘பிடிஎஸ்’ (BTS) ரசிகர்களின் மூன்று ஆண்டுகள் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் மார்ச் 21-ஆம் தேதி நிறைவேற இருக்கிறது. சியோலின் இதயப் பகுதியான க்வாங்ஹ்வாமுன் சதுக்கம் 2026 மார்ச் 21-ஆம் தேதி உலக அரங்கமாக மாறவிருக்கிறது. ஆம், உலகப் புகழ்பெற்ற இசைக்குழுவான ‘பிடிஎஸ்’ ‘BTS THE COMEBACK LIVE | ARIRANG’ என்ற நிகழ்ச்சியுடன் மீண்டும் களமிறங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தென் கொரிய நேரம் இரவு 8 மணிக்கு (KST) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நேரலையாக ஒளிபரப்பாகும். இது ஒரு சாதாரண பாப் இசைக்குழுவின் கச்சேரி அல்ல; தென் கொரிய பண்பாட்டுக்குப் பெறுமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படுகிறது. மார்ச் 20-ஆம் தேதி வெளியாக இருக்கும் பிடிஎஸ் எகுழுவின் புதிய ஆல்பமான ‘ஆரிராங்’ (Arirang) வெளியான அடுத்த நாளே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘ஆரிராங்’ என்றால் என்ன?

‘ஆரிராங்’ என்பது கொரியாவின் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் ஆகும். ஒரு வகையில் அந்நாட்டின் அதிகாரபூர்வமற்ற தேசிய கீதம் என்றே கூறலாம். ஜப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில், ‘ஆரிராங்’ எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்று வரை, வட மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் சில பொதுவான கலாச்சார அடையாளங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும், இது யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ‘Intangible Cultural Heritage list’-ல் இடம்பெற்றுள்ளது.

தங்களின் இசையால் உலகையே தங்கள் வசம் வைத்திருக்கும் இந்த இசைக் குழுவின் அங்கத்தினர்கள் ஏழு பேரும் தங்களது இரண்டு வருட கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு மீண்டும் தங்களின் இசைப் பயணத்தை தொடங்குவதற்கு தேர்ந்தெடுத்துள்ள இந்தத் தலைப்பு மிகவும் கச்சிதமாக இருக்கிறது என்றே கூறலாம்.

நவீன பாப் இசையின் சிறப்பையும், தென் கொரிய பாரம்பரியமும், கலாச்சாரத்தின் செழுமையையும் இணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஆரிரங்’ நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிடிஎஸ் குழுவுடன் 50 நடனக் கலைஞர்களும், 13 பாரம்பரிய இசைக் கலைஞர்களும் மேடையில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட க்வாங்ஹ்வாமுன் சதுக்கத்தில் நேரடியாக 22,000 ரசிகர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியை காண முடியும். ஆனால், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டிஜிட்டல் வழியாக இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தயாராகியுள்ளனர். அமெரிக்காவில் நள்ளிரவு விருந்துகளாகவும், ஐரோப்பாவில் அதிகாலை கூடுக்களாகவும் ‘பிடிஎஸ் ஆர்மி’ ரசிகர்கள் ஒன்றிணைகின்றனர்.

‘மாஸ் பங்க்’ கலக்கம்

இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில், குறிப்பாக சமூக ஊடகங்களில், மாணவர்கள் ‘மாஸ் பங்க்’ குறித்து விவாதித்து வருகின்றனர். அதாவது, 4:30 மாலை (IST) ஒளிபரப்பைப் பார்க்க பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை ஒரே நாளுக்கு தவிர்க்கத் திட்டமிடுகின்றனர். இதை ஒரு வரலாற்று நிகழ்வாகவே அனைத்து தரப்பு ரசிகர்களும் கருதுகின்றனர்.

“மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறோம். ஒரு நாள் பிசிக்ஸ் காத்திருக்கலாம்!” என்று ஒரு மாணவர் இணையத்தில் பதிவிடுகிறார். பெற்றோர்களே உஷார்!

பாதுகாப்பு மற்றும் ‘தி ரிட்டர்ன்’

சியோல் நகர மையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிகழ்ச்சி உயர் பாதுகாப்பு முன்னுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத ரசிகர்களும் சதுக்கம் அருகே திரள வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த மாபெரும் கம்பேக் எப்படி உருவானது என்பதைப் பற்றி, மார்ச் 27-ஆம் தேதி ‘நெட்ஃப்ளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் ‘பிடிஎஸ்: தி ரிட்டர்ன்’ (BTS: The Return) என்ற ஆவணப் படத்தை வெளியிடுகிறது. பிடிஎஸ் இசைக் குழுவின் பயணத்தின் பின்னணியில் இருந்த உழைப்பு, தியாகம் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த ஆவணப் படம், ரசிகர்களுக்கு ஓர் ஆழமான பார்வையை வழங்கும் என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

இந்த நிகழ்ச்சி, பிடிஎஸ் இசைப் பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக மட்டுமின்றி, உலகளாவிய ரசிகர்கள் இடையே கொரிய கலாச்சாரத்தின் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் நிகழ்வாகவும் அமையும் என கூறலாம்.

அதெல்லாம் இருக்கட்டும் ‘ஆரிராங்’ என்ற வார்த்தை எங்கே இருந்து வந்தது தெரியுமா?

நம் தமிழ்தான். அது குறித்தும் விரைவில் விரிவாக பகிர்கிறேன்.

BTS: The Return - ‘ஆரிராங்’ உடன் திரும்பும் பிடிஎஸ் இசைக் குழுவும், ஓடிடி தரிசனமும்!
KPop Demon Hunters: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற அனிமேஷன் படத்தின் சிறப்பு என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in