Published : 25 Jul 2017 10:15 AM
Last Updated : 25 Jul 2017 10:15 AM

எலாயஸ் கெனட்டி 10

நோபல் பெற்ற பல்கேரிய படைப்பாளி 

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பல்கேரியாவைச் சேர்ந்த படைப்பாளியான எலாயஸ் கெனட்டி (Elias Canetti) பிறந்த தினம் இன்று (ஜூலை 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பல்கேரியாவில் ரூஸ் என்ற இடத் தில் (1905) பிறந்தார். தந்தை வியாபாரி. 1911-ல் குடும்பம் இங்கி லாந்தின் மான்செஸ்டரில் குடியேறி யது. 1912-ல் தந்தையின் திடீர் மறைவால், தாய் தன் குழந்தை களை அழைத்துக்கொண்டு வியன்னா சென்றார். மகனுக்கு அவரே ஜெர்மன் மொழி கற்றுத் தந்தார்.

* ஏழு வயது முடிவதற்குள் ஜெர்மன் மட்டுமல்லாமல், பல்கேரிய மொழி, ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளையும் பேசத் தொடங்கிவிட்டார் கெனட்டி. யூதர்களின் பொது மொழியான லாடினோ மற்றும் ஹீப்ரூவும் அறிந்திருந்தார். குறிப்பாக ஜெர்மன் மொழியை ஆழமாகக் கற்றதோடு அதில் நிபுணத்துவமும் பெற்றார்.

* குடும்பம் 1916-ல் ஜூரிச்சில் குடியேறியது. ஆரம்பக் கல்வியை ஜூரிச்சிலும், உயர்நிலைக் கல்வியை ஃபிராங்பர்ட்டிலும் பயின்றார். 1924-ல் வியன்னா சென்றவர், குடும்பத்தினரின் விருப்பத்தால், வியன்னா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார். 1929-ல் அதில் முனைவர் பட்டமும் பெற்றார்.

* ஆனால், இவர் வேதியியலாளராகப் பணிபுரியவே இல்லை. தத்து வம், இலக்கியத்தில்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அங்கி ருந்த இலக்கிய வட்டாரங்களோடு சுலபமாக அறிமுகமும் கிடைத்தது. இதையடுத்து, நிறைய எழுத ஆரம்பித்தார். தனது எழுத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக முழு நேர எழுத்தாளராக மாறினார்.

* குழந்தைப் பருவ நினைவுகள், ஜெர்மனி ஆதிக்கத்துக்கு வியன்னா உட்படுவதற்கு முந்தைய காலக்கட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி 3 தொகுப்புகளாக வெளிவந்த இவரது நூல் உலகப்புகழ் பெற்றது.

* அரசியலுக்காகவும், மதத்துக்காகவும் கூட்டமாக இருக்கும்போது மக்களின் வன்முறை நடவடிக்கைகள், தனி மனித நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு மாறுபடுகின்றன என்பது குறித்து ‘கிரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற நாவலில் விரிவாக எழுதினார். பல நாடுகளில் வசித்தபோது கிடைத்த அனுபவங்கள், அரசியல், சமூகம் குறித்த இவரது கண்ணோட்டங்கள் ஆகியவையே இவரது படைப்புகளில் பெரும்பாலும் இடம்பெற்றன.

* 1938-ல் வியன்னா, ஜெர்மனியுடன் இணைக்கப்பட்ட பிறகு, யூதப் பின்னணி காரணமாக அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். 1952-ல் பிரிட்டன் குடியுரிமை பெற்றார். 1970 வரை பிரிட்டனில் வசித்தார்.

* கொடூர அதிகார அரசியல் விளைவாக நடந்த உலகளாவிய யுத்தம் குறித்த நாவல்களை எழுதினார்.

* தொடர்ச்சியாக ஏராளமான நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், பயண நூல்கள், நினைவுச் சித்திரங்களை எழுதிக் குவித்தார். பெரும்பாலும் ஜெர்மன் மொழியிலேயே எழுதினார். இவரது பெரும்பாலான படைப்புகள் ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

* தன் வாழ்நாளின் இறுதி 20 ஆண்டுகள் பெரும்பாலும் ஜூரிச்சில் வசித்தார். 1981-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். பிரிக்ஸ் சர்வதேச விருது, கிராண்ட் ஆஸ்திரிய அரசு விருது, பவேரியன் கவின்கலை அகாடமி விருது, ஆஸ்திரிய கலை, அறிவியல் அமைப்பின் விருது என ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றார்.

* மான்செஸ்டர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங் கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. நாவல், நாடகம், நினைவுச் சித்திரம், அல்புனைப் படைப்பு என இலக்கியத்தின் பல்வேறு களங்களில் முத்திரை பதித்த எலாயஸ் கெனட்டி 89-வது வயதில் (1994) மறைந்தார். -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x