Published : 29 Jan 2014 07:54 PM
Last Updated : 29 Jan 2014 07:54 PM

கோவை: தொங்கலில் சுத்திகரிப்பு நிலையங்கள்; கேள்விக் குறியாகும் சாலைப் பணிகள்

கோவையில் பாதாளச் சாக்கடை திட்டம் 3 மண்டலங்களில் நிறைவு நிலையை எட்டினாலும், சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வராததால் தோண்டிப் போடப்பட்ட சாலைகளும், மழை நீர் வடிகால் சாக்கடைகளும் இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து கவுன்சிலர்கள் சிலர் கூறியது:

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் சுமார் 380 கோடி நிதியில் பாதாளச் சாக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் 533 கி.மீ.,க்கு பாதாளச்சாக்கடை அமைக்கும் பணிக்கு 3 பிரிவுகளாக ஒப்பந்தங்கள் விடப்பட்டன. கணபதி, பாப்பநாயக்கன் பாளையம், குப்பகோணாம்புதூர், கோவில்மேடு, சாய்பாபாகாலனி, பி.என்.புதூர், செல்வபுரம், ராமகிருஷ்ணாபுரம், பொன்னை யராஜபுரம், தெலுங்குவீதி, ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 300 கி.மீ பாதாளச்சாக்கடைகள் அமைக்கப்பட்டன. கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்புதான் இப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பணிகள் மேற்கொண்ட இடங்களில், பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் வேலைகள் முடிந்துவிட்டாலும் வீடுகளுக்கான இணைப்புப் பணிகள் பல இடங்களில் அந்தரத்தில் உள்ளன. இதற்காக தோண்டி போடப்பட்ட சாலைகளும்,

மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பாதாளப் பள்ளங்களும் அப்படியே கிடக்கின்றன. வேலைகள் முடிந்த இடங்களில் அவற்றுக்கு மூடிகள் போடாமலும், இணைப்பு வேலைகள் நடக்காமலும் உள்ளதால், மக்கள் மாளாத துன்பத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

சமீபத்தில் பாதாளச்சாக்கடை அமைக்க ஆரம்பித்த சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி உள்ளிட்ட பகுதிகளில் 297 கி.மீ.,க்கு தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில், சாலைகள் முழுமையாக தோண்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளிலும், உடனுக்குடன் ரோட்டை சமப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதில்லை. பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவடையும்போது, மாநகரின் 60 வார்டுகளுக்கு உட்பட்ட கழிவுநீரை சுத்திகரித்து குளங்களில் விடுவது என்பது திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், அந்த வேலைகளும் அரைகுறையாகவே முடிக்கப்பட்டுள்ளது.

உக்கடத்தில் வந்து சேரும் முதல் இரண்டு மண்டலங்களின் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ 57 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அது திட்டமிட்ட அளவில் 3 ல் ஒரு பிரிவு கூட சுத்திகரிக்க முடியாததால், வாய்க்கால்கள் வழியே கழிவு நீர் குளத்தை அடைகிறது.

நஞ்சுண்டாபுரத்தில் ரூ.37 கோடியில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அங்குள்ள அப்பார்ட்மெண்ட் மக்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதால் அந்த திட்டம் 2 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது.

ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி அருகில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் ரூ.60 கோடி செலவில் திட்டமிட்டு வேலைகள் துவங்கப்பட்டது. அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. எதிர்ப்பாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி, தொடர்ந்து பணிகள் நடப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த 3 சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே ஒவ்வொரு சாலையிலும், தெருக்களிலும் உள்ள பாதாளச்சாக்கடை குழாய்கள் வழியே கழிவு நீரை விட முடியும்.

உக்கடம் சுத்திகரிப்பு நிலையமே 3ல் ஒரு பங்கு நீரை சுத்திகரிப்பு செய்யமுடியாமல் தொங்கலில் கிடக்க, ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையம் எப்போது முடியுமோ? அப்படி முடிந்தாலும் முழுமையாக திட்டமிடப்பட்ட அளவு கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யுமா என்பது கேள்விக்குறிதான். அதன் நிலை அப்படியென்றால் நஞ்சுண்டாபுரம் சுத்திகரிப்பு நிலைய வழக்கு எப்போது முடிவது? சாதகமான தீர்ப்பு வருமா? என்று யாருக்கும் புரியாத நிலையிலேயே இருக்கிறது. தேர்தல் முடியாமல் பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளுக்கு விமோசனம் கிடைக்காது என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிய போது,

இதுவரை 392 கி.மீ.,க்கு பாதாள சாக்கடையும், 353.84 கி.மீ., தொலைவுக்கு 130 கோடி ரூபாய் செலவில் சாலைகளும் போடப்பட்டு 90 சதவீதம் வேலை முடிந்துள்ளது. மீதி 10 சதவீத வேலைகளுக்குத்தான் மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு எழுதப்பட்டுள்ளது. என்றாலும் பாதாளச்சாக்கடை பணி தொய்வு இல்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x