Published : 22 Jul 2017 09:03 AM
Last Updated : 22 Jul 2017 09:03 AM

ஜல்லிக்கட்டுக்காக நடத்தியதுபோல ‘நீட்’ தேர்வுக்கு அனைவரும் போராட வேண்டும்: பாமக உண்ணாவிரதத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகி கள், தொண்டர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.எஸ்.ராஜகோபால் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது அன்பு மணி ராமதாஸ் கூறியதாவது:

நீட் தேர்வானது தமிழகத்துக்கு, சமூக நீதிக்கு, கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. இதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால்தான் அந்த மசோதாக்கள் முழுமை அடையும். இதனால், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, மசோதாக்களை குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். குடியரசுத் தலைவரை சந்தித்தும், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்குமாறு வேண்டினேன். தன்னிடம் வந்தால் கண்டிப்பாக அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார்.

கடந்த ஆண்டு 3,400 மருத்துவ இடங்களில் 3,300 இடங்கள் சமச்சீர் பாடத்திட்ட மாணவர்களுக்கும், எஞ்சிய இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் கிடைத்தது. ஆனால், தற்போதைய நிலை நீடித்தால் 3,337 மருத்துவ இடங்களில் 3,000 இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்குப் போய்விடும். எஞ்சிய இடங்கள் மட்டுமே சமச்சீர் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்கும்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் போல, நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x