Last Updated : 08 Feb, 2014 01:29 PM

 

Published : 08 Feb 2014 01:29 PM
Last Updated : 08 Feb 2014 01:29 PM

கோவை: இலவச நலத் திட்டங்கள்; பயன்படுத்த ஆளில்லை!

ஒரு குழந்தையின் செவித்திறன் பாதிப்பே அந்த குழந்தையை வாய்பேச முடியாதபடி மாற்றுகிறது. பேசும் சப்தம் கேட்கும் போதுதான், நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை குழந்தைக்கு ஏற்படும். உச்சரிப்புகள் கேட்காதபோது ஒரு குழந்தை சைகையை நாடுகிறது. நிரந்தர பாதிப்புகள் வேறு. ஆனால், இதுபோன்ற குறைபாடுகள், கேட்கும் திறனைப்பொறுத்து நிச்சயம் மீட்கப்பட முடியும்.

ஒவ்வொரு பிறந்த குழந்தையின் செவித்திறனையும் தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களது செவித்திறனை அறியமுடியும் என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள். இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு உள்ளேயே செவித்திறன் ஆய்வு மையமும், பேச்சுப் பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2013, மே 13ம் தேதி காது கேளாத இளம் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை ஆய்வு மையம் துவங்கப்பட்டது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமான காதுகேட்கும் திறனை அறிய இந்த சோதனை மையம் ஒரு அரிய சேவை மையமாக உள்ளது. இங்கு கேட்கும் திறன் அறியும் கருவி, ஒலி அலைகள் மூலம் கேட்கும் திறன் அறியும் கருவி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்புப் பயிற்சி பெற்ற கேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறன் கண்டறியும் வல்லுநர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.இதுகுறித்து ஒலியியல் வல்லுநர் ஸ்வர்ணபவானி கூறுகையில், குழந்தையின் கேட்கும் திறன் குறைபாட்டை பிறந்த உடனே கண்டுபிடிப்பது கடினம். ஆனால், இந்த ஆய்வு மையத்தில் அதற்கான சாத்தியம் உள்ளது.

குடும்பத்தில் காது கேளாதோர் இருப்பின் குழந்தைகளுக்கு கர்ப்பத்திற்கு முன்பும் பின்பும் பிரச்சினைகள் ஏற்படும். அந்த குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவாக இருக்க வாய்ப்புண்டு. அதை இங்கு இலவசமாக சோதனை செய்துகொள்ள முடியும்.

பேச்சுத்திறனுக்கு அடிப்படை, கேட்கும் திறன் என்பதால், ஆரம்ப நிலையிலேயே செவித்திறனை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். குழந்தைக்கு எந்த வகை காது கேட்கும் கருவி தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் பேச்சுத்திறன் குறைபாடே இல்லாமல் செய்யலாம். தெளிவற்ற உச்சரிப்பு, திக்குவாய், ஆட்டிசம், மன வளர்ச்சி குறைபாடு, பிளவுபட்ட உதடுகளால் உச்சரிப்பில் சிரமம், நாட்பட்ட பேச்சு குறைபாடு மற்றும் மொழிப் பிரச்சினை ஆகியவற்றைக் கூட இங்கு சரிசெய்ய முடியும்.

இங்கு ரூ.12 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள மொழிப் பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி மையம் அதிநவீன எந்திரங்களுடன் அனைவருக்கும் பயனளிக்க காத்திருக்கிறது. ஆனால், இங்கு வரும் ஆட்களின் எண்ணிக்கையோ மிகவும் சொற்பம். மாதத்திற்கு அதிகபட்சம் 6 பேர் வரை செவித்திறன் ஆய்வுக்கும், 10க்கும் குறைவான குழந்தைகள் பேச்சு பயிற்சிக்கும் வருகின்றனர்.

இத்துடன், இங்குள்ள உடற்பயிற்சிக்கூடம், ஏராளமான மாற்றுத்திறனாளிகளின் பயிற்சிக்குப் பயனளித்து வருகிறது.பழைய கட்டிடம், மிகச்சிறிய இடம் என்றாலும் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எடுத்த எடுப்பில் தனியார் மருத்துவமனைக்கு ஓடும் பொதுமக்கள், அரசின் திட்டங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். அப்படி அனைவரும் இங்கு வந்தால் நிச்சயம் தனிப்பிரிவாகக் கூட இந்த ஆய்வு மற்றும் பரிசோதனை மையம் செயல்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் துறை அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x