Published : 03 Jul 2023 01:00 PM
Last Updated : 03 Jul 2023 01:00 PM

ஓடிடி விரைவுப் பார்வை | The Platform: உணவுக்கான போராட்டமும் சமூக அடுக்கின் அவலமும்

The Platform (2019) | Spanish | Thriller | Netflix

பல்வேறு அடுக்குகளைக் கொண்ட ஒரு செங்குத்தான சிறை. நான்கு சுவர்களை மட்டுமே கொண்ட ஒவ்வொரு தளத்திலும் இரண்டு சிறைவாசிகள். மேலே இருக்கும் கடைசி தளத்தில் இருந்து ஒரு Platformல் வைத்து பலவகையான உயர்தர உணவுகள் அனுப்பப் படுகின்றன. உணவு ஒரு நாளைக்கு ஒருமுறை, ஒருகுறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒரு தளத்தில், அதாவது ஒரு சிறையில் நிற்கும். அந்த நேர இடைவெளிக்குள் சிறைவாசிகள் தங்களுக்கான உணவை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். மேல் அடுக்குகளில் உள்ளவர்கள் சாப்பிட்டுவிட்டு அனுப்பும் உணவே கீழே இருப்பவர்களுக்கு செல்லும். இப்படியாக உணவு குறைந்து குறைந்து அடித்தளங்களில் இருப்பவர்களுக்கு வெறும் பாத்திரங்கள் மட்டுமே செல்லும். மாதம் ஒரு முறை சிறைவாசிகள் வெவ்வேறு தளங்களுக்கு மாற்றப்படுவார்கள். மேலே இருப்பவர்கள் கீழே செல்லலாம். கீழே இருப்பவர்கள் மேலே செல்லலாம்.

இப்படிப்பட்ட ஒரு சிறையில் ஒருநாள் கண்விழிக்கிறார் நாயகன் கோரெங். அவருடைய சிறை அறையில் இருப்பவர் திரிமகாசி என்ற முதியவர். அந்த சிறைச்சாலையின் அம்சங்களையும், அது இயங்கும் முறையையும் நாயகனுக்கு விளக்குகிறார் முதியவர். ஒருநாள் உணவு கொண்டு வரும் பிளாட்ஃபார்மில் அமர்ந்து மிஹாரு என்ற இளம்பெண் வருகிறாள். சிறைக்கைதியான அவள் தன் குழந்தையை தேடி ஒவ்வொரு தளமாக செல்வதாக அந்த முதியவர் நாயகனிடம் கூறுகிறார்.

நாட்கள் செல்ல செல்ல முதியவரும், நாயகனும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். ஒருமாதம் கழித்து நாயகன் கண்விழிக்கும்போது வேறொரு புதிய தளத்தில் இருப்பதை உணர்கிறார். அவரது கைகால்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டியவர் முதியவர் திரிமகாசி. கீழே இருக்கும் தளங்களில் ஒன்றுக்கு வந்துவிட்ட அவர்களுக்கு அங்கு உணவு கிடைக்காது என்பதால், அதனால் நாயகனின் உடலில் இருந்து சதைகளை வெட்டி தானும் சாப்பிட்டு நாயகனுக்கும் கொடுப்பதே முதியவரின் திட்டம். நாயகனின் எதிர்ப்பை மீறி அவனது தொடையிலிருந்து மாமிசத்தை வெட்டி உண்கிறார் அந்த முதியவர். அப்போது பிளாட்ஃபார்மில் அமர்ந்து வரும் இளம்பெண் மிஹாருவின் உதவியோடு அந்த முதியவரை கொல்கிறார் நாயகன் கோரெங். ஆறு மாத கால தண்டனைக்காக அந்த சிறைச் சாலைக்கு வந்திருக்கும் நாயகன் அங்கிருந்து தப்பித்தாரா? அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது ’தி ப்ளாட்ஃபார்ம்’.

ஸ்பானிஷ் மொழியில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் முதன்முறையாக டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பப் பட்டு அங்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படம் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு செங்குத்தான கட்டிடத்துக்குள்ளேயே தான் நடக்கிறது. அதிலும் 99 சதவீத காட்சிகள் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே தான். ஆனாலும் படம் ஒரு நொடி கூட நம்மை அசையவிடாமல் கட்டிப் போட்டு விடுகிறது. அந்த செங்குத்தான சிறைச்சாலை ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூக அடுக்குகளின் உவமையாகவே காட்டப்படுகிறது.

மேல்தட்டில் இருப்பவர்கள் மீதி வைக்கும் உணவை கீழே இருப்பவர்கள் உண்பது, மேலே ஏறி வர முயலும் கீழ்தட்டு சிறைவாசி ஒருவரின் மீது மலம் கழிக்கும் மேலடுக்கு தம்பதி, ஒவ்வொரு தளத்தில் இருப்பவர்களும் தங்களுக்கான உணவை மட்டுமே உண்டால் கீழே கடைசி தளத்தில் இருப்பவர்கள் வரை உணவு கிடைக்கும் என்று மன்றாடும் பெண் என படத்தின் பல கதாபாத்திரங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே வருகின்றன. ஒவ்வொரு தளத்திலும் கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழ்வும் மனமாற்றங்களை துல்லியமாக காட்சியப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. படம் முழுக்க ரத்தம், மனித மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அதீத வன்முறையான காட்சிகள் வருவதால் இது கண்டிப்பாக குழந்தைகளுக்கான படம் அல்ல. மற்றபடி திடமான இதயம் கொண்ட த்ரில்லர் ரசிகர்கள் தாராளமாகப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x