Last Updated : 12 Nov, 2016 12:53 PM

 

Published : 12 Nov 2016 12:53 PM
Last Updated : 12 Nov 2016 12:53 PM

துளி நீரையும் பூமிக்குள் அனுப்புங்கள்!

மழைக் காலம், கடந்த ஆண்டைப் போலில்லை. எப்போதாவதுதான் மழை பெய்கிறது. நிலைமை இப்படியிருக்க, எப்படி மழை நீரைச் சேமிபது எப்படி? 
இதுபோன்ற சூழ்நிலையில்தான் மழை நீர் சேகரிப்பு மிகவும் முக்கியம் என்கிறார் சென்னை மழை மைய இயக்குநர் சேகர் ராகவன். மழை குறைவாகப் பெய்யும்போது எப்படி மழை நீரைச் சேகரிப்பது?
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவு மிகவும் குறைவு. இங்கே மழை நீர் சேகரிப்பு மூலம்தான் குடி நீர்த் தேவையைப் பெருமளவில் தீர்த்துக்கொள்கிறார்கள். இங்கே மழை பெய்யும்போது ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்குவதில்லை.

மழை நீரை நிலத்துக்குள் திருப்பிவிடுகிறார்கள். தற்போது தமிழகத்தில் மழை பெய்யாமல் இல்லை. அவ்வப்போது பெய்கிறது. சில இடங்களில் கனமழையும் பெய்யவே செய்கிறது. சொட்டு நீரையும் வீணாக்காமல் சேகரிப்பது நல்லது.
எல்லாமே தண்ணீர்தான்
“நிலத்தடி நீர் நமக்கு எப்படிக் கிடைக்கிறது? நிலத்துக்குள் செல்லும் மழை நீரே கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நமக்கு நீராகக் கிடக்கிறது.

பொதுவாக அடுக்கு மாடியில் விழும் மழைநீரைக் குழாய் வழியாக ஒரு கூழாங்கல் தொட்டிக்குள் விட்டு, அதிலிருந்து வரும் தண்ணீரைக் கிணற்றுக்குள் விடுவோம். இதுதான் மழை நீர் சேகரிக்கும் முறை. மாடியில் விழுவது மட்டும்தான் மழையா? நம் வீட்டைச் சுற்றித் தெருக்களில், சாலைகளில் பெய்வது என்ன? மழை சாலைகளில் தேங்கும் தண்ணீரும் மழை நீர்தானே. அதையும் சேமிக்கலாம். அதுவும் மழைக்காலத்தில் மழை குறைவாகப் பெய்யும்போது ஒரு துளியையும் வீணாக்கக் கூடாது.

கிடைக்கும் கொஞ்சம் நீரைச் சேமிக்காமல் விட்டுவிட்டால் தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடும்” என்கிறார் சேகர் ராகவன்.
கிணறு தோண்டலாம்
சரி, தெருக்கள், சாலைகளில் தேங்கிக் கிடக்கும் நீரை எப்படிச் சேமிப்பது? வீடுகளைச் சுற்றித் தெருக்களில் தேங்கும் மழை நீரில் வாகனங்கள் சென்று அது அசுத்தமாகிவிடுவதுண்டு. அந்த நீரை எப்படிச் சேமிப்பது?
“இதற்காகப் பெரிய வேலையெல்லாம் செய்யத் தேவையில்லை. தண்ணீர் தேங்கும் இடங்களில் ரீசார்ஜ் கிணறு அமைத்தாலே போதும். இதைத் தெருக்களிலேயே அமைக்கலாம். அதை ரீசார்ஜ் கிணற்றுக்குத் திருப்பி அதை அருகில் உள்ள கிணறுகளுக்குத் திருப்பிவிடலாம்.

பொது இடங்களில் அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று எண்ணத் தேவையில்லை. சென்னையில் பெசன்ட் நகரில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் தெருக்களின் ஓரத்தில் இப்படி ரீசார்ஜ் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படித் தெருக்களில் சேரும் தண்ணீரைக்கூடச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும்” என்கிறார் சேகர் ராவன்.
உப்புச் சுவைக்குத் தீர்வு
சென்னையில் பல இடங்களில் 100, 200 அடியில்கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. இன்னும் சில இடங்களில் 20 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைப்பதுண்டு. சென்னையைப் பொறுத்தவரை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற புறநகர்ப் பகுதிகளில் மிகவும் குறைவான அடியிலேயே நிலத்தடி நீர் கிடைக்கிறது.

இதற்குக் காரணம், இந்தப் பகுதிகள் பொதுவாக நீர் தேங்கும் பகுதிகளாக இருப்பதால் நிலத்தடி நீர் கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கிறது. அதுவும் கடந்த ஆண்டு இரண்டு மாதங்களுக்கு மேல் இந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்கிக் கிடந்ததால் இப்போது வரைக்கும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் கிடைப்பது குறையவில்லை. ஆனால், நீரில் உப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பலரும் தண்ணீரைப் பயன்படுத்த அஞ்சும் நிலை உள்ளது. உப்பு நீரை நல்ல நீராக மாற்றவும் 
மழை நீர் சேகரிப்பின் மூலம் முடியும். எப்படி?
“ஒரு டம்பளரில் உப்பு கலந்த நீரை எடுத்துக்கொள்வோம்.


சேகர் ராகவன்

அதில் நல்ல தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றும்போது உப்பின் சுவை குறைகிறது அல்லவா? அதே முறைதான் உப்பு நீர் சுவையுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அருகே ரீசார்ஜ் கிணறு அமைப்பதன் மூலம் உப்புத் தன்மையை மாற்ற முடியும். இதற்குக் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அருகே ரீசார்ஜ் கிணற்றைத் தோண்டி மழை நீரைச் சேமிக்கும்போது. தூய்மையான மழை நீர் உப்பு நீருடன் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக உப்புத் தன்மை நீங்கிவிடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டினப்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் தண்ணீரில் இரும்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது. அங்கே ரீசார்ஜ் கிணறு அமைத்து மழை நீரைச் சேகரித்து வந்தோம். இப்போது இங்கே தண்ணீரில் இரும்பின் தாக்கம் கொஞ்சமும் இல்லை” என்று சொன்னார் சேகர் ராகவன்.
சென்னையில் அடுக்குமாடி வீடுகள் அதிகம். இங்கே தண்ணீர் தேவையும் அதிகம். ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர் உப்பு சுவையுடன் இருப்பதால் லாரி மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரையே அதிகம் வாங்குகிறார்கள்.

இதற்கு ரீசார்ஜ் கிணறு அமைத்தால் கொஞ்சம் தீர்வு கிடைக்கும். ரீசார்ஜ் கிணறு என்பது அடியைப் பொறுத்து அமைக்கப்படுவதுதான். அடுக்குமாடி வீடுகளில் 3 அடி விட்டத்திலும் 10 அடி ஆழத்திலும் ரீசார்ஜ் கிணறு அமைத்தால் போதுமானது. இதற்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் செலவாகக்கூடும்.
மழை கொஞ்சமோ, அதிகமோ எப்படிப் பெய்தாலும், அதைச் சேகரிக்க நீங்கள் தயார்தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x