Published : 25 Jan 2014 10:03 PM
Last Updated : 25 Jan 2014 10:03 PM

வேளாண்மையைக் கைவிடும் ஓசூர் விவசாயிகள்?: யானைகளால் நிகழும் பயிர் சேதம் எதிரொலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டுதோறும் காட்டு யானைகளால் பயிர்களைப் பறி கொடுக்கும் விவசாயிகள் வேளாண் சாகுபடியையை கைவிடும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் காட்டு யானைக் கூட்டம் விளை நிலங்களில் நுழைந்து, பயிர்களைச் சேதப்படுத்துகிறது.

முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளிவந்த யானைகள், கடந்த 10 ஆண்டுகளில் கூட்டம் கூட்டமாக வனத்திலிருந்து வெளியேறி, கிராமப் பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகின்றன. விளை நிலங்களில் நுழையும் யானைகளை விரட்ட கடும் முயற்சி மேற்கொண்டாலும் பிப்ரவரி மாதம் வரை அவை வனப் பகுதிக்கு திரும்புவதே கிடையாது.

சேதமடையும் பயிர்கள்

கிராமப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்துப் பயிர்களுமே யானைகளால் சேதப்படுத்தப்படுகிறது. ராகி, வாழை, தென்னை ஆகியவை யானைகளின் விருப்ப உணவு என்றாலும்கூட, காய்கறிகள், கீரைகள், தானியங்கள் உள்ளிட்ட மற்ற பயிர்களும் யானைகளால் சூறையாடப்பட்டு வீணாகின்றன. யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் விவசாயிகள், அவற்றால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.

கடன் சுமையால் அவதி

பயிர் சேதத்திற்கு அரசு இழப்பீடு வழங்கினாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிலத்தை தயார்ப்படுத்தி, பயிர்களை நடவு செய்து பராமரிக்கும் விவசாயிகள் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவிடுகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் வங்கிகளில் பயிர்க் கடன் வாங்கியும், வீட்டிலிருக்கும் நகைகளை அடமானம் வைத்தும் பணம் திரட்டுகின்றனர். ஆனால், பயிர்களைச் சீரழிக்கும் யானைக் கூட்டத்தால் கடன் சுமை அதிகரித்து, விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர்.

யானைகளால் சேதமடைந்தது போக மீதமிருக்கும் பயிர்களில் இருந்து கிடைக்கும் தானியங்கள், வீட்டின் உணவுத் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. கடன் சுமையைச் சமாளிக்கவும், மற்ற செலவினங்களுக்கும் மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

மாற்றுத் தொழில் தெரியாத நிலையில், பல நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் விவசாயிகள் வேளாண் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் பிரச்சினை யாக யானைகளால் தொடர் பயிர் சேதம் ஏற்படுவதால் பலரும் விவசாயத்தை வெறுக் கத் தொடங்கியுள்ளனர். விவசாயத்தைக் கைவிட்டு, ஏதாவது வேலையில் சேர்ந்து சம்பாதிக் கும் மன நிலையை அடையும் விவசாயிகள், ஓசூர், பெங்களூர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

குறையும் பயிர் சாகுபடி

ராகி மற்றும் சிறு தானிய சாகுபடியில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக, ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் தான் அதிக அளவு தானியங்கள் விளைகின்றன. ஆனால், யானை களால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாததால், பயிர் சாகுபடி அளவு படிப்படியாகச் சரிந்து வருகிறது.

இதுகுறித்து தேன்கனிக் கோட்டை பகுதி விவசாயிகள் கூறுகையில், யானைகளால் பயிர்கள் சேதமடையும் பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறும். தானிய உற்பத்தியும் கணிசமான அளவுக்குக் குறைந்து விடும்.

விளை நிலங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிடில், விவசாயத்தை காப்பாற்ற முடியாது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x