

இந்தி நடிகை அனன்யா பாண்டே நடித்து அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான வெப் தொடர், ‘கால் மீ பே’ (Call Me Bae). காமெடி டிராமா தொடரான இதை காலின் டி ’குன்ஹா இயக்கி இருந்தார். வீர் தாஸ், குர்பாதே பிர்ஸாடா, வருண் சூட், விஹான் சமத் என பலர் நடித்தனர். கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற இத்தொடரின் அடுத்த சீசன் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடிக்கின்றனர். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் புதிதாக இணைந்துள்ளார்.
அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தொடர்பான காட்சிகள் சமீபத்தில் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டன. ஸ்ருதி கவர்ச்சியுடன் கூடிய ஸ்டைலான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டரை கண்டு பார்வையாளர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள் என்றும் இத்தொடரின் குழுவினர் தெரிவித்துள்ளனர். முந்தைய பாகத்தை விட கூடுதல் திருப்பங்கள் மற்றும் நகைச்சுவையுடன் இத்தொடர் உருவாக இருக்கிறது.