Published : 17 Apr 2024 01:37 PM
Last Updated : 17 Apr 2024 01:37 PM

Amar Singh Chamkila: இம்தியாஸ் - ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு இசை விருந்து | ஓடிடி திரை அலசல்

1980களில் பஞ்சாப் மாநிலத்தில் மிகப் பிரபலமான இருந்த மேடைப் பாடகர் அமர் சிங் சம்கிலா. 27 வயதிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்கிலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இம்தியாஸ் அலி இயக்கியுள்ள படம் ‘சம்கிலா’.

ஒரு கச்சேரியில் பாடுவதற்காக காரில் இருந்து இறங்கும் அமர் சிங் சம்கிலா மற்றும் அவரது சக பாடகரும் மனைவியுமான அமர்ஜ்யோத் இருவரும் மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்படுவதோடு படம் தொடங்குகிறது. அதன் பிறகு சம்கிலாவின் நண்பர்கள் சொல்லும் ப்ளாஷ்பேக்கின் மூலம் மொத்தப்படமும் நகர்கிறது. சம்கிலாவின் பால்யம், இளமைக் காலம், வளர்ச்சி, திருமணம், இறப்பு என பயணிக்கிறது கதை.

படம் தொடங்கும்போது நமக்கு படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. படத்தின் பிரதான கதாபாத்திரம் இறந்துவிடுவதாக தொடக்கத்திலேயே காட்டிவிட்ட பிறகு கதையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? என்ற கேள்வியையும் தாண்டி இறுதிவரை இம்மியளவு கூட சுவாரஸ்யம் குன்றாமல் திரைக்கதையை கொண்டு சென்றதே இப்படத்தின் வெற்றி.

ஒரு துக்க காட்சியிலிருந்து படத்தை தொடங்கி இருந்தாலும் கூட எந்த இடத்திலும் வலிந்து திணிக்கப்பட்ட நெஞ்சைப் பிழியும் காட்சிகளை இட்டு நிரப்பவில்லை இயக்குநர். மிக இயல்பாக, அதே நேரம் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய ஜாலியான காட்சியமைப்புகள் படத்தின் பலம்.

வழக்கமாக காதல் கதைக்களங்களையே கொடுத்து வந்த இம்தியாஸ் அலிக்கு இது முற்றிலும் புதிய கதைக்களம். ஆனாலும் மனிதர் இதில் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பயோபிக் என்பதால் சற்றே பிசகினாலும் ஆவணப்படமாக மாறிவிடக்கூடிய சூழல் கொண்ட கதையை சக எழுத்தாளர்கள் நிதி சேதியா மற்றும் ரிச்சா நந்தா உடன் சேர்ந்து சம்கிலா என்ற மனிதனின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் சிறப்பாக தந்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஏ.ஆர்.ரஹ்மானை தாராளமாகச் சொல்லலாம். இதற்கு முன்பாக இம்தியாஸ் அலி - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி பல கிளாசிக் பாடல்களை வழங்கியுள்ளதை மறுக்க இயலாது. ‘ஹைவே’, ‘ராக்ஸ்டார்’, ‘தமாஷா’ ஆகிய படங்களின் பாடல்கள் உதாரணம். அந்த வரிசையில் ‘சம்கிலா’ பாடல்கள் நிச்சயம் இடம்பெறும். சம்கிலா கதாபாத்திரம் மேடையில் பாடும் பாடல்கள் உட்பட ‘து கியா ஜானே’, ‘இஷ்க் மிடாயே’, ‘போல் மொஹப்பத்’ உள்ளிட்ட பாடல்கள் சிறப்பு.

சம்கிலாவாக திலிஜித் தோஸாஞ்ச். இயல்பிலேயே பாடகர் என்பதால் திலிஜித் தோஸாஞ்ச் தனது கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையான நடிப்பை வழங்கியுள்ளார். 80-களில் பஞ்சாபை கலக்கிய ஒரு மனிதனின் பாத்திரத்தை கண்முன் நிறுத்துவதில் வெற்றி பெறுகிறார். அமர்ஜ்யோத் கதாபாத்திரத்தில் வரும் பரினீதி சோப்ரா குறையில்லாத நடிப்பை தந்து கவனம் ஈர்க்கிறார்.

படத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வரும் சம்கிலா, பஞ்சாயத்தில் ஊர் மக்களை தன் பக்கம் திருப்புவது, மேடையில் பாடகர் ஒருவர் வராததால் எதேச்சையாக பாடும் சம்கிலா ரசிகர்களை தன் வசமாக்குவது, நாயகிக்கு பாடல் சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் திரைக்கதையின் ஓட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகின்றன.

மொத்தத்தில், இம்தியாஸ் அலியின் தொய்வில்லாத திரைக்கதை, திலிஜித்தின் பாராட்டத்தக்க நடிப்பு, ரஹ்மானின் தரமான இசை ஆகியவற்றின் மூலம் ஒரு முழுமையான சினிமாவாக பரிணமித்துள்ள ’சம்கிலா’, இம்தியாஸ் - ரஹ்மான் கூட்டணியில் மற்றுமொரு இசை விருந்து!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x