Published : 15 Mar 2014 10:00 AM
Last Updated : 15 Mar 2014 10:00 AM

பாஜக கூட்டணி 229; காங். கூட்டணி 129- என்டிடிவி கருத்து கணிப்பில் தகவல்

மக்களவைத் தேர்தல் குறித்து நாடு முழுவதும் என்டிடிவி சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 229 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளை பாஜக மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெறும் 129 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் இதில் காங்கிரஸ் கட்சிக்கு 106 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், பிஹார் உள்பட அனைத்து மாநிலங்களிலும் என்டிடிவி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

அதிமுகவுக்கு 27 தொகுதிகள்

• 39 தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக அதிகபட்சமாக 27 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுகவுக்கு 10 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

• உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

• மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 32 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பிஹாரில் நிதீஷுக்கு பின்னடைவு

பிஹாரில் நிதீஷ் குமார் தலை மையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 23 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. நிதீஷ் குமார் கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சிக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். இதேபோல சத்தீஸ்கரில் பாஜகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு 2 இடங்களிலும் வெற்றி கிடைக்கும்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அக்கட்சி மொத்தம் உள்ள 26-ல் 23-ல் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

பாஜக ஆட்சியை இழந்த கர்நாடக மாநிலத்திலும் கூட அக்கட்சிக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் 33 இடங்களை பாஜக – சிவசேனை கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x