Published : 10 Nov 2014 18:08 pm

Updated : 10 Nov 2014 18:08 pm

 

Published : 10 Nov 2014 06:08 PM
Last Updated : 10 Nov 2014 06:08 PM

மாணவர்களிடம் ‘கொள்கை’களைத் திணிக்கக் கூடாது

இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஐ.நா. மாதிரிக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஐ.நா. பொதுச் சபையில் நடப்பதுபோலவே மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள்போல் பங்கேற்று, சர்வதேசப் பிரச்சினைகள்குறித்த விவாதங்களை நடத்தினார்கள்.

உலகம் முழுதும் நடக்கும் இதுபோன்ற ஐ.நா. மாதிரிக் கூட்டங்களால், மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுகிறார்கள். மாணவர்களுக்கு அறிவார்த்தமான வளர்ச்சியையும் ராஜதந்திரம் மற்றும் சர்வதேச அரசியல்குறித்த புரிதலையும் தரும் நிகழ்ச்சி இது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பல்வேறு நாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், சர்வதேசக் கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாமாபாத்தில் வசிக்கும் வெளிநாட்டினரும் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள்.


துரதிர்ஷ்டவசமாக நிகழ்ச்சியில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. சர்வதேசக் கிராம மாதிரியில் இஸ்ரேல் நாட்டு அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு ஜமாத்-இஸ்லாமி என்ற பழமைவாத அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சர்வதேசக் கிராமத்தை மூடாவிட்டால் வன்முறை ஏற்படும் என்று அந்த மாணவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து, தங்கள் பார்வைக்கு வராமல், அனுமதியும் இல்லாமல் இஸ்ரேல் அரங்கம் அமைக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாகத் தெரிவித்தது. ஆனால், காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியிருப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானங்கள்குறித்துப் பேசும் சாத்தியம் இருப்பதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு அனுமதி அளித்ததாக மாணவர்கள் விளக்கம் அளித்தனர். “நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. அந்நாட்டின் பிரதிநிதிகள் போலத்தான் பங்கேற்றோம்” என்று இஸ்ரேல் அரங்கத்தை அமைத்த மாணவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர், இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உயர் கல்வி ஆணையம், “பாகிஸ்தானின் கருத்தாக்கம் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றுதல்” என்ற தலைப்பில் கடுமையான எச்சரிக்கை வாசகங்களைக் கொண்ட சுற்றறிக்கை ஒன்றை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியது. “பாகிஸ்தானின் கொள்கைளைப் பரப்புவதில் பல்கலைக்கழகங்களுக்கும், பிற கல்வி நிறுவனங்களுக்கும் மிகப் பெரும் பொறுப்பு இருக்கிறது. தேசியவாதத்தைப் பரப்புவது, கொள்கை தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களை இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கை சொல்கிறது.

மேலும், “பாகிஸ்தான் கொள்கைகளுக்கு முரணான கருத்தாக்கங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடத்துவது கல்வி நிறுவனங்களின் மதிப்பைக் குலைத்துவிடும். இது எதிர்மறைத் தன்மையையும் குழப்ப நிலையையும் ஏற்படுத்தும். எனவே, பாகிஸ்தான் கொள்கைகள், நிலைப்பாடு ஆகியவற்றுக்கு எதிரான எந்தச் செயலும் நடைபெறாமல் பல்கலைக்கழகங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று சுற்றறிக்கை எச்சரிக்கிறது. இந்தச் சுற்றறிக்கைக்கு, இணையம் மூலம் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ‘டிஜிட்டல் ரைட்ஸ்’ என்ற அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. “துப்பாக்கிகளால் மட்டும் தீமைகள் ஏற்படுவதில்லை. உயர் கல்வி ஆணையத்தின் சுற்றறிக்கை கல்வியின் எதிர்காலத்தைச் சிதைத்துவிடும்” என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது. தவிர, ‘கொள்கை’யை வளர்க்குமாறு பல்கலைக்கழகங்களுக்குக் கட்டளையிடுவது, வட கொரியா, ஸ்டாலின் காலத்து ரஷ்யா, ஹிட்லரின் நாஜி அரசு போன்றவற்றின் செயல்பாடுகளைப் போன்றது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறக் கூடாது.

சிறந்த கல்வி என்பது தர்க்கபூர்வமான அறிவை மாணவர்களுக்குள் விதைப்பது. அரசின் கொள்கைகளை மாணவர்களுக்குத் திணிப்பது அல்ல. எவரேனும் கருத்தாக்கங்களைத் திணித்தால், மாணவர்கள் அதை நிராகரிக்க வேண்டும். வரலாறு, அரசியல், இலக்கியத்தைப் படிக்க வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும். முடிவுகளை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அறிவு விஷயத்தில் அசட்டையாக இருந்து, மூத்தவர்கள் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் பெரிய தவறுகளைச் செய்தவர்கள்; அவர்களது முன்முடிவுகளையும் குறுகிய பார்வையையும் அப்படியே பின்பற்றாதீர்கள். பாகிஸ்தான் சிறந்த நாடாக வேண்டும் என்றால், அதை அடையும் வழி இதுதான்.

Dawn - பாகிஸ்தான் நாளிதழ் தலையங்கம்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author