Published : 15 Dec 2014 04:28 PM
Last Updated : 15 Dec 2014 04:28 PM

யாரையும் காயப்படுத்தாத நாளிதழ்: கார்த்தி

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வாசகர் திருவிழா நடந்து வருகிறது. கோவையில் தொடங்கிய வாசகர் திருவிழா, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 12 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 13-வது வாசகர் திருவிழா, சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரி வளாக அரங்கில் நேற்று சிறப்பாக நடந்தது.

விழாவில், சென்னை உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், சட்டம் தொடர்பான நூல்களின் எழுத்தாளருமான கே.சந்துரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பிரபல இலக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர். ஏராளமான வாசகர்கள், விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வாசகர் திருவிழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது: 'தி இந்து' தமிழ் நாளிதழ் வந்து ஒரு வருடத்தை கடந்து முக்கியமான விழாவாக, சந்தோஷமான நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு பேசுவதில் பெருமைப்படுகிறேன்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, 'தி இந்து'வை (ஆங்கிலம்) படி, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என சொல்வார்கள். தலைப்பு செய்தியை படித்துவிடுவேன். 'மேலே படி' என அப்பா கூறுவார். ஒரு வாக்கியம் படிக்கும்போது, 10 வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. உடனே டிக் ஷனரியை பார்ப்போம்.

இப்போது தமிழ் இந்து, ஒரு வருடத்தை தாண்டி சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. எந்த அரசியல் கட்சியையும் சாராமல், எந்தவொரு ஜாதி, மதம் சாராமல் செயல்பட்டு வருகிறது. பொதுவாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் சினிமா நியூஸ் அதிகம் படிக்க முடியாது. எப்போதாவது ஒரு செய்தி வந்தால், குறைந்தது 20-க்கும் மேற்பட்டோர் குறுஞ்செய்தி அல்லது இ-மெயில் அனுப்புவார்கள். ஆனால், இப்போது இந்து தமிழில் சினிமா செய்திகள் நடுநிலையோடு வருகிறது. யாரையும் காயப்படுத்தாமல், மற்றவர்களின் சொந்த விஷயங்களில் நுழையாமல், மிக அழகாக செய்தி தருகின்றனர். அதுபோல, விமர்சனங்களையும் கொஞ்சம் பயந்து பயந்துதான் படிப்போம். 'இந்து'வின் தரத்துக்கு படம் எடுக்க நிறைய கதைகள் எழுத வேண்டும். ரசிகர்களும் அந்த அளவுக்கு வளர வேண்டும். வாசகர்களின் தரத்தை உயர்த்துவதில் 'தி இந்து' தமிழ் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் 24 மணி நேரமும் செல்போனில்தான் கழிந்து கொண்டிருக்கிறது. நான் செல்போன் பயன்படுத்துவதைப் பார்த்து, என் மகளும் 'ஐ…பா..ஐ..பா..' என கேட்கிறாள். தொழில்நுட்பத்தை தவிர்க்க முடியவில்லை. நானெல்லாம் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிவிட்டேன். 24 மணி நேரமும் செய்திகளையும் தகவல்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இது ஒவ்வொரு முடிவையும் தேர்ந்தெடுக்க வைக்கிறது.

பள்ளிகளுக்கு அடுத்து ஊடகங்களுக்குதான் மிகப் பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஊடகங்களில்தான் நிறைய தகவல்களைப் பெறுகிறோம். பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் சரி, ஊடகங்களில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் சரி, நிறைய பொறுப்பு இருக்கிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஊடகங்களில் மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டுவதில் பத்திரிகைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அது நடுநிலையாக இருக்க வேண்டும். இன்றைக்கு 'தி இந்து' தமிழ் அதுபோல் இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரையும்போல டிஆர்பி ரேட்டிங்கையும், எண்ணிக்கை என்ற இலக்கையும் சொல்லாமல் தரம் இப்படித்தான் இருக்கும். இப்படி இருந்தால் மக்கள் நிச்சயம் வாங்குவார்கள் என தரத்தை மட்டுமே தொடர்ந்து கடைபிடிப்பதால், 'தி இந்து' மீது பெரிய நம்பிக்கை வருகிறது. எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த ஊக்குவிப்பாக 'தி இந்து' தமிழ் நாளிதழ் இருக்கிறது. நாளைக்கு நானே ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என நினைத்தாலும் அது இந்து மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். எந்த விஷயம் செய்தாலும், 'இந்து'வின் தரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x