Published : 21 Jan 2014 09:34 PM
Last Updated : 21 Jan 2014 09:34 PM

நாகர்கோவில்: களம் இறங்கிய ஆயர்கள்… அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்: தனியார் காடு பாதுகாப்பு சட்டம் விஸ்வரூபம்

விவசாயிகள் வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கோடு, அனைத்து எதிர்க்கட்சிகளும் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கேட்டு கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், இப்போராட்டக் களத்தில் கிறிஸ்தவ பிஷப்களும் குதித்துள்ளனர். இந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம், 1946-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அறிமுகமானது. இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, 1949-ல் மெட்ராஸ் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் என சட்ட வடிவம் பெற்றது. ஜமீன்தார் முறை இருந்த போது, மரங்கள் அழிப்பை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் இச்சட்டம்.

இதுபற்றி விவசாயி ஹென்றி கூறியதாவது:

தொடக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்தன. 1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. 1949ல் இயற்றப்பட்ட இச்சட்டம் குமரியில் நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது. ஏனெனில், இச்சட்டம் இயற்றப்பட்ட போது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தோம்.

சென்னை மாகாணத்தின் கீழ் இருந்த கேரள பகுதிக்கும் இச்சட்டம் அமலில் இருந்தது. அப்பகுதிகள் கேரளத்தில் இணைந்ததும், கேரள அரசு இச்சட்டத்தில் விலக்கு அளித்தது. அதே நேரத்தில் தமிழக அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இச்சட்டத்தை புதிதாக அமல்படுத்தியது.

சொத்தை விற்க முடியாது

1979, 1980, 1982, 2002-ம் ஆண்டுகளில் ஆட்சியரின் அறிக்கை மூலமாக, 75,000 ஏக்கர் பட்டா நிலங்கள், `தனியார் காடுகள்’ என அறிவிக்கப்பட்டன. ஆனால், சிறு குறு விவசாயிகளுக்கு இதுபற்றி அறிவிப்பு கூட செய்யவில்லை. எங்கள் சொத்துக்களை விற்கவோ, கடன் வாங்கவோ முடியாது. இச்சட்டத்தின் கீழ் வரும் சொத்துக்களை உரிமம் மாற்றம் செய்ய, மாவட்ட ஆட்சியர், வன அதிகாரி, வருவாய் அதிகாரி, சுற்றுச் சூழல் பொறியாளர், வட்டாட்சியர் என பலரிடம் அனுமதி பெற வேண்டும். எங்கள் அடிப்படைத் தேவைக்கும், குழந்தைகளுக்கான கல்வி, திருமணம் போன்ற செலவுக்கும் கூட, சொத்தை விற்க முடியாது, என்றார்.

மற்றொரு தரப்பில் வரவேற்பு

அதே நேரத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இண்டேக் அமைப்பை சேர்ந்த மத்திய அரசின் ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி லால்மோகன்,’’குமரி மாவட்டத்தில் இப்போது மழையளவு குறைந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் காடுகள் அழிந்தது தான். அதனால்தான், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இச்சட்டத்தை வரவேற்கிறோம் என்றார்.

மாவட்ட ஆட்சியர் நாகராஜன், “மாவட்டத்தில் இச்சட்டத்தால் பாதிப்பு இருப்பதாக, விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். அவற்றை அரசுக்கு அனுப்பி உள்ளேன். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ளது. குழுவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின், நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இதுதான் மேட்டர்!

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்ட விவகாரத்தின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “குமரி மாவட்டத்தில் தொடர் அறிவிப்பாணைகள் மூலமாக, தோவாளை தாலுகாவில் 2,625 ஹெக்டேரும், கல்குளம் தாலுகாவில் 5,882 ஹெக்டேரும், விளவங்கோடு தாலுகாவில் 2,875 ஹெக்டேருமாக, மொத்தம் 11,383 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்பு

அதில், 8,349 ஹெக்டேர் நிலம் பெரு விவசாயிகளுக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஏராளமான மணல் குவாரிகளும், மணல் குடோன்களும் உள்ளன. பாறைகளும் உடைக்கப்படுகிறது. அவற்றில் இருந்து இயற்கை வளங்களைக் காக்கத்தான், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் அறிமுகமானது.

சில விவசாயிகளுக்கு பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் ஆட்சியரிடம் விண்ணப்பித்தால், அந்த மாதத்திலேயே நிலம் உரிமை மாற்றம் செய்யவோ, மறு நடவு செய்யவோ முடியும். 30 ஆண்டுகளுக்கும் மேல் ரப்பர் சாகுபடி செய்பவர்கள் தாசில்தாரிடமே மனு செய்து தீர்வு பெறலாம்” என்றார் அந்த அதிகாரி.

களமிறங்கிய ஆயர்கள்

தேர்தல் வேளையில், இச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்துவதன் மூலம், விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய, கட்சிகள் பலவும் களமிறங்கி உள்ளன. இவ்வேளையில், கிறிஸ்தவ ஆயர்களும், இச்சட்டத்துக்கு எதிராக களமிறங்கி இருப்பது, ஆளுங்கட்சியினர் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x