KPop Demon Hunters: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற அனிமேஷன் படத்தின் சிறப்பு என்ன?

KPop Demon Hunters: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற அனிமேஷன் படத்தின் சிறப்பு என்ன?
Updated on
2 min read

மேகி காங் மற்றும் கிரிஸ் அப்பெல்ஹான்ஸ் இயக்கத்தில், நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட அனிமேஷன் திரைப்படமான ‘கே-பாப் டீமன் ஹன்ட்டர்ஸ்’ (KPop Demon Hunters) இந்த ஆண்டு ஆஸ்கர் மேடையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அனிமேஷன் படம் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. அதில் இடம்பெற்ற ‘கோல்டன்’ (Golden) பாடல், சிறந்த பாடலுக்கான விருதையும், இப்படம், சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றுள்ளது. சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் வென்ற முதல் கே-பாப் (K-pop) பாடல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியானது முதல் வீட்டிலும் சரி, காரிலும் சரி ஒலித்துக் கொண்டிருந்த பாடல் “You’re my Soda pop”. பள்ளி விடுமுறை என்றால் போதும், பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பார்த்த படம் K-Pop Demon Hunters. “என்னடா இது?” என்ற குறுகுறுப்பிலும், ஹால்யு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால் எழுந்த ஆர்வத்திலும், பிள்ளைகளுடன் சேர்ந்து பல முறை இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது.

மிகவும் சாதாரண ஒரு சூப்பர் ஹீரோ கதைக்களம் தான். ஆனால், அதில் கொரிய புராணங்களில் வரும் சில அடிப்படை விஷயங்களையும் கே-பாப்பையும் பின்னி ரசிக்கும்படியாக கொடுத்திருந்தார் இயக்குநர். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் இதன் இசை.

இசையமைப்பாளர் மார்செல்லோ சார்வொசின் இசையில் “Golden”, “Soda Pop”, “How It’s Done” போன்ற பாடல்கள் உலக கே-பாப் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலாச்சார உருவகமாகவே மாறியிருக்கிறது. Dance Challenges, TikTok Videos, Fan Covers - என்று ரசிகர்கள் இந்த பாடல்களை ஒரு K-pop Demon Hunters wave ஆக மாற்றியிருந்தனர்.

அமெரிக்க ஓபனில் நோவாக் ஜோகோவிச் தனது வெற்றிக்குப் பிறகு “Soda Pop” பாடலின் நடனத்தை மேடையில் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் இசை, சர்வதேச விளையாட்டு அரங்ககளுக்குள் புகுந்து கலாச்சார நிகழ்வாக மாறியது இதுவே முதல் முறை.

இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய அம்சம், ஆசிய மக்களின் உருவமைப்பு. படத்தின் இயக்குநர் கொரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் படத்தின் மையம் கொரிய கலாச்சாரத்தின் சாராம்சத்தை நன்றாக எடுத்துக் காட்டியிருந்தார். கே-பாப் ரசிகர்கள் இதை ஒரு சாதாரண விருதாகப் பார்க்கவில்லை என்றே கூறலாம். இது ஒரு கலாச்சார வெற்றியின் மைல்களாகத்தான் பார்க்கிறார்கள்.

KPop Demon Hunters வெற்றியைப் புரிந்துகொள்ள Korean Wave (Hallyu) என்ற உலகளாவிய கலாச்சார இயக்கத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

இருபது ஆண்டுகளாக தென் கொரிய கலாச்சாரம் - திரைப்படங்கள், தொடர்கள், K-pop உலகத்தை கவர்ந்து கொண்டிருக்க ‘பாரசைட்’ (Parasite) திரைப்படமும், ‘ஸ்குவிட் கேம்’ (Squid Game) தொடரும் அந்த வெற்றியின் முக்கிய அடையாளங்கள்.

ஆனால், KPop Demon Hunters வேறுபட்டது. இந்தப் படம் முழுவதும் தென் கொரியாவில் உருவாக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் வாழும் கொரிய வம்சாவளி கலைஞர்கள் இதில் பங்குபெற்றிருக்கின்றனர். அதனால், இது கொரிய கலாச்சாரம் உலகத்துடன் மேலும் இணையும் ஓர் அடுத்த கட்டம். இப்போது கொரிய அலை என்பது ஒரு நாட்டுடைய கலாச்சார பொருள் மட்டும் அல்ல - அது உலகளாவிய கூட்டுப் படைப்பாக மாற்றியிருக்கிறது இந்த அனிமேஷன் திரைப்படம்.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்த அனிமேஷன் இசைத் திரைப்படம், கே-பாப் உலகத்தையும், அதிரடியான கற்பனை உலகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

மேலும், சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை K-pop Demon Hunters பெற்ற தருணம், ஒரு திரைப்படத்தின் வெற்றியைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் உலக அங்கீகாரமாக மாற்றியிருக்கிறது. இந்த அனிமேஷன் படத்துக்கான விருது ஒரு சாதாரண விருது அறிவிப்பாக இல்லாமல், கலாச்சாரங்கள் இனையும் உண்மையான சர்வதேச விருது மேடையாக ஆஸ்கர் மேடை மாறியுள்ளது. அப்படி சொல்லும்பொழுது இந்த வெற்றி கதைக்கா அல்லது கலாச்சரத்தின் தாக்கத்துக்கா என்ற கேள்வி எழாமல் இல்லை.

இருப்பினும், ஓர் உண்மை மறுக்க முடியாது. KPop Demon Hunters - உலக சினிமாவின் எல்லைகளை மாற்றியுள்ளது. ஒரு கொரிய பின்புலம் உள்ள கதையை உலக கலைஞர்கள் உருவாக்கி, ஓடிடி தளத்தின் மூலம் உலக ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக வெற்றி பெற்றிருக்கிறது. இது உலக சினிமா அடுத்தக் கட்டத்துக்குள் அடியெடுத்து வைப்பதற்கான ஓர் அடையாளம்.

அசுரர்களை வேட்டையாடிய அந்தக் கதை மாந்தர்கள் இப்போது ஹாலிவுட்டையும் வென்றுவிட்டனர். அதுவே KPop Demon Hunters-ன் உண்மையான வெற்றி!

- முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன் | உதவி பேராசிரியர், இதழியல் துறை, தொலைத்தூர கல்வி மையம், சென்னை பல்கலைக்கழகம்.

KPop Demon Hunters: இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற அனிமேஷன் படத்தின் சிறப்பு என்ன?
“கே-பாப், கே-டிராமாவை விட ஆழமானது கொரிய இலக்கியம்!” - நாவலாசிரியர் பியூன் ஹியே-யங் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in