Last Updated : 29 Jun, 2023 03:38 PM

 

Published : 29 Jun 2023 03:38 PM
Last Updated : 29 Jun 2023 03:38 PM

ஓடிடி திரை அலசல் | Where the tracks end: இருப்புப் பாதை வழியே கொஞ்சம் மனித மதிப்புகள்!

குழந்தைகளை மையப்படுத்தி பெரியவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் ‘வேர் தி டிராக்ஸ் எண்ட்’ (Where the Tracks End) திரைப்படம். இப்படத்துக்கு முன்னோடியாக பை சைக்கிள் தீவ்ஸ், பதேர் பாஞ்சாலி, கலர் ஆப் பாரடைஸ், சில்ரன் ஆப் ஹெவன், சினிமா பாரடைசோ போன்ற படங்கள் உலகம் அறிந்தவை. உன்னதமானவை என போற்றப்பட்டவை. அந்த வகையில் ஓர் அற்புதமான கதையம்சத்தையும், சிறந்த திரைமொழியையும் தாங்கி வந்திருக்கிறது இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம்.

இந்த மாதிரி படங்களுக்கு உள்ள ஒரு நல்ல ஒற்றுமை என்னவென்றால், சுற்றிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் எங்கள் உலகம் அழகானது; எங்கள் பார்வையும் லட்சியங்களும் என்றுமே புத்தம் புதுசானவை என்பதுதான். இத்திரைப்படத்திலும் குழந்தைகளின் கொண்டாட்டங்களும் ஒரு கைக்கெட்டாமல் மறைந்துபோகும் ஒரு அழகிய கனவை வைத்திருக்கிறது. அக்குழந்தைகளின் வாழ்க்கைப் பின்னணியோ அந்தரத்தில் தொங்கும் அறுபடும் நிலையிலுள்ள வாழ்க்கைக் கயிறு; என்றாலும் அவர்கள் கண்களில் எதிர்காலம் குறித்த கவலை ஏதுமின்றி எப்போதும் ஒளிரும் பிரகாசம்.. உறுதியானது உள்ளன்புமிக்கது.

விளையாட்டுத்தனம் மிக்க குழந்தைகள். அவர்கள் வாழ்க்கையில் பள்ளிக்கூடம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை இப்படம் முழுவதும் பேசியுள்ளார்கள். பள்ளி என்றால் உடனே ஒரு அழகிய கட்டிடம் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். ஓரங்கட்டப்பட்ட ஒரு ரயில் வேகன் பெட்டி அவ்வளவுதான். அதில்தான் அவர்களின் வகுப்பறை. அந்த வகுப்பறை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அந்த கிராமத்து மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற லட்சியத்தோடு பாடம் நடத்தி வருகிறார் ஜார்ஜினா என்னும் பள்ளி ஆசிரியை.

அந்த ஊரில் ரயில்வே ட்ராக் முழுமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு வேலைக்கு வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இக்கல் எனும் சிறுவனையும் அவர்கள் தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார் அந்த ஆசிரியை. சிறுவனின் தாய் தந்தையரிடம் பேசி அனுமதி வாங்கி அவனை பள்ளிக்கு வரவழைத்துவிடுகிறார். இக்கலின் தாய் தந்தையர் இந்த மாதிரி ரெயில்வே ட்ராக் அமைக்கும் பணிக்காக ஊர் ஊராக பயணிப்பவர்கள். எங்குமே நிரந்தரமாக தங்கிவிடமுடிவதில்லை. இந்த கிராமத்திலும் அப்படியொரு தற்காலிக வாசம் கிடைக்கிறது. ஆனால் அதற்குள்தான் எவ்வளவு மனித உறவுகள், நட்பின் பிணைப்புகள் என அவனுக்கு என ஒரு புதிய உலகம் விரிகிறது. இக்கல் என்ற சிறுவனை மையப்படுத்தித்தான் படம் நகர்கிறது.

உடன் அவனுக்கு அந்த ஊரில் புதியதாகக் கிடைத்த நிறைய நண்பர்கள். அவனை விட்டு பிரியாத ஒரு நாய்க்குட்டி. ஆற்றில் உயிரிழந்து கிடக்கும் தனது எஜமானனையே ஏக்கத்தோடு பார்த்த நாய்க்குட்டியை ஆற்றில் யாரோ மிதந்துகிடக்கிறார்களே என வேடிக்கை பார்க்க வந்த பல்வேறு சிறுவர்களில் ஒருவனான வரும் இக்கல் ''என்னுடன் வந்துர்யா'' என வாய்விட்டு அவன் கேட்க அவனுடன் வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த நாய்க்குட்டி அவனிடம் சேர்ந்ததே ஒரு தனி சிறுகதை.

