Last Updated : 27 Jul, 2017 03:29 PM

 

Published : 27 Jul 2017 03:29 PM
Last Updated : 27 Jul 2017 03:29 PM

கலாம் நினைவு: பாம்பன் பாலமும் நிறைவேறாத கனவும்..

மேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ல் ஏற்பட்ட மிகக் கடுமையான புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல்நீர் நிலையாக ஏற்பட்டு ராமேசுவரம் தனித் தீவாக உருவானதாக தமிழக அரசால் 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“கி.பி.1639-ல் திருமலை நாயக்கரின் தளபதி இராமபையன் மற்றும் தளவாய் சேதுபதி இடையே போர் நடந்தது. அப்போது, பாம்பனில் தளவாய் சேதுபதி  ஒளிந்து கொண்டார். அவரைப் பிடிக்க மண்டபம் பாம்பன் இடையே தனது படை வீரர் களைக்கொண்டு ஒரு பாலம் கட்டி சென்று தளபதி இராமபையன், தளவாய் சேதுபதியை கைது செய்துள்ளார். இவ்வாறு மண்டபம் பாம்பன் இடையே முதன்முதலாக தளபதி இராமபையனால் சிறிய அளவிலான ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரே இரண்டாவதாக ஆங்கிலே யர்களால் இப்போது உள்ள ரயில் பாலம் கட்டப்பட்டது.

கால்வாய் முதல் பாலம் வரை

கி.பி.1837-ல், பாம்பனுக்கு அருகே கடலில் இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி 12 அடி அகலமுள்ள படகுகள் செல்ல வழி வகுத்தனர். பின்னர் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே கீழே கப்பலும் மேலே ரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியா வின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்கு வரத்து நடத்துவதென்றும் கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது.

கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை முடிவடைந்தது. 40 அடி நீளமுள்ள 145 தூண் களைக் கொண்ட இந்த பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும்.

இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் இந்தப் பாலம் மணற்கல்லுடன் கூடிய பவளப்பாறையில் 6740 அடி நீளத்துடன் கட்டப்பட்டி ருக்கிறது. இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடிதான்.  கப்பல்கள் செல்ல வழிவிடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம்  கட்ட 4,000 டன் சிமெண்ட் 1,36,000 கனசதுரஅடி களி மண், 1,800 கனசதுரஅடி மணல், 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளன.

50 ஆண்டு பாலம்

இப்பாலத்தில் முதல் ரயில் சேவை 1914 பிப்ரவரி 24-ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தி லிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங் களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காகவே ஆரம்ப காலத்தில் பெருமளவில் இப்பாலம் பயன்பட்டது. சென்னையிலிருந்து தனுஷ்கோடிவரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலை மன்னருக்கு சிறு கப்பல் மூலம் சென்றனர். அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு ரயில் சேவை அமைக்கப்பட்டது.

இதை ‘போட்  மெயில்’ சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர். 1964-ம் ஆண்டு தனுஷ் கோடியை புயல் தாக்கியபோது இப்பாலம்  சேதமடைந்தது. உடனே 45 நாள்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007-ல் மதுரை முதல் ராமேசுவரம்வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு அகல ரயில் பாதையாக  நமது பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது.

கனவு நாயகனின் கோரிக்கைகள்

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறை வுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா கடந்த 28.01.2014 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம், “தமிழ்நாட்டில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம்  ஐராவதீஸ்வரர் கோவில்,  கங்கை கொண்ட சோழபுரம் கோவில்,  மகாபலிபுரம் சிற்பங்கள் பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. இந்திய ரயில்வேயின்  நீலகிரி (ஊட்டி) ரயில், டார்ஜிலிங் இமாலய ரயில் மற்றும் கல்கா-சிம்லா ரயில் ஆகியவற்றுக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

அதுபோல பாம்பன் ரயில் பாலத்தையும் யுனெஸ்கோ பாரம்பரிய நினை வுச் சின்னமாக அறிவிக்க மத்திய ரயில்வேத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ஒரு புதிய தினசரி ரயிலை இயக்க வேண்டும். அதுபோலவே ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீனவர்கள் மீன்களை கொண்டு செல்வதற் காக பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும்” என்கிற கோரிக்கைகளை வைத்தார்.

கனவு நாயகனின் கனவு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x