Published : 26 Sep 2017 10:51 AM
Last Updated : 26 Sep 2017 10:51 AM

ஆண்டாள் நொண்டியடிக்கத் தடை!- ஆதங்கத்தில் அரங்கநாதர் பக்தர்கள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நவராத்திரி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவராத்திரி நாட்களில் இக்கோயில் யானை, காலில் சலங்கைக் கொலுசு அணிந்து, மவுத் ஆர்கன் இசைத்து பக்தர்களை மகிழ்விக்கும். நொண்டியடித்து வேடிக்கை காட்டி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும். ஆனால் இந்த ஆண்டு, கோயில் யானை ஆண்டாளின் இந்தக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் தடைபோட்டுவிட்டார்கள்!

யானைக்கு மரியாதை

‘கோயில் யானையை நொண்டியடித்து விளையாட்டு காட்ட அனுமதிக்கக் கூடாது’ என யானைப் பாகனுக்கு அறநிலையத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த நவராத்திரிக்கு ஆண்டாள் நொண்டியடிப்பதை பக்தர்களால் பார்க்க முடியவில்லை. அதேசமயம், தடை விதித்திருப்பது தெரியாமல் யானை நொண்டி யடிக்கும் நிகழ்வைக் காண தினமும் பக்தர்கள் ஆர்வத்துடன் வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

நவராத்திரியின் போது ஸ்ரீரங்கம் கோயிலில் யானையை முன்னிலைப்படுத்தி நடக்கும் சடங்குகள் வித்தியாச மானவை. மாலை நேரங்களில் கோயில் யானை அலங்கரிக்கப்பட்டு தாயார் சந்நிதி முன்பு அழைத்து வரப்படும். அங்கு வெற்றிலை, பாக்கு, சந்தனம் வழங்குவார்கள். சந்தனத்தைப் பூசிக்கொள்ளும் யானை, வெற்றிலை பாக்கை விரும்பிச் சாப்பிட்டுவிட்டு, துதிக்கையில் சாமரம் எடுத்து தாயார் சந்நிதியை நோக்கி விசிறும். பின்னர், சாமரத்தை பாகன் கையில் கொடுத்து விட்டு, மவுத் ஆர்கனை தனது துதிக்கையில் வாங்கி ஆனந்தமாய் இசைக்கும். இதைப் பார்க்கும் பக்தர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து யானையை உற்சாகப்படுத்துவார்கள்.

நொண்டியடித்து..

அடுத்ததாக, மவுத் ஆர்கனை பாகனிடம் கொடுத்து விட்டு, தனது முன்னங்காலில் ஒன்றை மட்டும் தூக்கி நொண்டியடித்தபடி, எதிர்புறம் தனக்கு மரியாதை செய்யக் காத்திருக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர்களை நோக்கிச் செல்லும். அங்கே, அவர்கள் தரும் பழம் மற்றும் வெற்றிலை உள்ளிட்ட தாம்பூலப் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு யானை திரும்பிச் செல்லும்.

பாரம்பரியமாய் வழக்கத்தில் உள்ள இந்த நடைமுறைக்கு திடீரென இந்த ஆண்டு தடைவிதிக்க என்ன காரணம்? கோயில் வட்டாரத்தில் விசாரிதோம். “கோயில் யானைகளை சங்கிலியால் கட்டிவைத்து சித்திரவதை செய்வதாக பிராணிகள் நல ஆர்வலர் ராதா ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையின் போது, ஸ்ரீரங்கம் யானையை நவராத்திரி விழாவின்போது நொண்டியடிக்கச் செய்து துன்புறுத்துவதாக இன்னொரு நபரும் கூடுதல் தகவலை பதிவு செய்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள கோயில்களில் யானைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டது.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தின் நீண்ட விளக்க அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ‘நாயக்கர் ஆட்சிக் காலத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் நிகழ்ச்சிகளில் கோயில் யானை முக்கிய அங்கம் வகிக்கிறது. அதில் ஒன்றுதான் நவராத்திரியின் போது யானைக்கு மரியாதை அளிக்கப்படுவதும், யானை நொண்டியடிக்கும் நிகழ்வும் என குறிப்பிடப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் யானை பற்றிய புகார் தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் 2016-ல் உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

விலங்கின் மீதான சித்திரவதை அல்ல

ஆனால், கடந்த ஆண்டு கோயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் அப்போது அறநிலையத் துறையின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர், உயர் நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற விவகாரத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட நினைத்த அந்த அதிகாரி, ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டாள் யானை நொண்டியடிக்கும் நிகழ்ச்சிக்கும் தடைபோட்டுவிட்டார்” என்கிறார்கள் கோயில் வட்டாரத்தில்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வலை பதிவரான விஜயராகவன் கிருஷ்ணன், “நேரடியாக நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்காத போது பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சியை எதற்காக நிறுத்த வேண்டும்? இதனால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். யானை நொண்டியடிப்பது விலங்கின் மீதான சித்திரவதை அல்ல. அது அந்த விலங்கின் உடல் நலனுக்கான ஒரு பயிற்சியே.

காவல் துறையினர் சுதந்திரம், குடியரசு தினங்களில் நாய்களை சாகச பயிற்சி செய்ய வைப்பதும், குதிரைப் படையில் கடுமையான பயிற்சி அளிப்பதும் எப்படி சித்திரவதையாக கருதப்படுவதில்லையோ அப்படித் தான் இதையும் கருத வேண்டும். இது பக்தர்களை உற்சாகப்படுத்தும் ஒரு வேடிக்கை நிகழ்ச்சி அவ்வளவுதான்.

யானை எவ்வித சமிக்ஞையும் இல்லாமல் தாமாக முன்வந்து மவுத் ஆர்கன் வாசித்துவிட்டு, நொண்டியடித்தபடி கோயில் நிர்வாகிகள் அமர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று பழம் உள்ளிட்ட தாம்பூலப் பொருட்களுடன் மரியாதையை பெற்றுக் கொள்ளும். இதில் துளியளவும் சித்திரவை இல்லை என்பதை நேரில் பார்த்தாலே தெரியும்.” என்றார்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளோ, “நவராத்திரி விழா நிகழ்வில் கோயில் யானையை நொண்டியடிக்க அனுமதிக்காததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பலர் இது தொடர்பாக எங்களிடம் புகாரும் செய்துள்ளனர். ஆகவே, அறநிலையத்துறை சார்பில் விரைவில் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றாவது நவராத்திரி உற்சவத்தின் போது வழக்கம்போல் ஆண்டாள் யானையை நொண்டியடிக்க வைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x