முதலில் படிப்பு வாசனையே இல்லாமல் இருக்கிறான் இக்கல். அவனது அறியாமையை ஆனால் அறிந்து கொண்டு அதேநேரம் அவனது எதையும் அறிய விரும்பும் ஆர்வமும் தெரியவருகிறது. எதிர்காலத்தில் சிறப்பாக வரக்கூடியவன் என்பதையும் உணர்கிறார். அவன் கருத்தூன்றி பயிலும்விதமாக சொல்லித் தருகிறார். ஆசிரியை அவனுக்கு நிறைய புத்தகங்கள் தந்து படிக்க வைக்கிறார். கற்றல் செயல்பாடுகளைப் பற்றிய புதிய பரிமாணத்தை இப்படம் பேசுகிறது. முக்கியமாக கற்றல் என்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் சென்று விவாதிக்கிறார் ஆசிரியை. இக்கலுக்கு மட்டுமல்ல அனைவரிடம் ஒரு நல்ல உரையாடலை நிகழ்த்தியவண்ணம் மாணவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி கல்வியை பகிர்தலின் ஒரு அம்சமாக மாற்றி அமைக்கிறார்.

புவியியல் விலங்கியல், தாவரவியல் என புதிய வகை கற்றல் செயல்பாடுகளில் உதவும் கேமரா உலகத்தரம். இது இப்படத்தின் பாதி கதை. மீதி கதையை அதாவது ஒரு அழகிய நோஸ்டாலிஜியா.. நினைவுகள்... அழகியல் காட்சிப் படிமங்களாக முக்கால் பாகம் எனில் இப்படத்தின் மீதி கால்பாகம் இன்றுள்ள சமகால வாழ்க்கையாகும்.

ஒரு கல்வி அதிகாரி மூடப்பட்ட பள்ளிகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய முக்கியமாக இக்கிராமத்தை நோக்கி வருகிறார். அந்த அதிகாரி யார்? அவர் ஏன் குறிப்பாக இந்தக் கிராமத்தின் பள்ளி மாணவர்கள் குரூப் போட்டோவை பார்த்து உணர்ச்சி வசப்படுகிறவராக அவர் ஏன் இருக்கிறார். அந்த முதிய ஆசிரியர் பெண்மணி என்ன ஆனார். அந்த வகுப்பறை ரயில் பெட்டி இப்போது எப்படி இருக்கிறது. அங்கே பழைய மாணவர்கள் இப்போது யார் பாடம் நடத்தியவரின் வீடாகவும் வகுப்பறையாகவும் இருந்த அந்த ரயில்பெட்டியை யார் பராமரித்து வருகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு காவிய அழகோடு சொல்லப்பட்டுள்ளது பிற்பாதியில்.

பள்ளிகள் மூடப்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையைக் குறித்து ஒரு முக்கிய விவாதத்தை தலைநகரில் உள்ள தலைமையக கல்வி அதிகாரிகள் மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி செயல்பாடுகள் முழுமையடைவதற்குள் சில குழப்பங்கள் மேலிடுகின்றன. ரயில்வே தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து சிறு போராட்டமும் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக இக்கல் தந்தையும் உயிரிழக்கிறார். சில நாட்களில் அவர்கள் ஊரை விட்டு புறப்படும் நிலை ஏற்படுகிறது.

