Last Updated : 25 Jul, 2017 02:56 PM

 

Published : 25 Jul 2017 02:56 PM
Last Updated : 25 Jul 2017 02:56 PM

புதுச்சேரியில் நீரின்றி வறண்டு வரும் நீர்நிலைகள்

புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதிகளோ, தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகளோ இல்லை. புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்திருந்தன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைந்தன. தற்போது ஏரிகள், குளங்கள் பல காணாமல் போயுள்ளதாக விவசாயிகளே குற்றம் சாட்டுகின்றனர். மீதம் இருக்கும் நீர்நிலைகளும் கடும் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன.

ஏரிகள் பராமரிப்பு இல்லாமல் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ஏரிகள், குளங்களும், அரசின் பாராமுகத்தால் தூர்ந்துபோயும், கழிவுநீர் அடையும் நீர்நிலைகளாகவும் மாறி வருகிறது. இதனால் புதுச்சேரியில் விவசாய பகுதிகளும் குறைந்து வருகின்றன.

கடந்த 1970ல் 48,842 ஹெக்டேர் விளைநிங்கள் இருந்தன. 2000ம் ஆண்டில் 24,329 ஆக குறைந்தது. 2009ல் 17,469 ஹெக்டேரில் இருந்து தற்போது 15 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. கடந்த ஓராண்டாக விவசாயம் சரி வர நடைபெறவில்லை.

புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழக பகுதியிலும், 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும் உள்ளது. ஊசுட்டேரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 540 மில்லியன் கன அடியாகும்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்று வந்த பகுதிகளில் ஊசுட்டேரியும் ஒன்று. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கிய பெருமைமிக்க இந்த ஏரி தற்போது ஏரியின் ஒரு பகுதி குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளும், கழிவு பொருட்களுமாக ஏரியில் மிதக்கின்றன.

எப்போதும் வற்றாத நீர் ஆதாரமாக இருந்து வந்த இந்த ஏரி, போதிய மழையில்லாமலும், தூர்வாரப்படாததாலும் வறண்ட நிலம் போல காட்சியளிக்கிறது.

ஏரிக்கு பெரம்பை, ஒழுகரைமேடு, ஒழுகரை பள்ளம், பொறையூர், கூடப்பாக்கம், கூடப்பாக்கம் மேடு, சேந்தநத்தம் ஆகிய 7 மதகுகள் உள்ளன. இதில் பெரம்பை தவிர இதர மதகுகள் புதுச்சேரி பாசனத்துக்கு உரியவை. அவற்றின் நிலை மிக மோசமானதும் ஏரியின் நிலைக்கு ஓர் காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது ஊசுட்டேரியில் பறவைகள் வேட்டையாடுதல் அதிகரித்துள்ளது. மேலும் மீன்களும் இறந்து மிதக்க தொடங்கியுள்ளது. ஆளுநர் கிரண்பேடி நேரில் ஆய்வு செய்து இதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் புதுச்சேரி விவசாயத்தின் முக்கிய ஏரியான பாகூர் ஏரியின் நிலையும் மோசமாகித்தான் இருக்கிறது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த பாகூர் ஏரி வெட்டப்பட்டது. தென்பெண்ணையாற்றில் வரும் வெள்ள நீர் பாகூர் ஏரிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. பாகூர் ஏரியின் பரப்பு 1,762 ஏக்கராகும். தற்போது, தனியார் ஆக்கிரமிப்பு, அரசின் மெத்தனம் காரணமாக பாகூர் ஏரி சுருங்கி வருகிறது. இது போல் புதுச்சேரியில் உள்ள பரிக்கல்பட்டு ஏரி, மணப்பட்டுஏரி , கிருமாம்பாக்கம் ஏரி போன்றவை தூர்ந்து, வறண்டு வருகிறது.

என்ன காரணம்?

எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஏரிகள், குளங்கள் புதுச்சேரியில் காய்ந்து போய் கிடப்பது தொடர்பாக விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:

புதுச்சேரியில் மட்டும் 127.5 கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்களை நீர்பாசனக் கோட்டம் பராமரிக்கிறது. இதைத்தவிர செஞ்சி ஆறு, பெண்ணையாறு, குடுவையாறு, பம்பையாறு, மலட்டாறு என 82 கிமீ. நீளமுள்ள ஆற்றங் கரைகளும் நீர்பாசன கோட்ட பராமரிப்பில் உள்ளன.

river dry droughjpgகடும் வறட்சி காரணமாக வறண்டு தரிசு நிலம் போல் காட்சியளிக்கும் கிருமாம்பாக்கம் ஏரி.

புதுச்சேரியானது தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் விழுப்புரம், கடலூர் பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்கு சென்று தேங்கும் வகையில் நீர் வரத்து வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. பாசன வாய்க்கால்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் மூலம் நீராதாரம் வீணாகாமல் பாதுகாக்கப்பட்டது.

தற்போது இந்த பாசன வாய்க்கால்கள் இருந்த சுவடுகள் தெரியாமல் மாயமாகி வருகின்றன. பல இடங்களில் வாய்க்கால்கள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, அவர்களின் சொத்தாகி விட்டன. மேலும் மழையும் இல்லாதது முக்கியக் காரணம்.

விவசாய சங்கங்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் 2010-11ம் ஆண்டின் அரசு புள்ளிவிவரப்படி 4,558 வாய்க்கால்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகூர் சித்தேரி வாய்க்கால், பங்காரு வாய்க்கால், மணமேடு, கடுவணூர் இருந்து வரும் ஊரல் குட்டை வாய்க்கால், ஊசுட்டேரி ஏரி வாய்க்கால், தொண்டமானத்தம் ஏரி வாய்க்கால், கூனிச்சம்மேடு பழைய, புதிய வாய்க்கால்கள், திருக்கனூர், மங்களம், கோர்காடு, நெட்டப்பாக்கம், வாதானூர் ஆற்று வாய்க்கால்கள் இவை நீர் வரத்திற்கு வித்திட்டவையாக விளங்கின.

ஆனால், இவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே கண்ணுக்கு தென்படுகிறது. முதலில் அரசு புள்ளி விவரப்படி வாய்க்கால்கள் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x