Published : 21 Sep 2023 03:03 PM
Last Updated : 21 Sep 2023 03:03 PM

ஓடிடி திரை அலசல் | Hostel Hudugaru Bekagiddare: ஹாஸ்டல் அலப்பறைகளும், அடங்காத ‘வைப்’ அனுபவமும்!

நம்மில் பெரும்பாலானோருக்கு பள்ளி அல்லது கல்லூரிக் காலங்களில் ஹாஸ்டலில் தங்கியிருந்த அனுபவம் இருந்திருக்கும். அல்லது பணிக்கு செல்லும்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து மேன்ஷனிலோ அல்லது ரூம் எடுத்தோ தங்கிய அனுபவம் இருக்கும். அப்படி ஒரு ஹாஸ்டல் அறையை பகிர்ந்துகொண்ட மாணவர்களையும், அங்குள்ள ‘ஸ்ட்ரிக்ட்’ ஆன வார்டனையும் சுற்றி நடக்கும் சில சம்பவங்களை எதிர்பாரா திருப்பங்களுடனும், நகைச்சுவையுடன் கூடிய ஜெட் வேக திரைக்கதையுடனும் கொடுத்தால் அதுதான் ‘ஹாஸ்டல் ஹுடுகாரு பெகாகிதரே’ (Hostel Hudugaru Bekagiddare).

ஒரு ஹாஸ்டல். அதில் கண்டிப்பான வார்டனாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் குமார் (மஞ்சுநாத் நாயகா). குறும்படம் எடுப்பதே லட்சியமாகக் கொண்ட அஜித் (ப்ரஜ்வால்) மற்றும் அவரது நண்பர்கள் (பரத் வஷிஷ்ட், அனிருத்தா, ஸ்ரீவத்சா ஷ்யாம், தேஜாஸ் ஜெயண்ணா) ஹாஸ்டலின் ஒரு அறையில் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒருநாள் ஹாஸ்டலின் வார்டன் ரமேஷ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அவருக்கு அருகில் இருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் அஜித்தும் அவரது நண்பர்களும்தான் என்று பெயர்களை எழுதிவைத்துள்ளார். வார்டனின் மரணம் குறித்து வெளியே தெரிந்தால் தங்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சும் அவர்கள், வார்டனின் மரணத்தை விபத்து போல காட்டிவிடலாம் என்று திட்டமிடுகின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறியதா என்பதே Hostel Hudugaru Bekagiddare படத்தின் திரைக்கதை.

படத்தின் தொடக்கத்திலேயே இது ஒரு ஃபேன்டசி படம் என்று அழுத்தமாக நிறுவிவிடுகிறார் இயக்குநர் நிதின் கிருஷ்ணமூர்த்தி. படம் தொடங்கியதுமே நேரடியாக கதைக்குள் நுழைந்து விடுவது, தொடர்ந்து பரபர காட்சிகள், ஒரு சின்ன திருப்பம் என முதல் 20 நிமிடங்களிலேயே பார்க்கும் நம்மை ஆச்சர்யப்படுத்திவிடுகிறார். ஹாஸ்டல் வாழ்க்கை, மாணவர்கள் என்றதுமே பதின்பருவ காதல், காமெடி என்ற பெயரில் கிரின்ஜ் வசனங்கள், நட்பின் மகத்துவத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காமல் வெகு இயல்பாக வயிறு வலிக்க சிரிக்கும்படி ஒரு நொடி கூட போரடிக்காமல் தந்திருக்கிறார்.

படத்தின் பலமே அதன் நடிகர்கள்தான். படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் புதியவர்களே. ஆனால் எந்த இடத்திலும் இயல்பை மீறாமல் சிறப்பான நடிப்பை அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மாடுலேஷனே ‘கொல்’லென சிரிக்க வைத்து விடுகின்றன. உதாரணமாக படத்தின் தொடக்கத்தில் வார்டனை சுற்றி வளைத்து அடிக்க வரும் காட்சியில் அவருக்கு தங்கள் குரல் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக மாணவர்கள், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குரலிலும், ‘கேஜிஎஃப்’ யஷ், கிச்சா சுதீப் ஆகியோர் குரலிலும் பேசும் காட்சி குபீர் ரகம்.