படத்தின் 2ம் பாக காட்சிகளும் பழைய காட்சிகளிலும் ஒரு ரயில்வே பாதையின் இரு கோடுகளாக இணைந்தே பயணிப்பதுதான் புதிய உத்தியாக திரைக்கதையின் நுட்பமாக கண்முன் விரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், ஒருநாள் திடீரென சிறுவனின் குடும்பம் உள்ளிட்ட பணியாளர்கள் குடும்பங்கள் அனைத்தும் புறப்படும் நாள் வருகிறது. அப்போது இக்கலும் தனது ஆசிரியர், நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வருகிறான். ரயில்வே குடும்பங்கள் ஒவ்வொரு கூட்ஸ் பெட்டியிலும் புறப்பட்டுச் செல்ல ஆயத்தங்கள் நடக்கின்றன... தங்கள் குடும்ப உபயோக பொருட்கள் அனைத்தையும் வண்டிகளில் ஏற்றுகிறார்கள். ரயில் பெட்டியில் ஜன்னலிலும் கையசைக்கும் மாணவர்கள் இக்கல் கண்ணீரோடு விடைபெற அவனை வழியனுப்பும் அனைத்து கிராம தோழமைகளின் கண்களும் மின்னுகின்றன.

இந்தமாதிரி படங்களில் சொல்லப்படும் கதைகளில் வழக்கமான அம்சங்கள் பலவும் இப்படத்தில் உள்ளன. கிளிஷே எனத் தோன்றினாலும் மெக்ஸிகோ வாழ்வியலையும் இத்துடன் முன்னிறுத்தியுள்ளதுதான் இதன் பலம்.

அதாவது உதாரணத்திற்கு ஒரு காட்சி. அங்குள்ள முக்கிய நதி ரியோ கிராண்டே. இந்த நதியில் யார் மூச்சடக்கி உள்நீச்சலில் நீந்தி வெகு தூரம் செல்கிறார்கள் என்பதை சிறுவர்கள் ஒரு போட்டியாகவே வைப்பார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. பெரும்பான்மையான மெக்ஸிகன்கள் அமெரிக்காவை நோக்கி பிழைப்புக்காக செல்லும் நிலைக்கு தள்ளப்படுவது. அந்நாட்டில் இன்றைய சமூக பொருளாதார வீழ்ச்சியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ரியோ கிராண்டே நதியைக் கடந்துவிட்டால் அமெரிக்காவை அடைந்துவிடலாம். ஊருக்கு பணம் அனுப்பலாம் என்பதால் பெரியவரகள் இதனை தொடர்ந்து செய்துவருகிறார்கள். வருங்காலத்தில் தங்களுக்கும் அத்தகைய நிலைதான் என்பதை நன்கு உணர்ந்த சிறுவர்களும் அக்கடி இந்தப் பயிற்சியில் ஈடுபடுவதை இயக்குநர் கவனமாக எடுத்தாண்டிருக்கிறார்.

வகுப்பு இல்லாத சும்மா இருக்கிற நாட்களில் குழந்தைப்பருவத்தினரின் கட்டுக்கடங்காத வெளிப்புற நடவடிக்கைகளையே இயக்குநர் Ernesto Contreras எர்னெஸ்டோ கான்ட்ராஸ் அழகிய படைப்பாக்கித் தந்துள்ளார். வயல் வெளிகளில், சோளக்காட்டுகளில், யாருமற்ற ஆளரவமற்ற கோட்டைகளில் சுற்றித் திரிவது என அலைகிறார்கள். உள்ளூரில் முகாமிட்டுள்ள சர்க்கஸ் பார்க்கச் செல்ல பணம் தேவைப்படும் நிலையில் யதேச்சையாக பக்கத்து ஊர் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாறிகை ஒன்றில் நுழைந்து யாருமில்லாத டைனிங் ஹாலில் போதிய மட்டும் சாப்பிடுகிறார்கள். அங்கிருந்து ஸ்பூன்களையும் எடுத்துக்கொண்டு அதைக்கொண்டு சர்க்கஸ் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்கள் சத்தம்போட்டு ஓடிவர அங்கிருந்து அவர்கள் தப்பிக்கும் காட்சி நம்மூரில் நாம் சின்ன வயதில் செய்த அத்தனை சேட்டைகளையும் நினைவுபடுத்துகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவு தரும் ஜாலங்கள்தான் இது அட்ரா நவீன திரைப்படம் என்பதனை நமக்கு உணர்த்துகிறது. அதிலும் இக்கல் எல்லோரிடம் ''நாங்கள் ஊரைவிட்டு செல்கிறோம்'' என சொல்லிவிட்டு வரும் காட்சி ஒன்றே போதும், மக்கா சோளக்காட்டு தோழி, நண்பர்களாகிப்போன சர்க்கஸ் கலைஞர்கள், உள்ளூர் பள்ளி தோழர்கள் என அவன் ஒவ்வொருவராய் தேடித்தேடிச் சென்று சொல்லிவிட்டு வரும் காட்சியில் ஒளிப்பதிவாளர் அனாமார்பிக் லென்ஸ்கள் எனப்படும் சேய்மைக் காட்சிகளுக்கான அகண்ட கோணத்தைக் தரக்கூடிய உன்னத அர்ப்பணிப்பு. அது இப்பட காட்சி மதிப்பை உயர்த்தித் தருகின்றன. ஒரு இடத்தில் சோளக்காட்டு பாதை ஒரே ஷாட்டில் அருகே 360 டிகிரியில் கேமரா சுழன்று சுற்றிலுமுள்ள அழகியல் உலகை சுழற்றிக்காட்டும் விதத்தில் எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட் வகை திரையாக்க முயற்சியில் ஒளிப்பதிவாளர் ஜான் பாப்லோ ராமிரெஸ் அபரிதமான மேஜிக்குகளை நிகழ்த்திவிட்டார். அதற்கு இணையானது இப்படத்தின் இசை.

