Published : 09 Aug 2017 09:29 am

Updated : 09 Aug 2017 09:29 am

 

Published : 09 Aug 2017 09:29 AM
Last Updated : 09 Aug 2017 09:29 AM

நாடக உலா: ‘யுகபுருஷ் – மகாத்மாவின் மகாத்மா’

ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற அகிம்சையைக் கையில் எடுத்தவர் காந்தி. துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் தவிடுபொடியாக்கி பல நாடுகளில் தங்கள் கொடியைப் பறக்கவிட்ட இங்கிலாந்துக்கு, வெற்று உடம்போடும் அரை நிர்வாணத்துடனும் அகிம்சையைத் தூக்கிப்பிடித்த காந்தியையும் அவரது வழியில் போரிட்டவர்களையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உலகத்தையே வியந்து பார்க்கவைத்த இந்த அறப்போராட்டத்துக்குக் காரணமான காந்தியை ‘மகாத்மா’ என்று நாடே போற்றியது.

அகிம்சையை காந்தி தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தவர் ராஜ்சந்திரஜி. இவர்தான் காந்தியின் ஆன்மிக குரு. ராஜ்சந்திரஜி – காந்தி இடையே நேரடியாக சில ஆண்டுகளும், கடிதப் போக்குவரத்து மூலமாக ஏறக்குறைய 10 ஆண்டுகளும் நட்பு நீடித்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது ‘யுகபுருஷ் – மகாத்மாவின் மகாத்மா’ நாடகம்.

விருது வென்ற நாடகம்

ராஜ்சந்திரஜியின் 150-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் குஜராத்தி மொழியில் இந்த நாடகம் எழுதப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் அரங்கேற்றும் முயற்சியில், பூஜ்ய குருதேவ் ராகேஷ்பாய் வழிநடத்துதலில் செயல்படும் ஸ்ரீமத் ராஜ்சந்திர மிஷன் ஈடுபட்டுள்ளது. நாடகத்தின் மூல இயக்குநர் ராஜேஷ் ஜோஷி, மூலவசனம் உத்தம் காடா, மூல இசை சச்சின் – ஜிகார். இந்த நாடகம் இந்தி, மராத்தி, கன்னடம், பெங்காலி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இதுவரை 265 நகரங்களில் 750 காட்சிகளை நடத்தியிருக்கிறது.

சிறந்த நாடகத்துக்கான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை வென்றிருக்கும் இந்த நாடகத்தை இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர் என்றார் தமிழ் நாடகத்தின் இயக்குநர் பாம்பே ஞானம். சென்னை, கர்நாடகப் பள்ளி அரங்கத்தில் யுகபுருஷ் நாடகத்தின் தமிழ் வடிவம் சமீபத்தில் அரங்கேறியது.

ஒன்றவைத்த தன்மை

பாரிஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பும் காந்தி, ராஜ்சந்திரஜியை சந்திக்கும் முதல் சந்திப்பில் இருந்து, அவரது சதாவதானி திறமையை அறிதல், ஆன்மிக ஈடுபாடு வரை ராஜ்சந்திரஜியின் கருத்துகள் மகாத்மாவை ஆட்கொண்ட விதத்தை சிறப்பாக நம் கண்முன் கொண்டு வருகிறது நாடகம்.

தர்மத்தை ஒருபோதும் தான் இழக்காமல் இருந்ததற்கு ராஜ்சந்திரஜியின் போதனைகள் எப்படி கைகொடுத்தன என்பதை காந்தியே சொல்லும் உத்தி, நாடகத்தோடு ரசிகர்களை மிகவும் நெருங்க வைக்கிறது.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை அகிம்சை உணர்வோடு போராடியவர்களையே அசைத் துப் பார்த்தது. ‘இனி பொறுமை கூடாது’ என்று காந்தியிடம் மக்கள் கொந்தளித்தார்கள். ‘இந்த நேரத்தில் நான் என்ன செய்வது? அவர்களுக்கு என்ன சொல்வது? வன்முறையைக் கையில் எடுக்க நினைக்கிறார்களே’ என்று காந்தி விசனப்படுவார். அப்போது அவரிடம், “துணியில் படிந்த ரத்தக் கறையை ரத்தத்தால் கழுவ முடியுமா?” என்பார் ராஜ்சந்திரஜி மானசீகமாக. தெளிவுபெற்ற காந்திஜி, அகிம்சையின் வலிமையை மக்களிடம் மீண்டும் வலியுறுத்துவார். இக்காட்சி அற்புதம்!

64 கதாபாத்திரங்கள் கொண்ட இந்த நாடகத்தில் 14 பேரே நடித்தது தனிச்சிறப்பு.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author