படத்தில் ஸ்பெஷல் பாராட்டை பெறுபவர் வார்டனாக நடித்த மஞ்சுநாத் நாயகாதான். ஆரம்பத்தில் ஸ்ட்ரிக்ட் ஆன வார்டனாக வருவதும், போகப் போக அவரது பாத்திரத்தில் ஏற்படும் மாற்றமும் ரசிக்க வைக்கின்றன. இது தவிர, எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் மாணவர், முதல் பெஞ்சு படிப்பாளி, கடவுள் மீது பயம் கொண்ட கிறிஸ்துவர், அரைகுறை கன்னடம் பேசும் வடமாநில மாணவர், கஞ்சா போதையிலேயே திரியும் மூன்று சீனியர்கள் (அதில் ஒருவர் இயக்குநர் நிதின் கிருஷ்ணமூர்த்தி) என ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

படத்தில் மற்றொரு ஆச்சர்யம் ரிஷப் ஷெட்டி (காந்தாரா), பவன் குமார் (லூசியா) கேமியோ தான். குடித்துவிட்டு ஹாஸ்டலுக்குள் நுழையும் முன்னாள் மாணவரான ரிஷப் ஷெட்டி வரும் காட்சிகள் பட்டாசாக இருக்கின்றன. அதேபோல சம்பந்தமே இல்லாமல் ரம்யாவின் காட்சிகள் வருவதும் அதற்காக சொல்லப்படும் காரணத்தையும் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.

படத்தின் உண்மையான ஹீரோ ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப் தான். படம் முழுவதும் கேமரா எங்குமே நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இன்னொரு கதாபாத்திரமாக கேமராவும் படம் முழுக்க பயணிக்கிறது. நிக்கி என்ற பாத்திரத்தில் ஒளிப்பதிவாளரும் படத்தில் நடித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத்தின் இசை, சுரேஷின் எடிட்டிங் என தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் படுநேர்த்தி.

பக்கத்து ஹாஸ்டலில் இருக்கும் ஸ்மிதா என்ற பெண், அவருக்கான ஒரு கிளைக்கதை, சீனியராக வரும் ஜீனி என்ற போதை கதாபாத்திரம், எந்நேரமும் போராட தயாராக இருக்கும் ப்ரொடெஸ்ட் கிருஷ்ணா என தனிப் படமாக எடுக்கும் அளவுக்கான கிளை கதாபாத்திரங்கள் படம் முழுக்க நிறைந்துள்ளன. இத்தனை கதாபாத்திரங்களை எந்தவித குழப்பமும் இல்லாமல் ஒரு நேர்த்தியான திரைக்கதையை உருவாக்கியதிலேயே இயக்குநர் ஜெயித்துவிட்டார். படத்தின் ஆரம்ப கிரெடிட்ஸ் தொடங்கி இறுதிவரை ஒருவித பார்வையாளர்களை ‘வைப்’ மோடிலேயே இயக்குநர் வைத்திருக்கிறார். படம் முழுக்க ஏராளமான கன்னட ‘பாப் கல்ச்சர்’ குறியீடுகள் உள்ளன. ஓரளவு கன்னட சினிமா பரிச்சயமானவர்களால் அதனை வெகுவாக ரசிக்க முடியும்.

படத்தின் இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸை நோக்கி நகர்த்தும் நோக்கில் வைக்கப்பட்ட சில காட்சிகள் இழுவையாக இருந்தது படத்தின் குறை. அந்தக் காட்சிகளை தாராளமாக கத்தரித்திருந்தால் படம் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வை தவிர்த்திருந்திருக்கலாம்.

கன்னட சினிமாவிலிருந்து திகட்டாத கலகலப்பும், சுவாரஸ்யமும் கொண்ட ஒரு தரமான படைப்பு இந்த Hostel Hudugaru Bekagiddare. அழுத்தம் நிறைந்த பணிச்சூழலின் இடையே ஒரு இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்து, ‘வைப்’ செய்ய விரும்புவோர் தாராளமாக பார்க்கலாம். தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. ‘Hostel Hudugaru Bekagiddare’ ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x