Published : 16 May 2014 08:23 AM
Last Updated : 16 May 2014 08:23 AM

தமிழிசையின் பெருமை சொல்லும் பேரகராதி: இசை ஆர்வலர் மம்மதின் மகத்தான சாதனை

“தமிழில் 12 ஆயிரம் ராகங்கள் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இன்றைக்கு 25 ராகங்களை பாடுவதே அரிதாக இருக்கிறது’’ என்கிறார் தமிழிசை பேரகராதியை உருவாக்கி இருக்கும் மம்மது.

குற்றாலம் அருகேயுள்ள இடை கால் கிராமத்தைச் சேர்ந்த மம்மது எம்.ஏ. படித்து சூஃபி இசையில் (இஸ்லாமிய சித்தர்கள் இசை) எம்.ஃபில். முடித்தவர். நெடுஞ்சாலை துறை யில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற மம்மது, ஏழாண்டுகள் உழைத்து தமிழிசை பேரகராதியை உரு வாக்கி இருக்கிறார். இசை ஆராய்ச் சிக்காக தமிழக அரசின் பாரதியார் விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழ கத்தின் முத்துத் தாண்டவர் விருது உள்ளிட்ட 15 விருதுகளை பெற்றிருக்கும் மம்மது, தமிழிசை பற்றி 7 நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தமிழிசை ஆராய்ச்சி குறித்து இனி மம்மது பேசுவார். “25 ஆண்டுகாலம் கிராமியச் சூழலில் கட்டுண்டு கிடந்ததால் என்னைச் சுற்றி இசையும் இருந்தது. பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு, கோயில் கொடை அறுவடைப் பாட்டு, வில்லுப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என எங்காவது ஒரு மூளையில் இசை ஒலித் துக் கொண்டே இருக்கும். என்னைச் சுற்றி இருந்த நண்பர்களும் இசை ஆர் வலர்களாக இருந்ததால் அடிக்கடி இசை குறித்துப் பேசுவோம். எனது குருநாதர் சி.சு.மணி ஒருமுறை, ‘தமிழிசையைப் பற்றி மிகச் சிலர்தான் ஆய்வு செய்திருக் கிறார்கள். நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுங்களேன்’ என்றார்.

தமிழிசை பேரகராதி உருவாக அதுதான் எனக்கு உந்துதல். மதுரை எனக்குப் பிடித்தமான ஊர். அதனால், பணி ஓய்வுக்குப் பிறகு மதுரையிலேயே செட்டிலாகி விட்டேன். இங்கே எனக்கு இசைத்துறை நண்பர்கள் நிறையப் பேர் பழக்கமானார்கள். தமிழிசை சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. ஸ்தாயி, ஸ்வரம் போன்ற வடமொழிச் சொற்கள் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது.

ஒருகாலத்தில் இந்தியா முழுக்க சுமார் 500 இசைக் கருவிகள் இருந் திருக்கின்றன. இதில் 300 கருவிகள் தமிழகத்துக்குச் சொந்தம். இவை எல்லாம் அழிந்து தமிழ் இசைக் கருவிகள் மிகச் சொற்பமான அளவே புழக்கத்தில் உள்ளன. சில இடங்களில் தமிழிசை வாத்தியங்கள் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசிக்கக் கூட அடுத்த தலை முறைக்கு ஆள் இல்லை.

இதேபோல், ஒரு காலத்தில், தமிழில் 12 ஆயிரம் ராகங்கள் இருந்தன. 2000 ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த இசை சார்ந்த மரபுகளில் பெரும் பகுதியை கடந்த 100 ஆண்டுகளில் இழந்திருக்கிறோம். இதற்கும் காரணம் உலகமயமாக்கல்தான். இன்றைக்கு கிராமங்களில் தாலாட்டுப் பாட ஆள் இல்லை. ஒப்பாரி வைக்கவும் கோயில்களில் கும்மிப் பாட்டுப் பாடவும் கூலிக்கு ஆட்களை தேட வேண்டிய அவலநிலை.

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருக்கும் இவை எல்லாம் ஆவணப்படுத்தி வைத்தால்தான் அழியாமல் இருக்கும். இந்த நோக்கத்துடன் ஏழாண்டுகளுக்கு முன்பு, ’இன்னிசை அறக்கட்டளை’ஒன்றை நானும் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கினோம். இப்போதைக்கு, தமிழ் ராகங்கள் நூறை ஆடியோ சி.டி-யாக தயாரித்திருக்கிறோம். அடுத்த மாதம் அதற்கான வெளியீடு இருக்கிறது. இனி, இந்த நூறு தமிழ் ராகங்களை யாராலும் அழிக்க முடியாது. இதேபோல், 50 தமிழ் இசைக் கருவிகளை செய்யும் முறை, வாசிக்கும் முறை மற்றும் பழுதுநீக்கும் முறைகளுக்கான செய்முறை விளக்கத்தை வீடியோ சி.டி-யாக தயாரிக்கும் பணியில் இறங்கி இருக்கிறோம். இதைச் செய்து முடித்துவிட்டால் 50 தமிழிசை கருவிகளை எதிர்கால சந்ததிக்கு காத்துக் கொடுத்த பேரைப் பெறுவோம்’’ - மகிழ்ச்சி ததும்பச் சொல்கிறார் மம்மது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x