கல்வியின் சிறப்பு, முதல் காதல், இளமை நினைவுகள், அழகிய ரயில் பாதைகள், ரயில்வே கூட்ஸ் வண்டிகள், சர்க்கஸ் வித்தைகள் பல படங்களில் பார்த்ததுதான். அதேபோல கேமரா கோணங்கள், பொய்த்தனங்கள் நிறைந்த மனிதர்களின் மறைவொழுக்க திடீர் முடிவுகள், திரைக்கதை ட்விஸ்ட்கள், எதிர்பாராத கிளைமாக்ஸ், தேர்ந்த இசை எல்லாம் இருக்கும். ஆனால் சக மனித மதிப்புகள்தான் மிஸ் ஆகி இருக்கும். மனிதர்களை மிகையான நேசம் கொண்டு அல்ல; சாதாரணமாக மதிப்பு கொடுப்பதே என்பதே அரிதாகிப்போன காலம் இது.

இத்தகைய ஒரு காலத்தில் அருகில் உள்ளவர்களின் மிகச் சாதாரண நடவடிக்கைகளைக் கூட சமூக அரசியல்தன்மையுடன் கூடிய மனித மதிப்புகளாக எண்ணி சக உயிர்களின்மீதான நெருக்கத்தை போற்றும் வகையிலான ஒரு கதையம்சத்தோடு பொருத்தித் தந்துள்ளது இப்படத்தின் தனித்தன்மையாக அமைந்துள்ளது. முக்கியமாக ஜார்ஜினா என்னும் பள்ளி ஆசிரியை கதாபாத்திர வடிவமைப்பும் அப்பாத்திரத்தை ஏற்று நடித்த அட்ரியானா பராஸா என்ற நடிகையின் மனித மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் அபரிதமான கலைவெளிப்பாடும் போற்றி வணங்கத்தக்கவை. எழுத்துக்கூட்டி காமிக்ஸ் படிக்கத் தொடங்கி கல்வி அதிகாரியாக உயரும் அளவுக்கு ஆசிரியையின் நன்முயற்சியை ஏற்று அவருக்கு இணையாக ஈடுகொடுத்த நடித்துக்கொடுத்த கார்லோ இசாக்ஸ் எனும் சிறுவனின் நடிப்பாற்றலும் கைத்தட்டி வரவேற்று நம் மனதில் இருத்திக்கொள்ளக் கூடியவையாகும்.

ஒருவேளை இப்படத்தை இதன்பிறகு காண நேர்ந்தால் இப்படத்தில் இன்னும் நிறைய அற்புதமான காட்சிகள் உள்ளனவே அதையெல்லாம் சொல்லவில்லையே எனக் கேட்கக் கூடாது. ஸ்பாய்லர் கருதியே இப்படத்தின் அடுக்கடுக்கான பல நுட்பங்களையும் முழுமையான கதைப்போக்கையும் இங்கே எடுத்துச்சொல்லவில்லை. நதியின் கரையில் தளும்பிச் செல்லும் அபரித வெள்ளமென பெருகிச்செல்லும் Where the Tracks End சினிமாவின் காட்சிகளில் சிலவற்றை மட்டுமே பேசமுடிந்துள்ளது. நல்ல சினிமா வரிசையில் இன்னுமொரு மைல்கல் ஆகத் திகழும், 2023-ல் வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x