Published : 12 Nov 2023 12:50 PM
Last Updated : 12 Nov 2023 12:50 PM

ஓடிடி திரை அலசல் | Loki Season 2: மார்வெலிடமிருந்து ஒரு தரமான ‘சம்பவம்’

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஆரம்ப காலகட்டங்களில் மார்வெல் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட கதாபாத்திரம் லோகி ஆகத்தான் இருக்கும். நார்ஸ் இதிகாசங்களில் புகழ்பெற்ற கடவுளான லோகியை அடிப்படையாகக் கொண்டு மறைந்த ஸ்டான் லீ உருவாக்கிய கதாபாத்திரம் இது. புராணத்தின்படி கிரேக்க கடவுள் ஓடினின் வளர்ப்பு மகன், தோரின் சகோதரன். மார்வெல் படங்களில் வில்லனாக அறிமுகமாகி, மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த கதாபாத்திரத்துக்காக தனியாக உருவாக்கப்பட்ட வெப்தொடர் ‘லோகி’. வெறுப்பில் தொடங்கிய லோகியின் பயணத்துக்கு ஒரு நெகிழ்ச்சியான முடிவை கொடுத்திருக்கிறது ‘லோகி’ சீசன் 2.

கடந்த சீசனின் இறுதியில் லோகியின் (டாம் ஹிடில்ஸ்டன்) மற்றொரு வெர்சன் ஆன சில்வி (சோஃபியா டி மார்டினோ), வில்லன் Kang-ஐ (ஜானதன் மேஜர்ஸ்) கொன்றதும், காலத்தை கண்காணிக்கும் டிவிஏ (Time Variance Authority) அமைப்பு நிலைகுலைய தொடங்குகிறது. இதனிடையே லோகிக்கு ‘டைம் ஸ்லிப்பிங்’ என்ற ஒரு புதிய பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி அவர் தன்னையே அறியாமல் வெவ்வேறு டைம்லைன்களுக்கு சென்றுவிடுகிறார். இதனை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அழிந்துகொண்டிருக்கும் டைம்லைன்களை காப்பாற்ற வேண்டுமென்றால், காலப்பயணம் செய்து டிவிஏ-வை உருவாக்கிய கேங்-ஐ கண்டுபிடித்து, அனைத்தையும் சரிசெய்யவேண்டும். இறுதியில் டைம்லைன்கள் காப்பாற்றப்பட்டனவா? லோகியின் அந்த ‘உன்னத நோக்கம்’ நிறைவேறியதா? என்பதை நெகிழ்ச்சியுடனும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறது ‘லோகி’ சீசன் 2.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பத்து ஆண்டுகள் தொடர் வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்த மார்வெல் ‘எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு அந்த வெற்றிகளை தக்க வைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸ் 3’ போல அவ்வப்போது வெற்றி கிடைத்தாலும், ‘தோர் 4’, ‘ஆன்ட்-மேன் 3’ போன்ற படங்கள், மார்வெல் நிறுவனத்தை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கின. இடையிடையே வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வந்த மார்வெல் நிறுவனத்திடமிருந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான, தரமான படைப்பாக வெளியாகியுள்ளது ‘லோகி சீசன் 2’.

தானோஸுக்கு அடுத்து மார்வெலின் மிகப்பெரிய வில்லன் யார் என்ற கேள்வியை போக்கும் வகையில், ‘லோகி’ முதல் சீசனின் இறுதியில், Kang the Conqueror என்ற வில்லன் அறிமுகப்படுத்தப்பட்டார். காலப் பயணத்தின் மூலம் தன்னுடைய ஆயிரக்கணக்கான வடிவங்களை உலகத்தில் நடமாடவிட்டிருக்கும், இவரை சில்வி கொல்வதுடன் முதல் சீசன் முடிந்தது. ஆனால் இந்த சீசனில் டைம்லைன்களின் அழிவை தடுக்கும்பொருட்டு Kangன் மற்றொரு வடிவமான, டைம்லி விக்டர் என்பவருடைய உதவியை லோகி நாடிச் செல்கிறார். இந்த சீசனில் வில்லன் என்று யாருமே கிடையாது. சொல்லப் போனால் காலம் தான் இந்த சீசனில் வில்லன் என்று வைத்துக் கொள்ளலாம். எனினும் சீசன் முழுக்க ஒவ்வொரு எபிசோடையும் ஒருவித பரபரப்புடனும், அடுத்து என்ன என்ற கேள்வியுடனும் கொண்டு சென்றிருப்பது கைகொடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்த இரண்டாவது சீசனுமே லோகியை ஒரு மாபெரும் உன்னத நோக்கத்துக்காக தயார் செய்கிறது. அந்த நோக்கம் என்ன என்பதைச் சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் அதனை தொடரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மார்வெல் நிறுவனத்தின் மிகச்சிறந்த கதாபாத்திர தேர்வுகளில் ஒன்று டாம் ஹிடில்ஸ்டனை லோகி கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது. கடுமையாக வெறுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்திலிருந்து மிகவும் விரும்பப்படும் மார்வெல் கதாபாத்திரமாக மாற்றியது அவரது மிகச்சிறந்த நடிப்புத் திறனுக்குச் சான்று. குறிப்பாக கடைசி எபிசோடின் இறுதிக் காட்சிகளில் நம்மை நெகிழ வைத்துவிடுகிறார். அதே போல டைம்லி விக்டராக வரும் ஜானதன் மேஜர்ஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் சீசனிலும் சரி, ’ஆன்ட்-மேன் 3’யிலும் சரி பயமுறுத்தும் வில்லனாக வந்த அவர், இதில் அப்பாவித்தனமான நடிப்பால் ஈர்க்கிறார். மோபியஸ் ஆக வரும் ஓவென் வில்சன் முதல் சீசனைப் போலவே இதிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

முதல் எபிசோடில் இருந்து இறுதி வரை எங்கும் தொய்வோ, தேவையற்ற காட்சிகளோ இல்லாதபடி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. தொடரில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. தேவையற்ற கேமியோக்களோ, தொடர்பில்லாமல் பேசும் வசனங்களோ எதுவும் இல்லை. டைம் ஸ்லிப்பிங் பிரச்சினையை அறிமுகப்படுத்திய விதமும், அதனை இறுதியில் புத்திசாலித்தனமாக பயன்படுத்திய விதமும் சிறப்பு. ‘லோகி’ முதல் சீசனைப் போலவே இதிலும் பல எமோஷனல் காட்சிகள் உண்டு. குறிப்பாக இறுதி எபிசோடின் கடைசியில், லோகி தன்னுடைய ‘உன்னத நோக்கத்தை’ அடைவதாக காட்டப்படும் காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன.

‘ஷீ-ஹல்க்’, ‘மிஸ் மார்வெல்’ போன்ற வெப்-தொடர்களின் வீக் ஆன திரைக்கதையால் அதிருப்தியில் இருந்த மார்வெல் ரசிகர்களுக்கு ’லோகி’ சீசன் 2 புத்துணர்வை பாய்ச்சியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. ஒரு த்ரில்லர் சீரிஸுக்கு உண்டான விறுவிறுப்பும், நெகிழ வைக்கும் முடிவும் ‘லோகி’ இரண்டாவது சீசனை மார்வெலில் தரமான படைப்புகளில் முன்வரிசையில் நிறுத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x