Last Updated : 03 Jul, 2019 12:00 AM

 

Published : 03 Jul 2019 12:00 AM
Last Updated : 03 Jul 2019 12:00 AM

தமிழகத்தில் 5 லட்சம் விவசாய கிணறுகள் வறண்டன: மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் தராததால் நிலத்தடி நீர்மட்டம் 10 மீட்டர் வரை சரிவு

தமிழகத்தில் 5 லட்சம் பம்புசெட் விவசாயக் கிணறுகள் வறண்டதால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 41,127 கண்மாய்கள் மூலம் 3.02 லட்சம் ஹெக்டேர்,18,72,088 பம்புசெட் விவசாயக் கிணறுகள் மூலம் 15.54 லட்சம் ஹெக்டேர், 2,239 வாய்க்கால்கள் மூலம் 5.27 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் பம்புசெட் விவசாயக் கிணறுகள் மூலமே 65.16 சதவீதம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் கிணற்றுப் பாசனம் மூலம் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, பயறு, பூ வகைகள்போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் தொடர்ந்து 3 ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துவிட்டது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் பம்புசெட் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. மற்ற கிணறுகளிலும் 2 முதல் 3 மணி நேரமே தண்ணீர் கிடைப்பதால், ஒரு ஏக்கருக்குக்கூட நீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.

கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள பம்புசெட் கிணறுகளில் மட்டுமே ஓரளவு தண்ணீர் உள்ளது. அவற்றிலும் தொடர்ந்து தண்ணீர் எடுத்து வருவதால் வறண்டு போகும்நிலை உள்ளது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் விவசாயக் கிணறுகள் வறண்டு, பல லட்சம் ஏக்கர் தரிசாகவிடப்பட்டதால் உணவு உற்பத்திகடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: வரத்துக் கால்வாய், நீர்நிலை ஆக்கிரமிப்பால் கண்மாய்கள் மூலம் நடைபெறும் சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதேசமயம் கிணறுகள் மூலம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதிலும் சில ஆண்டுகளாக மழை பொய்த்ததால் கிணறுகள் வறண்டு சாகுபடி பரப்பு சரிந்து வருகிறது என்றார்.

நிலத்தடி நீர்மட்டம்

இந்நிலையில், தமிழகத்தில் 5 ஆண்டுகளாக தொடர் வறட்சி, மணல் கொள்ளை, கானல் நீரான மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளில் 10 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. பொதுப்பணித் துறை நிலத்தடி நீர் பிரிவு சார்பில் நிலத்தடி நீர்மட்டம் மாதம்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் தரைமட்டத்தில் இருந்து கிணறுகளின் நீர்மட்டம் எவ்வளவு தூரத்தில் உள்ளது எனக் கணக்கிடப்படுகிறது.

கடந்த மே மாத நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 6.47 மீ. ஆக உள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் 5.89, திருவண்ணாமலை 10.37, வேலூர் 10.77, தருமபுரி 13.80, கிருஷ்ணகிரி 9.28, கடலூர் 7.51, விழுப்புரம் 9.7, தஞ்சை 3.78, திருவாரூர் 5.79, நாகப்பட்டினம் 3.4, திருச்சி 7.78, கரூர் 7.15, பெரம்பலூர் 13.77, புதுக்கோட்டை 8.87, அரியலூர் 6.59, சேலம் 12.47, நாமக்கல் 13.88, ஈரோடு 9.38, கோவை 14.11, திருப்பூர் 10.98,நீலகிரி 3.54, திண்டுக்கல் 11.23, மதுரை 8.48, ராமநாதபுரம் 4.87, சிவகங்கை 9.55, தேனி 9.50, தூத்துக்குடி 6.78, நெல்லை 6.89, விருதுநகர் 10.88, கன்னியாகுமரி 6.99 மீ. ஆக உள்ளது.

2011 டிசம்பரில் பெரம்பலூரில் 3.39 மீ. ஆக இருந்த நிலத்தடி நீர்மட்டம், 7 ஆண்டுகளில் 10 மீ. வரை குறைந்துள்ளது. தருமபுரி, திருவண்ணாமலையில் 8 மீட்டரும், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம் மாவட்டத்தில் 7 மீட்டரும், வேலூர், சேலம், கோவையில் 6 மீட்டரும், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் 5 மீட்டரும் சரிந்துள்ளன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x