Published : 07 Oct 2017 10:14 AM
Last Updated : 07 Oct 2017 10:14 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 21 பிராண சக்தியை தரும் பாம்பு, புலி ஆசனம்

 

ண்களின் வாழ்க்கை யில் 40 வயது என்பது முக்கியமான காலக்கட்டம். அலுவலகப் பொறுப்பு, பணிச்சுமை, பணத் தேவை என எல்லாப் பக்கத்தில் இருந்தும் நெருக்கடிகள் அழுத்தும். எனவே, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். 40 வயதைத் தொட்ட ஆண்கள் 5 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

1. தூக்கம் என்பது உடலுக்கு நாம் கொடுக்கும் அருமையான ஓய்வு. எனவே, நன்றாகத் தூங்க வேண்டும்.

2. உடலுக்கு சக்தி தருகிற பயிற்சிகள், ஆசனங்களைச் செய்ய தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் ஆண் களுக்கு தொப்பை விழுவதும் இந்தக் காலக்கட்டத்தில்தான். எனவே, காலையில் எழுந்து ஓட்டப் பயிற்சி அல்லது வேகமான நடைபயிற்சி செய்யலாம். அதை முடித்து வீட்டுக்கு வந்ததும், உடலை வளைத்து, குனிந்து செய்யக்கூடிய ஆரம்பக் கட்ட பயிற்சிகளைச் செய்யலாம். குறிப்பாக சூர்ய நமஸ்காரம், தனுராசனம், புஜங்காசனம், சலபாசனம், அர்த்தகடி சக்கராசனம், மர்ஜரி ஆசனம், பவன முக்தாசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், மயூராசனம் மிகவும் நல்லது.

3. செரிமானப் பிரச்சினைகள் வரும் வயது என்பதால், சமச் சீரான, சத்தான உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். புகை, குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுவது நல்லது.

4. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, மனதில் இருப்பதை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதால் மனதின் இறுக்கம் குறையும்.

5. ஒவ்வொருவருக்கும் ‘ME TIME’ எனப்படும் தனக்கான நேரம் இருக்கிறது. இந்த நேரத்தை மனதுக்குப் பிடித்த ஆரோக்கியமான பொழுதுபோக்குகளுக்காக ஒதுக்குவதாலும், மன இறுக்கம் குறையும்.

இனி ஆசனங்களைப் பற்றி பார்க்கலாம்.

வியாக்ரஹ ஆசனம்

‘வியாக்ரஹ’ என்றால் புலி. முதலில், மகராசனத்தில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். 9-15 முறை நிதானமாக மூச்சு விட வேண்டும். பிறகு மெதுவாக இரு கைகளையும் மார்புக்குப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். இரு கால்களையும் முட்டி போட்டவாறு, மூச்சை இழுத்தபடி தலையை நன்றாகத் தூக்கிப் பார்க்க வேண்டும். மூச்சை விடும்போது, தலையை கீழே கொண்டுவர வேண்டும். இது ஆரம்ப நிலை.

அடுத்த நிலையில், மூச்சை நன்றாக இழுத்து தலையைத் தூக்கும்போதே, வலது காலை நன்றாக பின்னே எடுத்துச் சென்று, பிறகு மெதுவாக உள்ளே கொண்டுவர வேண்டும். பிறகு தலையை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இதை 3 முறை செய்யலாம்.

அடுத்து, தலையை மேலே தூக்கும்போதே வலது காலை பின்னே நீட்ட வேண்டும். பிறகு மூச்சை விடும்போது தலையை உள்ளே கொண்டுவந்து, வலது கால் முட்டி, மூக்கை தொடுவது போல இருக்க வேண்டும். ஆரம்ப நிலைகளில், வலது கால் பாதம் தரையை தொட்டால் பரவாயில்லை. சிறிது பயிற்சிக்குப் பிறகு, பாதம் தரையில் படாமல் தூக்கி இருக்க வேண்டும். திரும்பவும் மூச்சை இழுக்கும்போது, மெதுவாக காலை பின்னுக்கு கொண்டுவந்து, மூச்சை விடும்போது காலை தரைக்கு கொண்டுவர வேண்டும். இதை 5-10 முறை செய்யலாம். இவ்வாறு, வலது, இடது கால்களை மாற்றி மாற்றி செய்வதால் மார்புப் பகுதி விரிந்து நிறைய சக்தி கிடைக்கும். முதுகுவலி, வெர்டிகோ, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வியாக்ரஹ ஆசனம் செய்யக்கூடாது.

புஜங்காசனம்

அடுத்து புஜங்காசனம். நல்ல பாம்பு தலையை தூக்கிப் பார்ப்பதுபோல் இந்த ஆசன நிலை காணப்படுவதால் இப்பெயர். விரிப்பின் மீது குப்புறப்படுத்து, மார்புக்குப் பக்கவாட்டில் இரு உள்ளங்கைகளை வைக்க வேண்டும். கை முட்டி, உடம்பை ஒட்டி இருக்க வேண்டும். இப்போது தலையைத் தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு நன்கு விரிவடைவதால், உள்ளே எடுத்துக்கொள்ளும் பிராண சக்தியின் அளவு அதிகரிக்கும். இதனால் தானாகவே உடலில் சக்தி அதிகரிக்கும். வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் புஜங்காசனம் செய்யலாம். இவற்றுடன் சர்வாங்காசனம், ஹலாசனமும் செய்யலாம்.

- யோகம் வரும்...

ழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x