Published : 18 Mar 2014 08:52 PM
Last Updated : 18 Mar 2014 08:52 PM

கன்னியாகுமரி தொகுதி ‘கை’க்கு `கை’ கொடுக்குமா?

கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு, அதன் கோட்டையான கன்னியாகுமரி எந்தளவுக்கு மக்களவைத் தேர்தலில் கை கொடுக்கப் போகிறதோ என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கே உருவாகி உள்ளது.

காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை, இப்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உண்டு. கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸின் கோட்டையா கவே இருந்து வருகிறது.

63-க்கு 5 மட்டுமே

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தமிழகத்தில் 63 நாயன்மார்களாக காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் இறங்கினர். இருந்தும் கரை சேர்ந்தது என்னவோ பஞ்ச பாண்டவர்களாக வெறும் 5 எம்.எல்.ஏக்கள்தான். அதிலும், 3 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகம் முழுவதும் ஈழப் பிரச்னை கொழுந்து விட்டு எரிந்த போதிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர்,குளச்சல்,விளவங்கோடு என 3 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. நடப்பு மக்களவைத் தேர்தலில், `எப்படியும் கடைசி நேரத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்து விடும்’ என்ற நினைப்பில், இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 28 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால், காங்கிரஸ் தனித்து களம் காண இருப்பதால், `சீட்’ கேட்ட பலரும் இப்போது ஒதுங்கிக் கொண்டனர்.

இப்போது வசந்தகுமார், கிழக்கு மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ், முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் ஆகியோர் மட்டுமே களத்தில் நிற்கின்றனர்.

ஓட்டு பலம்

இத்தொகுதியில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில், தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமையுடன் இருக்கிறது.

சீமான் நெருக்கடி

அண்மையில் நாம் தமிழர் கட்சியினர் ஆற்றூரில் தடம் பதிக்க முயன்ற போது காங்கிரஸ்காரர்கள் அவர்களோடு முட்டிக் கொண்டு நின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையையும் துவம்சம் செய்தனர். இதனால் காங்கிரஸ் மீது, நாம் தமிழர் கட்சியினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய இருக்கும் சீமான், ஆற்றூரில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். இதனால் மேற்கு மாவட் டத்தில் வலுவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு, சீமானின் பிரச்சாரம் நெருக்கடியைக் கொடுக்கும்.

உதயகுமார் போட்டி

கிழக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வலுவாக இருக்கின்றன. காங்கிரஸ்க்கு செல்வாக்கு மிக்க கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குள் மீனவர் வாக்கு வங்கி அதிகம். இதை ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் உதயகுமார் கணிசமாக பிரிப்பார் என்பதால் இந்த முறை காங்கிரஸ் கடுமையான நெருக்கடியை சந்திக்க இருக்கிறது.

பொதுவாகவே கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுக்களையே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக நம்பி வந்தது. இந்த முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்தே பிரச்சாரம் செய்து சென்றுள்ளனர்.

ஸ்டாலின் ஒருபடி மேலே போய் இரு பிஷப்களையும் சந்தித்து சென்றுள்ள நிலையில் சிறுபான்மையினர் ஓட்டுக்களை காங்கிரஸ் பெறுவதிலும் பின்னோக்கி இருக்கிறது. இந்துக்கள் ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி பா.ஜ.க. களம் இறங்குகிறது. தொழிலாளர்கள் ஓட்டுக்களை மார்க்சிஸ்ட் கட்சி பிரித்தெடுக்கும் நிலையில் தனியாக காங்கிரஸ் கட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு வலுவான கூட்டணி இல்லாமை, ஓட்டுக்களை பெறுவதில் சிக்கல் இருப்பதால், கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனு செய்த பலரும் நடுக்கத்தில் இருக்கின்றனர். குமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x