Last Updated : 22 Jan, 2014 07:27 PM

 

Published : 22 Jan 2014 07:27 PM
Last Updated : 22 Jan 2014 07:27 PM

சேலம்: 5000 ஆட்டோக்களால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு அழிவின் விளிம்பில் குதிரை வண்டிகள்

சேலம் மாநகரில் 2000 குதிரை வண்டிகள் வலம் வந்த காலம் மாறி, மாவட்டம் முழுவதும் 5000 ஆட்டோக்கள் கரும்புகை கக்கி, சுற்றுப்புறச் சூழலுக்கு சவால் விட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களால் தினம் தோறும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அழிவின் விளிம்பிற்கு சென்ற வண்டி குதிரைகளும், அதற்கு அலங்காரம் செய்யும் ஒப்பணையாளர்களும் அரிதானவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

ஆட்டோக்கள் அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் 32 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகரப் பகுதியில் மட்டும் 8.30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான டூ-வீலர், கார், ஷேர்-ஆட்டோக்கள், பஸ் என போக்குவரத்து நெரிசலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. பழைய பஸ் நிலையத்தில் இருந்து அம்மாப்பேட்டை, சீலநாயக்கன்பட்டி பை-பாஸ், கொண்டலாம்பட்டி, பொன்னம்மாப்பேட்டை பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

வட்டார போக்குவரத்துக் கழகம் புது பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காடு அடிவாரம் வரையில் செல்லக்கூடிய 50 ஷேர்-ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மற்ற சாதாரண ஆட்டோக்கள் எல்லாம் ஷேர்-ஆட்டோக்களாக மாற்றப்பட்டு விட்டன.

மக்கள் கடும் பாதிப்பு

பழைய பஸ் நிலையத்தில் இருந்து முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம் வழியாக அம்மாப்பேட்டைக்கும், திருச்சி மெயின் ரோடு வழியாக சீலநாயக்கன்பட்டி பை-பாஸூக்கும் நிமிடத்துக்கு 100 ஷேர்-ஆட்டோக்கள் புகைவண்டி போல அடுத்தடுத்து பயணமாகி, சாலையில் நடமாடுபவர்களை திக்குமுக்காட வைக்கின்றன. ஆட்டோ டிரைவர்கள் சட்டென ஆட்டோவை திருப்பியும், நிறுத்தியும் விடுவதால் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

“ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு என தனி ஸ்டாண்டு ஒதுக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பயணிகளை நிறுத்தி ஏற்ற வேண்டும். ஐந்து பயணிகள் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். பொருட்களை ஏற்ற கூடாது” என பல்வேறு விதிமுறைகளை எடுத்துக்கூறி காவல் ஆணையாளர் கூட்டம் போட்டு பேசியது இதுவரை செயல்பாடுக்கு வந்தபாடில்லை.

ஆட்டோக்களால் தினம் தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி கரும்புகை கக்கி செல்லும் ஆட்டோக்கள் ஒரு புறம் என்றால், புகை பரிசோதனை செய்யாமல் அதிகளவு கார்போமோனாக்சைடு வெளியேற்றி, மூச்சு குழாயைப் பதம் பார்க்கும் ஆட்டோக்கள் மறுபுறம். சுற்றுப்புற சூழல் மாசுபாடுக்கு முக்கிய காரணமாய் விளங்கும் ஆட்டோக்கள் மனிதர்களின் நவீன காலத்து எதிரிகள் என்பதை அதிகாரிகள் உணராமல் இருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காலம் மாறிப்போச்சு

சேலம் மாநகரப் பகுதியில் சுமார் 2000 ஆயிரம் ஆட்டோக்களும், மாவட்டப் பகுதியில் 3000 ஆட்டோக்கள் என 5000 ஆட்டோக்கள் சாலைகளில் வலம் வந்து காற்று மாசு, ஒலி மாசு, விபத்து அபாயம், போக்குவரத்து நெரிசல் போன்ற இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சேலம் மாநகரில் குதிரை வண்டிகளின் ஆதிக்கம் இருந்தது. வைக்கோல் மெத்தையில், குதியாட்டம் போட்டு ஓடும் குதிரை வண்டிகளில், மக்கள் பயணித்து மகிழ்ந்தனர். பெட்ரோல், டீசல் விலையேற்றம் கவலையில்லாமல், சுற்றுப்புற மாசுபாடு அச்சமின்றி சுகமான பயணம் கிடைத்தது. குதிரை வண்டியின் வேகம் குறைவு என்றாலும், பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் இருந்தது. சினிமா முதல் அணியும் ஆடை வரை பழமையை நோக்கி பயணிக்கும் நிலையில், வாகனப் பயணத்தில் மட்டும் பழமையின் பக்கம் மக்கள் திரும்ப மறுப்பதால், குதிரை வண்டிகளும், மாட்டு வண்டிகளும் அரிதாகி வருகிறது.

சேலத்தில் பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை தேர் வீதி, தீயணைப்பு நிலையம், நெத்திமேடு, வின்சென்ட், சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி, மணிக் கூண்டு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2000 குதிரை வண்டிகள் இருந்தது. தற்போது, வெறும் 20 வண்டிகள் மட்டுமே இருக்கிறது. செவ்வாய்ப்பேட்டை சந்தப்பேட்டை மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குதிரை வண்டி நிலையம் உள்ளது. பயணிகளுக்கு பதிலாக சரக்குகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து குதிரை வண்டிக்காரர்கள் கூறியதாவது:

மக்கள் ஆதரவு வேண்டும்

தினமும் புல், கோதுமை, கொள்ளு உள்ளிட்ட தீவனத்துக்கு 100 ரூபாய் செலவு செய்யும் குதிரை வண்டிக்காரர்கள், தினமும் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் சம்பாதிக்கின்றனர். ஆனால், ஆட்டோக்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய் வரை நாளொன்றுக்கு சம்பாதித்து கொடுக்கிறது. குறைந்து வரும் குதிரை வண்டிகளால், ரேக்ளா பந்தயத்துக்காக மட்டுமே நாட்டுக் குதிரைகள் வளர்க்கப்படுகிறது. குதிரைகளுக்கு முடிவெட்டி, லாடம் அடித்து அலங்காரம் செய்யும் ஒப்பணையாளர்கள் பலர் இருந்து வந்த நிலையில், தற்போது இருவர் மட்டுமே இருக்கின்றனர்.

சுற்றுப்புற சூழலுக்கு நண்பனாய் விளங்கி வந்த குதிரை வண்டிகள் அழிவின் விளிம்பிற்கு சென்ற விட்ட நிலையில், அத்தொழிலை கைத்தூக்கி விடுவார் ஒருவரும் இல்லை. பாரம்பரிய பொருட்களையும், பழங்காலப் பொருட்களையும் தேடித்தேடி வாங்கி சேகரிக்கும் பொதுமக்கள் மனது வைத்தால் மட்டுமே மீண்டும் இக்குதிரை வண்டிகள் சாலைகளில் நடமாடுவதை பார்க்க முடியும், என்றார் வேதனையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x